Breaking News

கண்டி பிரிட்டிஸ் கவுன்சில் நிறுவனத்திற்குள் பொதுபல சேனா திடீர் பிரவேசம்

british-council-1பொசன் போயாதினத்தில் பிரிட்டிஸ் கவுன்ஸில் நிறுவனம் நடத்தவிருந்த ஒரு பரீட்சை விடயமாக பொதுபல சேனாவின் கண்டி மாவட்ட அமைப்பாளர் தலைமையில் ஒரு குழு கண்டியிலுள்ள பிரிடிஸ் கவுன்ஸில் நிறுவனத்தை முற்றுகையிட்டது.

பொதுபல சேனாவின் கண்டி மாவட்ட அமைப்பாளர் மடவல ஜினமங்களாராமாதிபதி நியங்கொட சாசனரத்ன தேரர் தலைமையில் கண்டி கொடுகொடெல்ல வீதியில் உள்ள என்.எஸ்.பி.கட்டிடத்தில் உள்ள பிரிட்டிஸ் கவுன்சில் நிறுவனத்திற்கே குறித்த அமைப்பினர் உட்பிரவேசித்தனர்.

இது குறித்து ஜினமங்ளாராமாபதி நியங்கொட சாசனாரத்ன தேரர் கருத்துத் தெரிவிக்கையில்,

பௌத்த மதம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட புனித தினமான எதிர்வரும் 23ஆம் திகதி பொசன் போயா தினத்தில் 7முதல் 12 வயதுடைய சிறுவர்களுக்கான யங்லேனர்ஸ் என்ற ஆங்கில மொழிப் பரீட்சையை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பௌத்த சிறுவர்களுடைய அனுஷ்டானங்கள் தடைப்படுகின்றன. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

முக்கியமாக அனுராதபுரம் என்பது பொசன் தினத்தில் மிக முக்கிய இடத்தை வகிப்பது. இருப்பினும் அனுராதபுர மாணவர்களையும் இதில் ஈடுபடவைத்துள்ளமையானது பாரதூரமான விடயமாகும். இந்த நாடு பௌத்த நாடு. பௌத்தமதத்தின் பாதுகாவலர்கள் என்ற வகையில் இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது எது பொறுப்பு என்றார்.

இதையடுத்து மேற்படி விடயத்திற்குப் பெறுப்பான பெண் அதிகாரி பின்வருமாறு தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் வெவ் வேறு தினங்களில் இப்பரீட்சை நடை பெறுகிறது. இதற்கான அனுசரணையை மட்டுமே பிரித்தானிய கவுன்சில் வழங்குகிறது. மற்றயவை தொடர்புடைய தனியார் நிறுவனங்களது பணி என்று கூறினார். இது தவிர எமக்கு எதுவும் தெரியாது என்றார். இதையடுத்து அனுராதபுரத்திலுள்ள உரிய தனியார் வகுப்பு பொறுப்பாளருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அத்தினம் இரத்துச் செய்யப்பட்டது.

திடீரென ஏற்பட்ட இச்சம்பவத்தை அடுத்து பெருமளவு பொலிஸார் அங்கு விரைந்த போதும் அமைதியாகக் கலைந்து சென்றனர். இதேவேளை, அனுராதபுர பிரதேசத்திலுள்ள நூற்றிற்கும் குறைவான மாணவர்களே இப் பரீட்சைக்குத் தோற்றுவது அவர்களிடமிருந்து பெற்ற தகவலின் அடிப்படையில் தெரிய வந்தமை குறிப்பிடத்தக்கது.

(வீரகேசரி)

No comments