முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வால்: முஸம்மில்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போதைய நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் வால் போன்று செயற்பட்டுவருகின்றது. புலிப் பயங்கரவாதம் காரணமாக கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டனர். ஆனால் அதனை மறந்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சி செயற்பட்டுவருகின்றது என்று தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட கட்சியின் ஊடகப் பேச்சாளர் மொஹம்மட் முஸம்மில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தலைவர் அஷ்ரப் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணையக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர். மேலும் வரதராஜ பெருமாள் ஈழப் பிரகடனத்தை விடுத்ததும் அதனை எதிர்த்தவர்.
ஆனால் அவரின் பாதையிலிருந்து வேறு திசைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அதன் தற்போதைய தலைமைத்துவம் இழுத்துச் செல்கின்றது. அதாவது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பிரிவினைவாதத்தை நோக்கி அதன் தலைமைத்துவம் இழுத்துச் செல்கின்றது.
அண்மையில் வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகளை இராணுவத்தினர் சுவிகரிப்பதாக கூட்டமைப்பின் எம்.பி. மாவை சேனாதிராஜா கூறியிருந்தார். உடனே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் முஸ்லிம்களின் காணிகள் அபகரிக்கப்படுவதாக கூறினார்.
அந்த வகையில் பார்க்கும்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் வால் போன்று செயற்பட்டுவருகின்றது. புலிப் பயங்கரவாதம் காரணமாக கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டனர். ஆனால் அதனை மறந்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சி செயற்பட்டுவருகின்றது
முஸ்லிம் மக்களுக்கு மற்றுமொரு காத்தான்குடி அல்லது ஏறாவூர் சம்பவம் இடம்பெறவேண்டிய தேவையில்லை. ஆனால் முஸ்லிம்களின் அந்த எண்ணத்தை அறிந்துகொள்ளாது மக்களின் எண்ணங்களை மீறி செயற்பட்டுவருகின்றது என்றார்.
No comments