Breaking News

இலங்கையில் இஸ்லாத்தை வாழ வைத்தல்: சிறுபான்மை முஸ்லிம்களின் அரசியல்

political0 (றவூப் ஸெய்ன்)

ஐரோப்பிய நாடுகளில் சிறுபான்மை முஸ்லிம் மக்கள் தொடக்க காலத்தில் தமது நாடுகளின் தேசிய வாழ்விலும் அரசியலிலும் பங்கு கொள்ளத் தயக்கம் காட்டினர். “இறை நிராகரிப்பாளர்களை நீங்கள் உங்கள் பொறுப்புதாரர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்” என்ற குர்ஆன் வசனத்தை அவர்கள் விளங்கிய விதமே அதற்குக் காரணம். ஆனால் அதே வசனத்தில் அளிக்கப்பட்டுள்ள ‘விலக்கான சூழலை’ அவர்கள் காலம் தாழ்த்தியே கவனத்தில் எடுத்தனர். விளைவாக இன்று பல மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் முஸ்லிம்கள் தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு கூறாக மாறி வருகின்றனர்.

இன்று அரசியல் (பாராளுமன்ற அரசியலையே நான் கருது கின்றேன்) ஒரு தீர்மானிக்கும் சக்தி என்பதை நாம் இலகுவில் மறுக்க முடியாது. மக்கள் தமது உரிமைகளையும் இருப்பையும் உத்தரவாதம் செய்வதற்கு அரசி யல் செல்வாக்கு நாம் வாழும் காலத்தில் மிக அவசியம். மாறிவரும் வேகமான அரசியல் சூழ லும் பாராளுமன்றங்கள் இயற்றும் சட்டங்களும் இதன் அவசியத்தை இன்னும் வலியுறுத்தி நிற்கின்றன.

எனவே தனிக் கட்சி சார்ந்தோ அல்லது முஸ்லிம்களின் நலன்களைப் பெற்றுத்தரும் முஸ்லிம் அல்லாத ஒரு கட்சியுடன் இணைந்தோ அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவது ஷரீஅத்தின் ஏற்புடமையுடன் கூடியதாகும்.

இத்தகைய சிறுபான்மை முஸ்லிம் அரசியலின் செல்நெறிகள் என்னவாக இருக்கின்றன. என்னவாக இருக்க வேண்டும் என்பது மிகுந்த முக்கியம் கொண்டதொரு கேள்வியாகும். ஒரு சிறுபான்மை முஸ்லிம் அரசியல் கட்சியோ இயக்கமோ அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடும்போது அது தனது இலக்கை மிகச் சரியாக வரைந்து கொள்ள வேண்டும்.

இங்கு வெறுமனே மத்திய அரசின் அதிகாரத்தில் பங்கு பெறுவது மட்டுமே ஒரு இஸ்லாமிய அரசியல் இயக்கத்தின் இலக்காக இருந்துவிடக் கூடாது. அப்படி அதிகாரப் படிநிலையாக (Power Hiarachy) நமது அரசியல் பாரம் பரியம் குறுகிவிடும்போது இஸ்லாத்தின் அரசியல் சிந்தனை எதிர்பார்க்கும் இலக்குகளை நாம் தவறவிட்டு, அதிகார மோதல்களால் மீண்டும் சமூகத் தளத்தைப் பெரிய ஆபத்திற்குள் தள்ளிவிடுவோம்.

ஒரு சிறுபான்மை இஸ்லாமிய அரசியல் இயக்கம் இரு வகையான இலக்குகளைக் கொண்டது. ஒன்று தவிர்க்க முடியாமல் ஒரு சிறுபான்மை சமூகம் அரசியலில் ஏன் ஈடுபடுகின்றதோ அந்த இலக்கை எட்டுதல். அதாவது ஏனைய பிரஜைகளுக்குள்ள உரிமைகளையும் தமது இருப்புக்களான உத்தரவாதங்களையும் உறுதி செய்தல். இரண்டாவது; முஸ்லிம் சமூகக் கட்டுக்கோப்பை பேணுவதிலும் பண்பாட்டு ரீதியான மேம்பாட்டிலும் அதிகாரத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தல்.

குர்ஆன் முன்வைக்கும் அரசியல் சிந்தனையின் அடிப்படை இலக்கு இவ்விரண்டாவது வகையே.“அவர்களுக்கு பூமியில் நாம் அதிகாரத்தை வழங்கினால் அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள்.” இவ்வசனம் இரண்டு அடிப்படையான கருத்துக்களை முன்வைக்கின்றது. ஒன்று, அதிகாரம் என்பது ஒரு கருவி மட்டுமே.

இரண்டாவது, அதிகாரிகள் அல்லது ஆட்சியாளர்களின் கடமை யாதெனில் ஆன்மீக ஒழுக்க நிலைகளைக் கண்காணித்து மேம்படுத்தல், அடுத்தது மக்கள் எதிர் நோக்கும் பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல் லல் (கொள்கை ரீதியாக அல்ல செயல் வடிவில்).

இத்தகைய இரு இலக்குகளையும் எட்டும் வகையிலேயே சிறுபான்மை முஸ்லிம்கள் தமது அரசியல் இயக்கத்தினைக் கட்டி யெழுப்ப வேண்டும். இந்த வாதத்தின் உட்கிடக்கை என்ன வெனில் இஸ்லாமிய அரசியல் சிந்தனை குறித்த தெளிவும் சித்தாந்த விளக்கமும் கொண்ட ஒரு அமைப்போ குழுவோதான் அரசியல் இயக்கமொன்றைக் கட்டியெழுப்புதல் வேண்டும் என்பதாகும்.

அத்தகைய ஒரு இயக்கம் வெறும் கோட்பாட்டுத் தளத்தில் மட்டும் நின்று விடவும் கூடாது. அதற்கென்று ஒரு முதிர்ச்சியும் பக்குவமும் தேவையாகும். ஒரு சிறுபான்மை சமுகம் என்ற வகை யில் மக்களை ஒன்றிணைக்கும் கவர்ச்சியான பிரச்சாரம் அதற்குத் தேவை. மட்டுமன்றி மிதவாதமும் மிகுந்த நிதானமும் அவசியம். தீவிரவாத நிலைப்பாடுகள் அதனைப் பலயீனப்படுத்திவிடக் கூடும். மிகுந்த நுணுக்கத்துடனும் திட்டமிடலுடனும் உருவாக்கப்படும் இத்தகைய அரசியல் இயக்கத்திற்கு ஒரு ஆன்மீகப் பரிமாணமும் நிச்சயம் இருக்கும். அது எப்படி அமைய வேண்டும் என்பது தேசத்தின் வழக்குகள் அதன் அரசியல் சூழலிலுள்ள இறுக்கம், நெகிழ்வு என்பதைப் பொறுத்தது.

Meelparvai

No comments