அன்பை உலகிற்கு போதித்த புத்த பகவானை அரசியல் அடையாளமாக முனைவது பௌத்த தர்மத்திற்கு மாபெரும் துரோகம் - இராஜேஸ்வரன்
மட்டக்களப்பு - அம்பாறை ஆகிய மாவட்டங்களில் உள்ள இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டு அங்கிருக்கும் பெறுமதிமிக்க பொருட்கள் களவாடப்படுவதும், சிலைகள் உடைக்கப்படுவதும் மிலேச்சத்தனமான செயலாகும். இலங்கையில் யுத்தம் மௌனிக்கப்பட்டு, நாட்டின் பாதுபாப்பு முற்றுமுழுதாக அரச படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் இத்தகைய விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறுவது தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் எம்.இராஜேஸ்வரன் குறிப்பிட்டார். அம்பாறை மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கூட இடம்பெறாத சம்பவங்கள் பல இன்று இடம்பெற்று வருகின்றன. இதனால் இந்துக்கள் மனமுடைந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர் இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடு. பல்லின கலாசாரத்திற்கு மதிப்பளிக்கும் நாடு. ஆட்சியாளர்கள் தமக்கான மத விவகார இணைப்பாளர்களையும் ஆலோசகர்களையும் கொண்டுள்ள நாடு என்று வெளிநாடுகளில் பிரசாரங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், பௌத்த சிங்கள கடும் போக்காளர்கள் இலங்கை ஒரு பௌத்த நாடு என்று பகிரங்கமாக கூறி வருகின்றனர். இதனை கண்டும் காணாமல் அரசாங்கம் இருப்பதன் மர்மம் என்ன?
அன்று அரச பதவியை தூக்கி எறிந்து விட்டு துறவற வாழ்வில் ஈடுபட்டு, அன்பு, அஹிம்சை போன்ற தூய வழிமுறையினை உலகிற்கு போதித்த புத்த பகவானை இன்று அரசியல் அடையாளமாக காண்பிக்க முனைவது பௌத்த தர்மத்திற்கு செய்யும் மாபெரும் துரோகமாகும். இத்தகைய துரோகத்தனத்தை புரியும் பௌத்த மதகுருமார் சிலரும், அவர்களுக்கு துணையாகவுள்ள ஒரு சில அரசியல்வாதிகளும் சமயத்தின் பேரால் இந்நாட்டில் சண்டை ஒன்றை உருவாக்கி, மீண்டும் இலங்கையில் இரத்த ஆறு பெருக்கெடுத்தோட வழிசமைக்கின்றமை வருத்தத்தினை தரும் செயலாகும்.
No comments