கண்ணீரின் வரைபடம்!
உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கும் என்று தெரியவில்லை. கடந்த மே மாதம் நடுப்பகுதியளவில் கைத்தொலைபேசிகள் வழியாக, சில குறுஞ்செய்திகள் பரவியிருந்தன.
'இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படப் போகிறது. குறிப்பாக, முஸ்லிம் பெண்களுக்கு பாரிய ஆபத்து காத்திருக்கிறது. ஜனாதிபதியும், அவருடைய சகோதரரும் வெளிநாடு செல்லவுள்ளார்கள். அப்போது, முஸ்லிம்களுக்கு எதிராக கலவரமொன்று நடத்தப்படவுள்ளது' என்பதுதான் அந்தக் குறுஞ்செய்திகளின் உள்ளடக்கமாகும்.
செய்தி வெளியானவுடன் பாதுகாப்புத் தரப்பினர் பரபரப்பானார்கள். அந்தக் குறுஞ்செய்திகள் வெறும் வதந்திகள் என்று அரச தரப்பில் கூறப்பட்டது. 'பொதுமக்களைக் குழப்பி, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பரப்பப்படும் இவ்வாறான குறுஞ்செய்திகள் குறித்து, பாதுகாப்பு அமைச்சு விஷேட விசாரணையொன்றினை ஆரம்பித்துள்ளது' என்று, அந்த அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய அப்போது கூறியிருந்தார்.
இவ்விவகாரங்கள் குறித்து 'எஸ்.எம்.எஸ். வதந்தி: சூத்திரதாரிகளைத் தேடுகிறது பாதுகாப்பு அமைச்சு' என்கிற தலைப்பில், மே மாதம் 22 ஆம் திகதிய விடிவெள்ளி பத்திரிகையில் – கட்டுரையொன்று வெளியாகியிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது. இவையெல்லாம் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிறது.
ஜனாதிபதியும், அவருடைய சகோதரரான பாதுகாப்புச் செயலாளரும் நாட்டில் இல்லாத பொழுது, அளுத்கம, தர்கா நகர், பேருவளை போன்ற பகுதிகளிலுள்ள முஸ்லிம்கள் மீது பாரியதொரு இனவன்முறைத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் முஸ்லிம்களுக்கு உயிர், பொருளாதாரம் என்று எக்கச்சக்கமான இழப்புக்கள்.
கலவரத்துக்கு முன்னைய நாளில், கோடீஸ்வரர்களாக வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் - மறுநாள் ஏதிலிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக, முஸ்லிம்களின் பொருளாதாரங்கள் இதன்போது குறிவைத்து அழிக்கப்பட்டிருக்கின்றன. இது பெரும் ஆச்சரியமாக இல்லையா? 'முஸ்லிம்கள் மீது ஓர் இனக்கலவரம் இடம்பெறப் போகிறது.
அதுவும், ஜனாதிபதியும், அவருடைய சகோதரரும் நாட்டில் இல்லாத சமயம்தான் இந்தக் கலவரம் நடக்கும்' என்று சரியாக ஒரு மாதத்துக்கு முன்னர் - வதந்தியாக வந்த ஒரு செய்தியானது, ஒன்றுகூடப் பிழைக்காமல் எப்படிப் பலித்தது? உண்மையில், அந்தக் குறுஞ்செய்திகள் வெறும் வதந்திகள்தானா? அல்லது, ஒரு பாரிய இன அழிப்புத் திட்டத்துக்கான ரகசியத்தை அவை - வெளியே கசிய விட்டிருந்தனவா?
வலிந்து போடப்பட்ட புள்ளி
கடந்த வாரம் ஜுன் 12 ஆம் திகதி. தர்கா நகரில் தான் இந்த வெறியாட்டத்துக்கான ஆரம்பப் புள்ளி இடப்பட்டது. ஒரு பௌத்த தேரர் வாகனமொன்றில் வருகிறார். வாகனத்தை ஓட்டியவர் தேரரின் சாரதி. அப்போது வீதியில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் பேசிக்கொண்டு நிற்கிறார்கள்.
அந்த வீதி சற்று குறுகலானது. தேரர் வந்த வாகனம் செல்வதற்கு அந்த இளைஞர்கள் தடையாக நிற்பதாகச் சொல்லி, வாகனத்தைச் செலுத்தி வந்த சாரதி சத்தமிடுகிறார். இதன்போது, குறித்த இளைஞர்களுக்கும் தேரரின் வாகனத்தை ஓட்டி வந்த சாரதிக்குமிடையில் வாய்த் தர்க்கம் ஏற்படுகிறது. பின்னர் - பிரச்சினையாகிறது.
முஸ்லிம்களுடன் எங்கே கொழுகுவது என்று சர்ந்தப்பம் தேடிக்கொண்டிருந்தவர்கள் - இந்த சம்பவத்தைப் பிடித்துக் கொண்டார்கள். குறித்த தேரர் அளுத்கம பொலிஸ் நிலையம் சென்றார். தன்னையும், தனது சாரதியையும் முஸ்லிம் இளைஞர்கள் தாக்கியதாக முறைப்பாடு செய்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் இருவரும் அளுத்கம பொலிஸ் நிலையம் சென்று சரணடைந்தார்கள்.
இத்துடன் விடயம் முடிந்திருக்க வேண்டும். ஆனால், பிரச்சினையை அங்குதான் ஊதிப் பெரிதாக்கினார்கள். அளுத்கம பொலிஸ் நிலையத்தின் முன்பாக தேரர்கள் சிலரின் தலைமையில் சுமார் 400 பேர் திரண்டனர். பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த முஸ்லிம் இளைஞர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கூறி, அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
ஆனால், குறித்த இளைஞர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, சட்டத்தின் முன் நிறுத்துவோம் என பொலிஸார் கூறினர். இதனையடுத்து அங்கு ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவியமை குறித்தும், இதன்பிறகு நடந்தவை பற்றியும் நீங்கள் அறிவீர்கள்.
இவ்வாறானதொரு பதட்டமான சூழ்நிலையில், ஜுன் 15 ஆம் திகதியன்று அளுத்கம பிரதேசத்தில் பொதுபலசேனா அமைப்பின் பொதுக்கூட்டமொன்று நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளரான ஞானசார தேரர் நிகழ்த்திய உரை - இனவாதத்தின் உச்சமாகும். ஞானசார தேரர் - தனது உரையில் முஸ்லிம்களைத் தேவையில்லாமல் திட்டித் தீர்த்தார். முஸ்லிம்கள் சிங்கள இனத்தின் பகைவர்கள் என்கின்றதொரு மனப் பதிவை ஏற்படுத்தினார். கூட்டத்துக்கு வந்திருந்தோரை ஞானசார தேரரின் உரை உசுப்பேற்றியது.
அளுத்கம பிரதேசத்தில் பொதுபலசேனாவினர் தமது பொதுக்கூட்டத்தை முடித்த கையோடு, ஊர்வலமொன்றை நடத்தினார்கள். ஊர்வலம் தர்காநகரினூடகச் சென்றது. பொலிஸாரும், விஷேட அதிரடிப்படையினரும் வீதிகளில் நின்று கொண்டிருந்தனர். ஊர்வலம் தர்காநகர் பெரிய பள்ளிவாசலின் முன்னாலுள்ள வீதியால் செல்லும் போதூன் - அந்த இழி செயல் நடந்தது.
பொதுபலசேனாவின் ஊர்வலத்தில் வந்தவர்கள், தம்வசம் தயாராக வைத்திருந்த கற்களை எடுத்து, திடீரென தர்காநகர் பெரிய பள்ளிவாசலை நோக்கி வீசத் தொடங்கினார்கள். இதன்போது, பள்ளிவாசல் வளவிலும், அதனை அண்டியும் சுமார் 04 ஆயிரம் முஸ்லிம் மக்கள் திரண்டிருந்தார்கள். அவர்கள் - பள்ளிவாசலுக்கு கல் வீசியவர்களை பதிலுக்குத் தாக்கத் தொடங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து, அன்றைய தினம் இரவு - அளுத்கம, தர்காநகர் பகுதிகளுக்குள் நுழைந்த காடையர்கள் - முஸ்லிம்களை வெறித்தனமாகத் தாக்கினார்கள். முஸ்லிம்களின்; வசிப்பிடங்களையும், வியாபார நிலையங்களையும் தீவைத்து எரித்தார்கள். அன்றைய இரவு முழுக்க, இனவெறி வேட்டை தொடர்ந்தது.
கொடுத்திருக்கக் கூடாத அனுமதி
பொதுபலசேனாவினர் 15 ஆம் திகதியன்று நடத்திய பொதுக்கூட்டமும், ஊர்வலமும்தான் - முஸ்லிம்கள் மீதான இனக்கலவரத்தை ஆரம்பித்து வைத்தது. ஆகக்குறைந்தது, பொதுபலசேனாவின் அந்த ஊர்வலம் தடுக்கப்பட்டிருந்தால், அன்றைய தினம் கலவரத்துக்கான சுழி போடப்பட்டிருக்காது.
அளுத்கம பிரதேசத்தில் 15 ஆம் திகதி பொதுபலசேனாவின் பொதுக்கூட்டம் நடைபெறுவது உசிதமானதல்ல என்பதை பலரும் சுட்டிக் காட்டியிருந்தனர். "அளுத்கம நகரில் பொதுபலசேனாவினர் ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றை நடத்தவிருக்கின்றனர். 12 ஆம் திகதி வியாழக்கிழமை ஏற்பட்ட அசம்பாவிதத்தை (தர்காநகர் இளைஞர்களும் - வாகனத்தில் வந்த தேரரின் சாரதிக்குமிடையிலான தகராறு) மையப்படுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இரண்டு நபர்களுக்கிடையில் நடந்த பிரச்சினையை வைத்துக்கொண்டு, இரு சமூகங்களுக்கிடையில் பிளவினை ஏற்படுத்துவதற்கு பொதுபலசேனாவினர் முயற்சிக்கின்றனர். எனவே, இன முறுகலுக்கு வழிவகுக்க முயற்சிக்கும் பொதுபலசேனாவின் பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலத்துக்கு அரசு தடைவிதிக்க வேண்டும்" என்று மேல் மாகாணசபையின் ஐ.தே.கட்சி உறுப்பினர் முஜிபுர் ரகுமான் கோரிக்கை விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்னொருபுறம், இஸ்லாமிய அமைப்புக்களும், சிவில் நிறுவனங்களும் இணைந்து, பொதுபலசேனாவினரின் மேற்படி பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக, பொலிஸ் மா அதிபருக்கு கடிதமொன்றினை எழுதியிருந்தன. "அளுத்கம பிரதேசத்தில் பதட்டமான சூழ்நிலையொன்று ஏற்பட்டுள்ள நிலையில், பொதுபலசேனாவினர் பொதுக்கூட்டம் நடத்துவது உசிதமல்ல. இந்தக் கூட்டம் நடைபெறுவது, இன முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதற்கான அபாய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்தப் பகுதியிலுள்ள முஸ்லிம் மக்களுக்கும், அவர்களின் உடமைகளுக்கும் பாதுகாப்பினை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்" என அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, வக்பு சபை, கொழும்பு பெரிய பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் முஸ்லிம் கவுன்சில் ஆகியவை சார்பான பிரதிநிதிகள் மேற்படி கடிதத்தில் ஒப்பங்களை இட்டிருந்தனர். இவ்வாறு, பொதுபலசேனாவினரின் அளுத்கம கூட்டத்தினையும், ஊர்வலத்தினையும் தடுத்து நிறுத்துமாறு, ஏகப்பட்டோர் எடுத்துச் சொல்லியும் - பொலிஸார் அந்தக் கூட்டத்துக்கும், ஊர்வலத்துக்கும் அனுமதி வழங்கியிருந்தார்கள். அதுவே, அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமாகப் போயிற்று.
குறிப்பிட்டதொரு செயற்பாட்டினால், அமைதிக்குப் பங்கம் ஏற்படும், அல்லது சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்கிற நியாயமான சந்தேகமொன்று ஏற்படுமாயின், அந்த செயற்பாடு நடைபெறுவதைப் பொலிஸார் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்குரிய சட்டரீதியான அதிகாரம் பொலிஸாருக்கு உள்ளது. தேவையாயின் நீதிமன்றத்தின் உத்தரவொன்றினூடாகவும், அவ்வாறானதொரு செயற்பாட்டினை தடுத்து நிறுத்த முடியும்.
அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையிலான பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்களையும், ஆட்சியாளர்களுக்கு எதிரான தொழிற்சங்க நடவடிக்கைகளையும் - மேலேசொன்ன சட்டத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்துகின்ற பொலிஸார் - பொதுபலசேனாவின் பொதுக்கூட்டத்தையும், ஆர்ப்பாட்டத்தினையும் நடத்துவதற்கு அனுமதி வழங்கியமையானது முரண்நகையாகும்.
வேடிக்கை பார்த்தவர்கள்
அளுத்கம, தர்காநகர் பிரதேசங்களில் முஸ்லிம்கள் மீது இனவெறியாட்டம் நடந்தபோது, பாதுகாப்பு படையினர் வெறுமனே பார்த்துக் கொண்டு நின்றதாக, அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். "எங்களை வெளியே வரவேண்டாம் என்று பாதுகாப்புப் படையினர் கூறினார்கள். அதனால், எங்களுடைய வீடுகளுக்குள்ளும், பள்ளிவாசல்களுக்குள்ளும் நாங்கள் முடங்கிக் கிடந்தோம். அந்தவேளையில், காடையர்கள் எங்களுடைய வியாபார நிலையங்களுக்கும் வீடுகளுக்கும் தீவைத்தார்கள்.
எங்களைத் தாக்கினார்கள். எங்கள் பிரதேசமெங்கும் காடையர்கள் சுதந்திரமாக உலாவித் திரிந்தார்கள். இவை அனைத்தையும் பாதுகாப்புத் தரப்பினர் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர். எங்களைப் பாதுகாப்பதற்குரிய எந்தவொரு நடவடிக்கையினையும் பாதுகாப்புப் படையினர் மேற்கொள்ளவில்லை" என்று கூறி - தர்காநகர் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் அங்கு சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முறையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரச பின்னணியுடன், ஆட்சியாளர்களின் ஆதரவுடன்தான் - முஸ்லிம்கள் மீதான இந்த இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதாக மக்கள் சந்தேகப்படுகின்றனர். அப்படிச் சந்தேகப்படுவதற்கு ஏராளமான நியாயங்கள் உள்ளன. பாதுகாப்புத் தரப்பினரின் நடத்தை அந்தச் சந்தேகத்தை வலுப்படுத்துவதற்கான பிரதான காரணங்களில் ஒன்றாகும். "பாதுகாப்புத் தரப்பினரை முன்னே விட்டு, காடையர்கள் பின்னால் வந்தார்கள்" என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.
திட்டமிடப்பட்ட சதி
முஸ்லிம்களுக்கு எதிரான இனக்கலவரமொன்றினை ஏற்படுத்துவதற்குரிய முயற்சிகள் கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்கள் - பள்ளிவாசல்களைத் தாக்கினார்கள், ஹலால் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள், மாடறுப்பதற்கு எதிராகச் செயற்பட்டார்கள், முஸ்லிம்களின் வியாபார நிலையங்களைச் சேதப்படுத்தினார்கள். இப்படி, முஸ்லிம்களைக் கோபப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்தன.
பொதுபலசேனா எனும் அமைப்பினர்தான் இவற்றினையெல்லாம் அநேகமான நேரங்களில் தலைமையேற்றுச் செய்தனர். முஸ்லிம்களை ஆத்திரமூட்டி, எங்காவது ஓரிடத்தில் அவர்களைச் சண்டைக்குக்கு இழுத்துவிட வேண்டும் என்பதே - அவர்களின் திட்டமாக இருந்தது. அது - தர்க்காநகரில் நிறைவேறியது.
முஸ்லிம்களின் பொருளாதாரங்களை திட்டமிட்டு அழிப்பது – அவர்களின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும். அவர்களின் செயற்பாடுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. இலங்கையின் பெரிய ஆடைவிற்பனை நிலையங்களான ஃபெசன் பக், நோ லிமிட் ஆகியவை முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை. இந்த வர்த்த நிலையங்கள் பல தடவை - இவர்களால் தாக்கப்பட்டமை நினைவு கொள்ளத்தக்கது.
இலங்கையில், மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் மிகப் பெரும் நிறுவனம் - ஹார்கோட்ஸ். முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான இந்த வர்த்தக நிலையம் தெஹிவலைவில் அமைந்துள்ளது. அளுத்கம, தர்காநகர் சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதேசமயம், தெஹிவலையில் உள்ள ஹார்கோட்ஸ் நிறுவனத்துக்குள் - முகத்தை மறைத்துக் கொண்டு நுழைந்த காடையர்கள், அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதோடு, கடைசியில் தீ வைத்து விட்டுச் சென்றனர்.
ஹார்கோட்ஸ் நிறுவனம் தாக்கப்பட்ட காட்சிகள் இணையத்தளங்களிலும், பேஷ்புக் பக்கங்களிலும் பதிவேற்றப்பட்டுள்ளன.
இன்னொருபுறம், அளுத்கம – தர்காநகர் பகுதிகளில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை காடையர்கள் தாக்கினார்களல்லவா? அதன்போது அவர்கள் செயற்பட்ட விதமானது, இந்தக் கலவரங்கள் மிகத் திட்டமிடப்பட்ட நடவடிக்கை என்பதை துல்லியமாக வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
'முஸ்லிம்களின் சொந்தக் கட்டிடங்களில் இயங்கிய வர்த்தக நிலையங்களை காடையர்கள் - கட்டிடடங்களோடு சேர்த்து முற்றாக எரித்துள்ளார்கள். சில முஸ்லிம்கள் - சிங்களவர்களிடம் கட்டிடங்களை வாடகைக்குப் பெற்று, அதில் தமது கடைகளை நடத்தி வந்தனர். அவ்வாறான வர்த்தக நிலையங்களின் கட்டிடங்கள் எரியூட்டப்படாமல், அதற்குள் இருந்த பொருட்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது' என்கிறார் தர்காநகரைச் சேர்ந்த பொதுமகனொருவர்.
நடந்தவற்றையும் - நடப்பவற்றையும் பார்க்கும்போது, இவை மிகவும் திட்டமிட்டு நடத்தப்படும் கலவரம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இது வெறும் அனுமானமல்ல. 'அளுத்கமை, தர்காநகர் மற்றும் பேருவளை பகுதிகளில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டவை, முற்கூட்டியே திட்டமிடப்பட்டு, வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களாகவே தோன்றுகின்றன' என்று த.தே.கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இந்தக் கலவரம் குறித்து கூறுகையில், 'ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக அரசு நடத்திய இனவாத நடவடிக்கைதான் அளுத்கம சம்பவமாகும்' என்கிறார்.
வெட்கம் கெட்டவர்கள்
முஸ்லிம்கள் மீதான இந்தத் தாக்குதல்கள் குறித்து - முஸ்லிம் அரசியல் தரப்பில், மு.காங்கிரஸ் மட்டுமே இதுவரை வாயைத் திறந்துள்ளது. அமைச்சர்கள் அதாஉல்லா, றிசாத் பதியுத்தீன் பௌசி ஆகியோர் இதுபற்றி எதுவும் பேசவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் வழமைபோல் தனது ராஜ விசுவாசத்தைக் காட்டியிருக்கிறார்.
"அளுத்கம சம்பவம் துரதிஷ்டமானது. இதனை குறுந்தகவல் மூலமாக சர்வதேச மயப்படுத்தி, அரசை வீழ்த்துவதற்கு உள்ளுர் சக்திகள் சில முற்படுகின்றன. எனவே இதிலிருந்து ஜனாதிபதியை பாதுகாக்க வேண்டும்" என்று பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் கூறியிருக்கின்றார்.
அளுத்கம, தர்காநகர் தாக்குதல்கள் ஞாயிற்றக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம்தான் மு.காங்கிரசின் பேராளர் மாநாடும் நடைபெற்றது. அதனால், அன்றைய தினம் மு.காங்கிரசின் மக்கள் பிரதிநிதிகள் எவரும் களத்துக்குச் செல்லவில்லை. மறுநாள் திங்கட்கிழமைதான் மு.கா. தலைவருடன் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், அஸ்லம் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.
அஸ்லம் என்பவர் மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர். அவருடைய சொந்த ஊர் தர்காநகர். அந்த ஊர் பற்றியெரியும்போது, அஸ்லம் கொழும்பில் இருந்தார். பின்னர், மு.கா. தலைவருடன் திங்கட்கிழமை ஊர் சென்றவர் - உடனடியாக, கொழும்பு திரும்பி விட்டார். நமது முஸ்லிம் பிரதிநிதிகளின் லட்சணம் இப்படித்தான் இருக்கின்றது.
மு.காங்கிரஸ் தலைவர் - அளுத்கம, தர்காநகர் சென்று திரும்பியவுடன் மு.காங்கிரசின் அவசர உயர்பீடக் கூட்டமொன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போது, அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்யலாம் என்பது குறித்து பேசப்பட்டது. மு.காங்கிரசின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அங்கு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினார். அளுத்கம விவகாரம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரசின் வெறுப்பினை வெளிப்படுத்தும் வகையில், மு.காங்கிரஸ் தலைவரும், தவிசாளரும் இந்த அரசில் வகிக்கின்ற அமைச்சுப் பதவிகளை உடனடியாக ராஜிநாமாச் செய்ய வேண்டும் என்று ஹரீஸ் கூறினார்.
ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் இதை ஏற்றுக் கொண்டார்கள். கிட்டத்தட்ட அந்த அதியுயர்பீடக் கூட்டத்தில் கலந்துகொண்ட 90 வீதமானோர் - தலைவரும், தவிசாளரும் அமைச்சுப் பதவிகளை ராஜிநாமாச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
கிழக்கு மாகாண அமைச்சரும், மு.காங்கிரசின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான ஹாபீஸ் நஸீர் அஹமட் - இதற்கு மாற்றமாகப் பேசினார். அமைச்சுப் பதவிகளை ராஜிநாமாச் செய்யவோ, அரசிலிருந்து வெளியேறவோ தேவையில்லை என்றார். அது சரியான முடிவாகாது எனக் கூறினார். ஆனால், அந்தக் கருத்து அங்கு எடுபடவில்லை.
இந்த நிலையில், மறுநாள் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் மு.கா. தலைவர் மற்றும் அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பதாக முடிவு செய்யப்பட்டது. அதன்போது, மு.கா. தலைவர் ஹக்கீம் தனது ராஜிநாமாக் குறித்து அறிவிப்பார் என எதிர்பாக்கப்பட்டது. ஆனால், செவ்வாய்கிழமையன்று ஹக்கீம் அவ்வாறான முடிவுகள் எதனைவும் வெளியிடவில்லை. இது குறித்து, மு.கா. பாராளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டோம். அவர்கள் மிகவும் ஏமாற்றமான மனநிலையோடு பேசினார்கள்.
மு.காங்கிரஸ் தலைமையானது - கட்சியைக் காப்பாற்றுவதற்காகத்தான் இந்த அரசுடன் இணைந்திருக்கிறது என, அந்தக் கட்சியின் தலைவர் ஹக்கீம் கூறிவருவதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். 'அரசிலிருந்து தான் வெளியேறினால், மு.காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானோர் அரசு பக்கமாக ஓடிப்போய் - ஒட்டிக் கொண்டு விடுவார்கள். அவ்வாறானதொரு நிலைவரம் ஏற்படுமாயின், கட்சி வலுவிழந்துவிடும். ஆக, கட்சியையும் - கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பாதுகாப்பதற்காகத்தான், தான் - அரசுடன் இன்னும் இணைந்திருப்பதாக' மு.கா. தலைவர் ஹக்கீம் அடிக்கடி கூறுவார்.
ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. மு.காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்களே - கட்சித் தலைவரையும், தவிசாளரையும் அவர்களுடைய அமைச்சுப் பதவிகளை ராஜிநாமாச் செய்யுமாறு கோருகின்றனர். இந்த அரசுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று அவர்கள் கொதிக்கின்றனர். ஆனால், ஹக்கீம் அதற்குத் தயாராக இல்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும்.
இன்னொருபுறம், மு.கா. தலைவரை ஆட்சியாளர்கள் அலட்சியம் செய்து வருகின்றார்கள்.
அளுத்கம, தர்காநகர் மற்றும் பேருவளையில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதல்கள் குறித்து - இந்தக்கட்டுரை எழுதப்படும்வரை (புதன்கிழமை பிற்கபல் 2.00 மணிவரை) ஜனாதிபதியுடனோ, பாதுகாப்புச் செயலாளருடனோ மு.கா. தலைவர் ஹக்கீம் பேசவேயில்லை. காரணம், அவர்களை இவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால், வெளிநாட்டிலிருக்கும் ஜனாதிபதியுடன் மு.கா. தலைவர் தொலைபேசி வழியாகக் கதைத்தார் என்றும், அப்போது மு.கா. தலைவர் ஹக்கீம் குரலை உயர்த்தி சத்தமாக பேசியதாகவும் - ஒரு செய்தியை மு.கா. தலைவரின் ஊடகத்தினரே இணையத்தளங்களில் பரப்பி விட்டுள்ளனர்.
மு.கா. தலைவருடைய ஊடக இணைப்பாளர் - அவரின் மூத்த சகோதரர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மு.கா. தலைவரின் தலைக்கு மேலால் 'காகமே' பறக்கவில்லை என்றிருக்கும் போது, 'வெள்ளைக் காகம்' பறந்ததாக இவர்கள் செய்திகளைப் பரப்பியிருப்பது – மக்களை ஏமாற்றும் செயலாகும்.
இது இவ்வாறிருக்க, சர்வதேச விசாரணைக் குழுவினரை நாட்டுக்குள் அனுமதிப்பதா? இல்லையா? என்பது குறித்து பாராளுமன்றத்தில் ஒரு வாக்கெடுப்பு நேற்றைய தினம் நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் மு.காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வந்திருந்தபோது, இந்த நாட்டில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் குறித்து, நவநீதம்பிள்ளையிடம் மு.காங்கிரஸ் அறிக்கையொன்றினைக் கையளித்திருந்தது.
இதேவேளை, 'முஸ்லிம்கள் மீதும், அவர்களின் பள்ளிவாசல்கள் மீதும் பேரினவாதிகளின் தாக்குதல் தொடருமாயின், தான் ஜெனீவா வரை சென்று முறையிட வேண்டி நிலை ஏற்படும்' என்றும் - சில மாதங்களுக்கு முன்னர் மு.கா. தலைவர் கூறியிருந்தார்.
இவ்வாறானதொரு நிலையில், ஐ.நா.சபையின் விசாரணையொன்று இங்கு நடைபெறவுள்ளது. இந்த விசாரணையினை அனுமதிப்பதா, இல்லையா என்பது குறித்து பாராளுமன்றத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்பில், மு.கா. கலந்துகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டமையானது கோழைத்தனமான செயற்பாடாகும். மட்டுமன்றி, மு.கா.வின் இந்த நிலைப்பாடு – அரசுக்கு ஆதரவளிப்பதற்கு ஒப்பானதாகும்.
முஸ்லிம் சமூகம் மீது - மிக மோசமானதொரு இனவெறித் தாக்குதல் நடத்தப்படும் நிலையில், அவை குறித்த எதுவிதமான சொரணைகளுமற்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பது அவமானமாகும். குறிப்பாக, 08 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தனிப்பெரும் முஸ்லிம் கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் - இது விடயத்தில் பாரிய பொறுப்புணர்வோடு செயற்பட வேண்டிய தேவை உள்ளது. எவ்வளவு அடித்தாலும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகிப் போக மாட்டார்கள் என்கிற மனநிலையினை மு.கா.வின் முடிவு ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்தி விடுமாயின், நிலைமை இன்னும் கவலைக்கிடமாகி விடும்.
அளுத்கம விடயம் நடைபெற்ற பிறகு மு.காங்கிரஸ் ஓர் ஊடகவியலாளர் மாநாட்டினை நடத்தியது. அதன்போது, ஹக்கீம் கூறிய விடயம் விசித்திரமானதாக இருந்தது. 'மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை நெருக்கடியானதொரு நிலைக்குள் தள்ளிவிட நாம் விரும்பவில்லை' என்று, அதன்போது ஹக்கீம் கூறினார். மு.கா. தலைவர் ஏதோ மலையைப் பிளக்கும் செய்தியை வெளியிடப் போகிறார் என, எதிர்பார்த்துக் காத்திருந்த ஊடகவியலாளர்கள் மயங்கி விழாத குறையாகத் திரும்பினார்கள்.
முஸ்லிம் சமூகம் நெருப்புக்குள் கிடந்து தவிக்கிறது. ஆனால், மஹிந்த அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளிவிட விரும்பவில்லை என்கிறார் மு.கா. தலைவர் ஹக்கீம். சொரணையற்றவர்களிடமிருந்து இதைவிட - நாம் எதைத்தான் எதிர்பார்க்கலாம் என்கிறீர்கள்?!
-மப்றூக்-
19.06.2014 அன்று விடிவெள்ளி பத்திரிகையில் வெளியான கட்டுரை…
Soft Copy: விடியல்
No comments