குற்றவாளிகள் இறைவனின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது
நீதிக்காக போராடும் வஸீமின் மாமா பயாஸ் லத்தீப் சொல்லும் கதை
வஸீம் தாஜுதீன். சென். தோமஸ் கல்லூரியில் தனது கல்வியை ஆரம்பித்தவர்.
பின்னர் கல்கிஸை சென். தோமஸ் கல்லூரியில் கல்வியை தொடர்ந்தவர். பிரபல றக்பி வீரர். வஸீம் தாஜுதீன் சென்.தோமஸ் கல்லூரியின் றக்பி அணியின் உப தலைவராக 2003 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விளையாடியவர்.
அத்துடன் 19 வயதுக்கு கீழ் பட்டோருக்கான பாடசாலை அணியில் அதே ஆண்டு விளையாடியவர்.
இவற்றுடன் அவர் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியவர். அத்துடன் 2008 ஆம் ஆண்டு ஹொங்கொங் செவன் றக்பி அணிக்காகவும் விளையாடியவர். இந் நிலையிலேயே அவர் 2008 ஆம் ஆண்டில் 'ஜனரஞ்சகமான றக்பி வீரர்' என்ற விருதினை வெற்றிகொண்டிருந்தார். இந் நிலையில் ஹெவலொக் கழக அணியின் தலைவராக 2009 ஆம் ஆண்டு தெரிவானார்.
அதன் பின்னர் தாஜுதீன் காயத்துக்கு உள்ளாகினார். இதனால் அவரின் காலில் சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதனால் அவர் மீண்டும் 2012 ஆம் ஆண்டே றக்பி களத்துக்கு வந்தார். இந் நிலையில்தான் இந்த துரதிஷ்டவசமான சம்பவம் கடந்த 2012, மே மாதம் 17 ஆம் திகதி நாரஹேன்பிட்டியில் இடம்பெற்றது.
இந் நிலையில் தற்போது தாஜுதீன் மரணமடைந்தது விபத்தால் அல்ல எனவும், அது ஒரு கொலைச் சம்பவம் எனவும் பரவலாக கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்று வரும் நிலையில் இலங்கையின் பிரபல ஆங்கில வார இதழொன்றுக்கு, தாஜுதீன் விவகாரத்தில் நீதிக்காக போராடும் அவரது மாமா மொஹம்மட் பயாஸ் லத்தீப் வழங்கியுள்ள செவ்வியினை சுருக்கமாக தருகின்றோம்.
தமிழில் : எம்.எப்.எம்.பஸீர்
Q: வஸீம் தாஜுதீனின் மரணம் ' சோகமான விபத்து' என கருதப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. எனினும் தற்போது அது ஒரு கொலை என கூறப்படுகின்றது. எனினும் சிலர் இன்னும் அதை விபத்தாகவே பார்க்கின்றனர். இந் நிலையில் வஸீமின் நெருங்கிய உறவினர் என்ற ரீதியில் இதனை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?
பதில்: வஸீம் தனது குடும்பத்தை மிகவும் நேசித்த ஒருவர். அவர் எமது வீட்டுக்கு அடிக்கடி வந்து போகக் கூடியவராக இருந்தார். ஏனெனில் பாட்டியைப் பார்க்க அடிக்கடி இங்கு வருவார். அவர் எப்போதும் முன்முறுவல் பூத்தவராக இருப்பார்.
ஒருவருடன் மிக குறுகிய நேரத்துக்குள் நட்புக்கொள்ளக் கூடியவர். அவருக்கு ஒருவருடனும் சிறியதொரு முரண்பாடு கூட இருக்கவில்லை. அவர் அவரது வழியில் வாழ்ந்து வந்தவர். அவருக்கு எதிரிகள் என்று எவரும் இருக்கவில்லை.
எனினும் இந்த சம்பவம் இடம்பெற்ற பின்னர் பத்திரிகைகளின் வெளிப்படுத்தல்களை அவதானித்த போது அவர் மீது யாரோ ஒருவருக்கு கடுமையான வெறுப்பு அல்லது கோபம் இருந்திருக்க வேண்டும் என நாம் சிந்தித்தோம்.
ஏனெனில் அவரது கார் மதிலுடன் மோதி தீப்பிடித்ததாக கருதப்பட்ட போதிலும் அது யதார்த்தமாகவோ அல்லது நம்பும் படியாகவோ இருக்கவில்லை.
நாம் அந்த விவகாரம் தொடர்பில் சிறப்புத் தேர்ச்சி உடையவர்கள் இல்லை என்றாலும் பொது அறிவு எம்மிடம் உள்ளது.
Q ஏன் அது ஒரு சாதாரண விபத்து அல்ல என கூறுகின்றீர்?
பதில்:எரிந்த நிலையில் இருந்த வாகனத்தின் புகைப்படங்கள் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருந்தன. அதன்படி காரானது ஒரு பக்கமாக சமனிலை கொண்டிருந்தது. சம்பவம் இடம்பெற்ற சமயம் நாம் எமது குடும்பத்தாருடன் அந்த இடத்துக்கு சென்றோம்.
அப்போது வாகனத்தின் ஒரு சில்லு மட்டும் கழன்று அருகில் உள்ள வாய்க்காலில் இருந்ததை நாம் அவதானித்தோம். காரின் கதவினை உடைத்தே ஜனாஸாவை நாம் வெளியில் எடுத்தோம்.
அதன்பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களே ஊடகங்களில் வெளியாகியிருந்தன. மேலும் அந்த சூழல் விபத்து இடம்பெற்றதை உறுதிப்படுத்தும் அடையாளங்களை வெளிப்படுத்தவில்லை.
அதன் அருகே சிறிய கடை ஒன்று இருந்ததது. எனினும் அதற்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்பட்டிருக்கவில்லை.
உண்மையில் காரானது வேகமாக வந்து மதிலுடன் மோதியிருந்தால் அருகே பல சேதங்களை அது காட்டியிருக்கும். எனினும் அப்படி எந்த அடையாளங்களும் அங்கு இருக்கவில்லை.குறைந்த பட்சம் மோதிய சுவரானது பலமான சேதங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.
கார் விபத்தில் நபர் ஒருவர் எரிந்து மரணித்தமை தொடர்பில் நான் ஒரு போதும் கேள்விப்பட்டதில்லை. அவரது கார் நாரஹேன்பிட்டி சலிகா மைதானத்துக்கு அருகில் மோதி விபத்துக்குள்ளாகியிருந்தது.
எனினும் அவரது பணப்பையும் கையடக்கத் தொலைபேசியும் கிருலப்பனையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. நான் ஒரு விடயத்தை சொல்ல விரும்புகின்றேன்.
வஸீம் ஒரு போதும் பணப் பை மற்றும் தொலைபேசி இல்லாமல் வெளியே செல்ல மாட்டார். அவ்விரண்டையும் அவர் ஒரு போதும் அவர் தனது காற்சட்டைப் பைக்குள்ளும் போடமாட்டார்.
மாற்றமாக அவரது தொலைபேசி அலுமினியம் உறையொன்றிலேயே இருக்கும். தொலைபேசி எரிந்துவிட்டது என்று எடுத்துக்கொண்டாலும் அந்த உறையாவது இருக்க வேண்டும் அல்லவா. ஆனால் அதனையும் காணவில்லை.
Q: வஸீம் விருந்துபசாரம் ஒன்றுக்கு சென்று வரும் போது இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகின்றதே. அது உண்மையா?
பதில்: நாங்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவை நம்புகின்றோம்.
அவர்கள் திறனாக விசாரணைகளை நடத்துவர். எல்லாம் எதிர் காலத்தில் வெளிப்படும். அது வரை நாம் காத்திருக்கின்றோம்.
அவருக்கு நாரஹேன்பிட்டி சாலிகா மைதானப்பகுதிக்கு செல்ல வேண்டிய எந்த தேவையும் இல்லை. அவரது வீடு வெள்ளவத்தையில் உள்ளது. அந்த நாளில் அவர் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றுள்ளதுடன் வீடு திரும்ப முன் நண்பரை கொண்டு போய் அவரது வீட்டில் விட்டுள்ளார்.
Q: அந்த பாதை தொடர்பில் சந்தேகம் உள்ளதா?
பதில்: ஆம்.
அந்த நாள் அவர் பீ.ஆர்.சி.மைதானத்துக்கு முன்னால் உள்ள கட்டிடத்தில் மேல் மாடியில் அமையப்பெற்றுள்ள சுபர் மார்கெட் ஒன்றிலிருந்து 5 லீற்றர் தண்ணீர் போத்தல் ஒன்றினை கொள்வனவு செய்திருந்தார்.
அதற்கான சிட்டை அவரது பணப் பையில் இருந்துள்ளது. அவரை யாராவது பிந்தொடர்ந்து வந்தனரா இல்லையா என்பதெல்லாம் எமக்குத் தெரியாது. சீ.சீ.டி.வி பதிவுகள் அவர் அவரது பாதையில் வாகனத்தைச் செலுத்தி வருவதைக் காட்டுகின்றது. எனினும் அதனுள் எவரேனும் உள்ளனரா இல்லையா என்பது தெளிவாக தெரியவில்லை.
இவையனைத்தையும் வைத்து சிந்திக்கும் போது எமக்கு அது ஒரு விபத்தாக தெரியவில்லை.
Q: சம்பவம் இடம்பெற்ற இடத்தில் அன்றைய தினம் வேறு ஏதாவது வழமைக்கு மாற்றமான விடயங்கள் இடம்பெற்றனவா?
பதில்: இந்த சம்பவத்தின் பின் 24 மணி நேரத்துக்குள் எமது மார்க்க அனுட்டானங்களின் பிரகாரம் ஜனாஸாவை அடக்கம் செய்ய வேண்டிய தேவை இருந்தது. எனினும் எமது வழக்கத்தின் பிரகாரம் இறுதிக் கிரியைகளை தொடர நாம் அனுமதிக்கப்படவில்லை.
அவர்கள் ஜனாஸாவை எம்மிடம் ஒப்படைப்பதில் கால தாமதத்தை கடைபிடித்தனர். வஸீமின் சகோதரி (அவர் ஒரு இராணுவ வைத்தியர்) ஜனாஸாவை அடையாளம் காட்ட சென்ற வேளை தேவை இல்லாமல் பல வழிகளிலும் சிக்கல்களை சந்தித்துள்ளார்.
அவரிடம் இரு தடவைகள் சத்தியக் கடதாசி கோரப்பட்டுள்ளது. எனினும் அந்த நேரம் நாமனைவரும் எமது மார்க்கப் படி இறுதி கிரியைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கோடு இருந்தோம்.
Q: ஜனாஸாவில் குத்துக் காயங்கள், எலும்பு முறிவுகள் அவதானிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அப்போது நீங்கள் அவ்வாறான ஏதேனும் ஒன்றினை அவதானித்தீர்களா?
பதில்: அப்போது வஸீமின் ஜனாஸா தொடர்பில் இறுதி கிரியைகள் இடம்பெற்றது. இதன் போது சில அடையாளங்கள் அவதானிக்கப்பட்டன.
கழுத்துப் பகுதியில் ஆழமான துளை ஒன்று காணப்பட்டது.
நான்கு முன் பற்கள் உடைபட்டிருந்தன. இவ்வாறான விடயங்களை நாம் அவதானித்தோம். ஒரு கால் உடைக்கப்பட்டிருந்தது.
Q: இவ்வாறான காயங்கள் விபத்தில் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லையா?
பதில்: காரில் இருந்து ஜனாஸாவை எடுக்கும் போது நான் அங்கு இருந்தேன். இந்த காயங்கள் விபத்தால் ஏற்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வாகனத்தின் எந்தவொரு பாகமும் அவரது உடலை துளையிட்டிருக்கவில்லை. கார் விபத்துக்கள் நாட்டில் பொதுவாக இடம்பெறுவது குறித்து எமக்கு தெரியும். எனினும் நாம் ஒருபோதும் ஒரு வாகனம் பற்றி எரிந்ததை கண்டதில்லை.
Q: இந்த கேள்விகள் ஏன் இவ்வளவு நாளும் எழுப்பப்படவில்லை?
பதில்: ஒரு நிச்சயமற்ற சூழல் அப்போது நிலவியதால் நாம் இதனை பின் தொடரவில்லை. பின்னர் நம் இது தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொண்டோம். அதனை நாம் பொலிஸாருக்கும் தெரியப்படுத்தினோம். அவர்கள் இதனை சாதாரண வாகன விபத்தாகவே பார்த்தனர்.
Q: அண்மையில் வஸீமின் ஜனாஸா மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. ஜனாஸாவானது சிதைவடையாமல் நல்ல நிலையில் உள்ளதாகவும் விஷேடமாக அது பாதுகாக்கப்பட்டதால் அவ்வாறு இருந்ததாகவும் கூறப்படுகின்றதே. அது உண்மையா?
பதில்: பிரேத அறையில் இருந்து ஜனாஸா எம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் நாம் அதனை வீட்டுக்கு கொண்டு செல்லவில்லை. நாம் அதனை நேரடியாக பள்ளிவாசலுக்கே கொண்டுசென்றோம்.
எங்கள் மார்க்க வழக்கத்தின் படி நாம் ஜனாஸாக்களை வெள்ளைத் துணியால் சுற்றுவோம். பணக் காரர்கள் ஏழைகள் என அனைவருக்கும் பொதுவான அடக்கச் சட்டம் அது. நாம் அனைத்து மார்க்க சடங்குகளையும் செய்தோம்.
எனினும் ஜனாஸாவை வெள்ளைத் துணியால் மறைக்கவில்லை. நாங்கள் சாதாரண மக்கள். மதங்களுக்கு உட்பட்டு நாம் வாழ்கின்றோம். நாங்கள் வேண்டுமென்றே அல்லது தெரிந்துகொண்டே பாவமான காரியங்களில் ஈடுபடமாட்டோம்.
அதனால், ஜனாஸாவை வெள்ளை பொலித்தீனினால் முதலில் சுற்றினோம் என்பதை இப்போது நான் தைரியமாக சொல்கின்றேன்.
இவ்வாறு வெள்ளை பொலித்தீனினால் ஜனாஸாவை மறைக்க எனக்கு மேலும் இருவர் உதவினர்.
அதன்பின்னர் ஜனாஸாவை வெள்ளைத் துணி கொண்டு முழுமையாக மறைத்தோம்.
அந்த தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய எனது நடவடிக்கை இன்று நீதி தொடர்பிலான போராட்டத்துக்கு உதவியாக உள்ளது. தோண்டி எடுக்கப்பட்ட ஜனாஸா நல்ல நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Q: ஜனாஸா சிறப்பு இடத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றதே?
பதில்: எமது மதத்தின் நம்பிக்கைகளின் பிரகாரம், ஒருவரை அடக்கம் செய்த பின்னர் அவரது அடக்கஸ்தலத்துக்கு அருகே மரம் ஒன்றை நட்டு வைப்போம். அது அவருக்கு நிழல் கொடுக்கும் என்பது நம்பிக்கை.
அத்துடன் அவருக்காக பிரார்த்தனை செய்வதும் ஒரு வழிமுறை. அந்த வகையில் எமது இளைய சகோதரர் அப்போது ஒரு வேப்பம் மரத்தை அடக்கஸ்தலத்துக்கு அருகே நாட்டினார்.
அவர் வஸீமை மிகவும் நேசித்தவர். நாங்களும் அவரை நேசிக்கின்றோம். அதனால் தான் எனது புதிதாக பிறந்த குழந்தைக்கு வஸீமின் பெயரையே வைத்துள்ளேன். தற்போது அந்த மரம் கற்பனைக்கு எட்டாத அளவு வளர்ந்துள்ளது.
Q: தற்போது இது ஒரு கொலை என வெளிப்பட்டுள்ளது. அப்படியானால் இதனை செய்தவர்கள் யார்?
பதில்: எங்களுக்கும் இது ஒரு கொலையா விபத்தா என தெரிந்துகொள்ள வேண்டிய தேவை உள்ளது.
தற்போது பொலிஸார் இது ஒரு கொலை என்பதற்கான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே இதன் மர்மம் துலக்கப்பட வேண்டும்.
வஸீம் இலங்கை பிரஜை. அத்துடன் மிக அறியப்பட்ட றக்பி வீரர்.
இது கொலையெனில் யாரால் இது புரியப்பட்டது, ஏன் புரியப்பட்டது, எப்படி நடைபெற்ற்து போன்ற விடயங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். யரையும் நேரடியாக வஸீம் குடும்பத்தார் இதுவரை குற்றம்சாட்டவில்லை.
எனினும் அவரது மாமாவான எனக்கும் சில சந்தேகங்கள் உள்ளன. எனினும் பொலிஸார் அவரது பெற்றோரை அது ஒரு விபத்து என கூறி ஆறுதல்படுத்திவிட்டனர். இப்போது நாம் எது உண்மை என்பதை அறிய காத்திருக்கின்றோம்.
Q: இந்த குற்றச் சாட்டானது அரசியல் பின்புலம் கொண்டது என கூறப்படுகின்றது. வஸீமின் சகோதரர் இது ஒரு சாதாரணவிபத்து என 2012 ஆம் ஆண்டு பதிவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதனை விட தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கு குடும்பத்தார் ஒத்துழைக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது. இது உண்மையா?
பதில்: உண்மையில் நாம் ஊடகங்களுக்கு முதலில் நன்றி தெரிவித்தாகவேண்டும். ஏனெனில் இந்த மர்மம் தொடர்பில் தொடர்ச்சியாக பின்தொடர்ந்து உண்மைக் காரணிகளை மறைக்காமல் தெரிவித்ததற்காகும்.
விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் இந்த விசாரணைகளை மீள ஆரம்பிப்பதாக அறிவித்ததன் பின்னர் நான் வஸீமின் மாமா என்ற ரீதியில் மீள முறைப்பாடொன்றை கையளித்தேன். அத்துடன் அமைச்சருக்கு நன்றியும் தெரிவித்தேன்.
இந்த சம்பவம் இதுவரை மூடப்பட்டிருந்தது தற்போது மீள திறக்கப்பட்டுள்ளது. நாங்கள் இந்த விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவோம் என குடும்பத்தவர் என்ற ரீதியில் கூறுகின்றோம்.
சிலர் அரசியல் இலாபம் கருதி குடும்பத்தார் விசாரணைகளை விரும்பவில்லை என கூறுகின்றனர். நாம் அவ்வாறான பொய்யான குற்றச் சாட்டுக்களை நிராகரிக்கின்றோம்.
Q: நன்கு அறியப்பட்ட வீ.ஐ.பீ.க்கள் ( மிக முக்கிய பிரமுகர்கள்) இந்தச் சம்பவத்துடன் தொடர்பு பட்டுள்ளதாக பேசப்படுகின்றது. அது உண்மையா? வஸீமுக்கு வீ.ஐ.பீ.க்கள் எவருடனாவது முரண்பாடுகள் இருந்ததா?
பதில்: வஸீம் எதுவாக இருந்தாலும் அவரது சகோதரியிடம் சொல்வார். இந்த சம்பவத்தின் பின்னர் இந்த வதந்திகள் குறித்து நான் அவளிடம் கேட்டேன்.
வஸீம் சிறந்த றக்பி வீரர் என்ற ரீதியில் அவரை வேறு கழகங்களுக்கு விளையாட தொடர்ச்சியாக அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளன. வெளிப்படையாக சொல்வதென்றால் சீ.எஸ்.என். இவரை ஹெவலொக் கழகத்தில் இருந்து எடுத்து இன்னொரு கழகத்துக்கு விளையாட வைக்க முயற்சித்துள்ளது.
அதனால் வஸீம் சீ.எஸ்.என். க்கு எதிராக வெளிப்படையாக கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
அதனால் சில சின்ன முரண்பாடுகள் தோன்றியதாக அவர் அப்போது தனது சகோதரியிடம் தெரிவித்துள்ளார்.
Q: ஒரு யுவதியின் பெயர் ஆரம்பத்தில் இருந்தே இந்த சம்பவம் குறித்து பேசப்படுகின்றது. அவர்களின் தொடர்புதான் என்ன?
பதில்: எங்களது மகன் திடகாத்திரமானவன்.
அத்துடன் பிரபல்யமான றக்பி வீரர். பல யுவதிகள் அவர் மீது நாட்டம் கொண்டவர்களாக இருந்திருப்பர். இது தான் இன்று இளைஞர்களுக்கு நடப்பது. இது தொடர்பில் வஸீம் அவனது சகோதரியிடம் கருத்துக்களை பரிமாறியுள்ளார்.
எனினும் அவர் ஒரு போதும் தனக்கும் குறித்த பேசப்படும் யுவதிக்கும் இடையில் தொடர்புகள் உள்ளதாக குறிப்பிட்டிருக்கவில்லை. முகப் புத்தகம் முதல் எங்குமே குறித்த யுவதியின் புகைப்படத்துடன் கூட வஸீமை நாம் காணவில்லை. எனினும் நீங்கள் குறிப்பிடும் அந்த யுவதி சீ.எஸ்.என்.இல் வேலை செய்யும் போது ஒரு முறை விளையாட்டு நடவடிக்கை ஒன்று தொடர்பில் வஸீமை தொடர்புகொண்டுள்ளார்.
எனினும் வஸீம் அதனை நிராகரித்ததாக நான் அறிகின்றேன். நாம் எவரையும் குற்றஞ்சாட்டவில்லை. எமக்கான நீதி கிடைக்கும் வரை நாம் காத்திருக்கின்றோம்.
Q: இறுதியாக இந்தச் சம்பவம் குறித்து என்ன கூற விரும்புகின்றீர்கள்?
பதில்: எமது மத நம்பிக்கைகளின் பிரகாரம், ஒரு மனிதர் மரணிப்பது என்பது எழுதப்பட்ட விதிப் படி நடப்பதாகும்.
எனினும் இது ஒரு கொடூரமான படுகொலை. அது ஒரு விபத்தாக இருந்தால் நம்மை நாம் ஆறுதல் படுத்திக்கொண்டிருக்க முடியும்.
அவரை யாராவது சுட்டிருந்தாலோ அவரது உடலில் இந்தளவு சேதம் ஏற்பட்டிருக்காது.
எனினும் அவர் மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது விடயத்தில் நாம் நீதியையே எதிர்பார்க்கின்றோம். இயற்கை அவர்களுக்கு தண்டனையளிக்கும். இறைவனின் பிடியில் இருந்து அவர்கள் தப்பிக்க முடியாது.
-Vidivelli
Post Comment
No comments