ஹலால் சான்றிதழ் வழங்கும் சேவையை நிறுத்தியது ஜம்இயத்துல் உலமா
இலங்கையில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் பணியை கடந்த டிசம்பர் 31ம் தேதியுடன் நிறுத்திக்கொள்வதாக , இந்தச் சேவையை இதுவரை செய்து வந்த அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபை அறிவித்துள்ளது.
ஜம்இயத்துல் உலமா சபை, இலங்கையில், இது போல் உணவுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களுக்கு ஹலால் முறையில் தயாரிக்கப்பட்டவை என்று சான்றிதழ் வழங்குவதற்கு எதிராக, சில வலது சாரி பௌத்த அமைப்புகள் வன்முறை கலந்த எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டிலிருந்து இலங்கையில் துறை சார்ந்தோர் மூலம் நிறுவப்பட்ட உத்தரவாதமுள்ள நிறுவனமொன்று , ஹலால் சான்றிதழ் வழங்கும் வேலையையும், தயாரிப்பு, செயற்பாடு தொடர்பான கண்காணிப்பு உட்பட அனைத்து விஷயங்களையும் செய்யும் என்று அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபை தெரிவித்திருக்கிறது.
ஏற்கனவே ஹலால் சான்றிதழ் பெற்றுக்கொண்ட மற்றும் ஹலால் சான்றிதழ் பெறக் காத்திருக்கும் நிறுவனங்களின் அனைத்து விஷயங்களையும் புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள இந்த நிறுவனம் கவனிக்கும் என்று உலமாவின் அறிக்கை கூறுகிறது.
மேலும் , எதிர்காலத்தில், ஹலால் சான்றிதழ் வழங்குவது மற்றும் தயாரிப்பு செயல்பாடு தொடர்பான கண்காணிப்பு விஷயங்களில் , சமூக நலனையும் பொறுப்பையும் கருதி, அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவின் ஒத்துழைப்பும் ஆலோசனைகளும் இருக்கும் என்று உலமா சபையின் அறிக்கை கூறுகிறது.
No comments