அரசியலுக்காக மத அடிப்படைவாதத்தை பரப்புவதனை ஏற்றுக்கொள்ள முடியாது: ரில்வின் சில்வா
பெளத்த தர்மம் மனிதர்களை பாதுகாக்கவேண்டுமென்றே போதிக்கின்றது. எனவே, அப்போதனையை கடைப்பிடிக்காது அரசியலுக்காக மத அடிப்படைவாதத்தை பரப்பி மனிதர்கள் அழிவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
பெளத்தம், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் எந்த மத ரூபத்திலும் அடிப்படைவாதம் தலைதூக்கினாலும் அதனை எதிர்க்கின்றோமென்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேலும்தெரிவிக்கையில்,
தமது அரசியல் இருப்பிற்காகவும் ஆட்சியை பிடிப்பதற்காகவும் இலங்கையில் பெளத்த சிங்கள மதவாதம் இன்று மட்டுமல்ல, கடந்த பல தசாப்தங்களிலும் இடம்பெற்றிருக்கின்றன. எனவே, இன்று ஏற்பட்டுள்ள நிலைமை எதுவும் புதியதொன்றல்ல. மக்கள் தத்தமது மதங்களை கடைப்பிடிப்பதற்கான சுதந்திரம் நாட்டில் உள்ளது. ஆனால் அரசியலுக்காக சில சக்திகள் மதவாதத்தை ஊக்குவிக்கின்றன.
மனிதர்களை மதித்து அவர்களை பாதுகாக்க வேண்டுமென்றே பெளத்த தர்மம் போதிக்கின்றதே தவிர, மனிதர்களை அழிக்க வேண்டுமென போதிக்கவில்லை. எனவே, மனித உயிர் அழிவு பெளத்தத்திற்கு எதிரானதாகும்.
நாட்டில் இன்று வடமத்திய மாகாணத்தில் சிறுநீரக நோயால் மக்கள் இறக்கின்றனர், வறுமையால், விரக்தியால் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். எனவே, இம் மக்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மனிதர்களை பாதுகாக்கும் பெளத்த தர்ம போதனையை கடைப்பிடிக்க வேண்டுமே தவிர, மத அடிப்படைவாதத்தை தலைதூக்கச் செய்து உயிர்களை அழிப்பது பெளத்தத்திற்கு விரோதமானதாகும் என்றும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
No comments