பொதுபலசேனா அமைப்பினரால் தாக்கப்பட்டதாக தேரர் குற்றச்சாட்டு
பெளத்த பிக்கு ஒருவர் தனது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை மீறும் வகையில் பொதுபலசேனா அமைப்பினர் தன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இதுகுறித்து வணக்கத்திற்குரிய மாலவ்வே கல்யாண தம்ம தேரர் தெரிவிக்கையில், கடந்த புதனன்று தும்முல்லையில் அமைந்துள்ள பொதுபலசேனாவின் தலைமையகத்திற்கு வெளியே அமைதி வழிப் போராட்டமொன்றை மேற்கொள்ள நான் முயன்ற போது பொதுபலசேனா உறுப்பினர்கள் என்னை இழிவுபடுத்தும் வகையில் தூஷித்ததுடன், என் மீது தாக்குதலை நடத்தினர். அநாதை சிறுவர் சிலரை எனது கவனிப்பின் கீழ் பராமரிப்பதற்கேற்ற வகையில் வீடொன்றை வழங்குமாறு நான் பொதுபலசேனாவிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு பலனேதும் கிட்டாத நிலையிலேயே அந்த அமைதிவழி போராட்டத்தை நான் மேற்கொள்ள முயற்சித்தேன்.
கலப்பலுவாவவில் நான் ஏற்கெனவே வாடகைக்கு எடுத்திருந்த வீட்டை திருப்பி ஒப்படைக்க வேண்டியிருந்ததால் குறித்த அநாதை சிறுவர்கள் நட்டாற்றில் விடப்பட்டிருந்த நிலையில் நான் பொது பலசேனாவிடம் இடமொன்றை தந்துதவுமாறு கோரியிருந்ததுடன், ஆரம்பத்தில் அதனிடமிருந்து சிறிதளவு சாதகமான பதிலொன்று கிடைத்திருந்தது. ஆயினும், அதன் பின்னர் அதுகுறித்து பொதுபலசேனா சிரத்தையெதுவும் எடுக்காமல் அப்படியே இருந்துவிட்டதும் என்றார்.
மேற்படி கோரிக்கை நிராகரிக்கப்பட்டமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக குறித்த தேரரினால் பொதுபலசேனா தலைமைக் காரியாலயத்திற்கு வெளியே நடத்தப்பட்ட அமைதிப் பேரணியை பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொட அத்த ஞானசார தேரர் தடுத்து நிறுத்தியதுடன் தன்னைத் தூஷித்து தன்னைத் தாக்கியதாகவும், சுமார் பத்து நிமிடங்கள் வரை தான் மூச்சையிழந்த நிலையில் கிடந்ததாகவும், அதன் பின்னர் அங்கு விரைந்து வந்த பொலிஸாரினால் தான் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் மேலும் தெரிவித்தார்.
No comments