தந்தையின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருக்கிறேன்: - அசாத் சாலியின் மகள் கண்ணீர் மல்கினார்
எனதுதந்தை பயங்கரவாதியல்ல, இனவாதத்தையும் மதவாதத்தையும் எதிர்த்து ஐக்கியத்துக்காக குரல் கொடுத்தவர். அவரை ஏன் தேவையற்ற விதத்தில் கைது செய்து தடுத்து வைக்க வேண்டும் என அசாத் சாலியின் மகள் அமீனா அசாத் சாலி கண்ணீர் மல்கக் கேள்வி எழுப்பியுள்ளார். குற்றப் புலனாய்வு பிரிவினரால் எனது தந்தை கைது செய்யப்பட்ட நாளிலிருந்து அவர் எவ்வித ஆதாரமும் உட்கொள்ளாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஆகையால் அவரின் உடல்நிலை நிமிடத்துக்கு நிமிடம் மோசமடைந்து வருகிறது.
அத்துடன் நானும் என் தந்தையின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருக்கிறேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை அசாத் சாலி நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வைத்தியசாலையில் இருக்கும் எனது தந்தையின் உடல் படிப்படியாக மோசமடைந்து வருகிறது. இதற்கு முன்னர் ஒருபோதும் நான் அவரை இப்படிப் பார்த்ததில்லை. நேற்று நானும் எனது தாயாரும் வைத்தியசாலைக்குச் சென்றபோது அவர் தலையில் வெள்ளைப்பட்டி அணிந்திருந்தார். ஏன் என்று கேட்ட போது தலைவலி என்றார்.
சாப்பிடுமாறு கூறிய போது முடியாது என்றார்.
தண்ணீர் குடிப்பதையும் மருந்து குடிப்பதையும் அவர் மறுத்துள்ளார். எனவே தயவு செய்து அவரை விடுவிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
No comments