Breaking News

முஸ்லிம் இலங்கையர்களாக வாழ்ந்து காட்டுவோம் – - கலாநிதி ஏ.சி.எல். அமீர்அலி

dr-ameer-aliகடந்த வாரம் வெளியான நவமணிப்பத்திரிகைக்கு அவுஸ்திரேலிய முர்டொச் பல்கலைக்கழக வருகை தரும் விரிவுரையாளரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.சி.எல். அமீர்அலி வழங்கிய நேர்கானல்.

நேர்காணல் – அபயன்

முஸ்லிம் இலங்கையர்களாக வாழ்ந்து காட்டுவோம் - - கலாநிதி ஏ.சி.எல். அமீர்அலி

இலங்கை முஸ்லிம்கள் இலங்கையின் சீதோசன நிலைக்கேற்ப ஆடைகளை அணிவார்களாயின் இனக் குரோதங்களுக்கும் இன முறுகல்களுக்கும் இடமில்லாது இருந்திருக்கும் என அவுஸ்திரேலிய முர்டொச் பல்கலைக்கழக வருகை தரும் விரிவுரையாளரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.சி.எல். அமீர்அலி தெரிவித்தார்.

கடும்போக்கு பௌத்த அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொண்டு வரும் வெறுப்புப் பிரச்சாரங்களை எதிர்நோக்குவது எப்படி என எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த கலாநிதி அமீர் அலி இதனைத் தெரிவித்தார்.

காத்தான்குடியைச் சேர்ந்த அவுஸ்திரேலியாவில் வசிக்கும் கலாநிதி அமீர் அலி குறுகிய கால விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த போது நவமணிக்களித்த பேட்டியிலே இதனைத் தெரிவித்தார்.

இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அண்மைக்காலமாக அதி வேகமாக அதிகரித்து வரும் அபாயா மற்றும் முகத்தை மறைக்கும் நிகாப் போன்ற ஆடைகள் இலங்கை போன்ற நாடுகளுக்கு பொறத்தமற்றவை. அவை அராபியர்களின் தேசிய உடை. அரபு நாடுகளின் வெப்ப தட்ப நிலைக்கேற்பவே அவ்வாடை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை இலங்கையில் வலிந்து புகுத்துவதாலும் புகுத்தியதாலுமே முஸ்லிம் என்ற தனி அடையாளத்தின் மீதும் முஸ்லிம் பெண்கள் மீதும் பெரும்பான்மை சமூகம் வெறுப்புக் கொள்ளவும் சந்தேகக்கண்ணோடு நோக்குவதற்கும் ஏற்ற சூழல் உருவாகியது என்று நான் துணிந்து கூறுவேன்.

நவமணி சார்பில் அவரைப் பேட்டி கண்ட போதே மேற்கண்ட கருத்துக்களை அவர் முன் வைத்தார்.

பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் கறுப்பு அங்கியை அணிந்து கொண்டு ஒரே இடத்தில் கூடும் போது அது ஏனைய சமய மக்களின் கண்களை உறுத்துகின்றது. அவ்வாறே ஆண்களுடைய பெரிய தாடியும் ஜுப்பாவும் பெரும்பான்மையினரின் உள்ளத்தில் பாதிப்பை அல்லது பொறாமையை ஏற்படுத்துகின்றன. இவை முன்னர் இருந்ததைபோல இலங்கை சீதோஷண நிலைக்கேற்ற ஆடைகளாக அமைந்திருப்பின் இந்த இனக் குரோதங்களுக்கும் இன முறுகல்களுக்கும் இடமில்லாது இருந்திருக்கும். அரபு நாடுகளல்லாத ஏனைய நாடுகளில் (ஆசிய, ஐரோப்பிய நாடுகளில்) அந்தந்த நாட்டு கலாசார சூழ்நிலைக்கேற்பவே உடைகள் அமைந்திருப்பதை அவதானிக்கலாம். உலகிலேயே அதிக சனத்தொகை கொண்ட முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் வாழும் மக்கள் அந்த நாட்டு பாரம்பரிய ஆடைகளையே அணிகின்றார்கள். அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை. இதனை நான் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

இந்த இடத்தில் இப்போது ஒரு கேள்வி எழுகிறது. நாங்கள் யார? என்பதே அக்கேள்வி. நாங்கள் இலங்கை முஸ்லிம்களா? முஸ்லிம் இலங்கையரா? உண்மையில் முஸ்லிம் இலங்கையர்களாக வாழ நாங்கள் தவறி விட்டோம். பொதுவான ஒன்றுகூடல்களின்போது கூட நாம் ஒதுங்கி நிற்கின்றோம்.

அந்த நாட்களில் தென்னிலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் அந்நியோன்யமாக வாழ்ந்து வந்தனர். முஸ்லிம்களின் சமையலறைக்குள் கூட ஒரு சிங்களப் பெண் இருப்பாள். வடக்கு கிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் பிட்டும் தேங்காய்ப்பூவும் போல் வாழ்ந்து வந்தனர். முஸ்லிம்களது பெருநாள் திருநாள் நல்ல நாட்களில் தமிழர்களும் கணிசமாகக் காணப்படுவர். அவ்வாறே தமிழர்களின் பொங்கல், தீபாவளி, கிறிஸ்மஸ் போன்ற விசேட நாட்களில் முஸ்லிம்களை அழைத்து விருந்து வைப்பர். இன்று இவையெல்லாம் எங்கே? ஒருவருக்கொருவர் முதுகைக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலை ஏன் உருவானது? இதனை உருவாக்கியவர் யார்? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நோன்பு காலங்களில் முஸ்லிம் பாடசாலைகள் மூடப்படுவது நமக்குக் கிடைக்கப்பெற்ற வரப்பிரசாதம் என்று கூறிக் கொண்டிருக்கிறோம். இது வரப்பிரசாதமல்ல, நமது கல்விக்குக் கிடைத்த சரிவு என்றே நான் கருதுகின்றேன். இதன் மூலம் நாம் தனித்து நிற்கின்றோம். ஏனைய கல்வி முறைகள், கல்வித்திட்டங்களில் இருந்தும் நாம் விலகி நிற்கின்றோம். அவர்கள் படிக்கும் போது நாங்கள் துõங்குகின்றோம். அவர்கள் ஓய்வெடுக்கும் போது நாம் படிக்கின்றோம். இது ஒரு முரண்பாடாகும். கற்றல் முறையின் சீரின்மையை இது காட்டுகின்றது.

இலங்கையைப் பொறுத்த வரை முஸ்லிம் பெண்களின் உரிமை என்ன? இங்குள்ள பெண்களுக்கு உயிர் வாழும் வரை பள்ளிவாசலுக்குள் இடமளிப்பதில்லை. ஆனால், இறந்த பிறகு பள்ளியில் கொண்டுபோய் வைக்கிறார்கள். என்ன நியாயம் இது? ஏனைய நாடுகளில் பெண்கள் பள்ளிக்கு செல்கின்றார்கள். தொழுகின்றார்கள். பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கின்றார்கள். (குறிப்பு – தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலின் பரிபாலன சபைத் தலைவர் ஒரு பெண்).

அது மட்டுமல்லாது, எமது பள்ளிகளில் ஏனைய மதத்தவரை நுழைய அனுப்பதில்லை. மலேசியாவிலுள்ள பள்ளிகளினுள் எவரும் நுழையலாம். அங்கேயுள்ள பள்ளிகள் ழுணீஞுண ஏணிதண்ஞு களாகும்.

ரசூலுல்லாஹ் அவர்கள் மதீனா நகரில், நஜ்ரான் என்ற இடத்தில் உள்ள பள்ளிவாயலில் கிறிஸ்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது தொழுகைக்கான நேரம் வந்தது. நபிகளார் அப்போது கிறிஸ்தவர்களைப் பார்த்து கூறினார்கள். நீங்கள் தொழுங்கள் நாங்களும் தொழுகிறோம்.

இன்றைய ஜும்ஆப் பிரசங்கங்கள் பத்தாம்பசலித் தனமானவை. மௌட்டீகமயமானவை. அரைத்த மாவையே வாராவாரம் அரைக்கின்றார்கள். புதிய நடைமுறைகளை புதிய வழிமுறைகளை பிரச்சினைக்கான மாற்று வழிகளைப் பேசுவதில்லை. உண்மையில் அவ்வாறு பேசுவதற்கு டிரஸ்டி அனுமதிப்பதுமில்லை.

மாடுகள் அறுத்தலுக்கான தடை பற்றிய உங்கள் கருத்து என்ன என்று கலாநிதியிடம் கேட்ட போது,

உண்மையில் மிருக வதையை எல்லோருமே கண்டிப்பர் என்று கூறிய அமீர் அலி, அவுஸ்திரேலியாவில் ஒரு டொக்யூமென்டரி படம் பார்த்தேன். ஒரு மாட்டை அறுத்த பின்னரும் அது இறக்காததால் அதனை அடித்துக் கொல்லுகின்றனர். அதனைப் பார்த்த மற்றொரு மாடு நடுங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கவே பரிதாபகரமாக இருந்தது. இங்கே மாடறுத்தலைத் தடை செய்ய வேண்டும் என்பதைப் பற்றித்தான் பேசப்படுகின்றது. ஏனைய மிருகங்கள் பறவைகள் கொல்லப்படுதல் ஜீவகாருண்யத்தில் அடங்காதா என்ன?

மாட்டை அறுத்து மாட்டிறைச்சியை வீதியோரங்களில் பகிரங்கமாகத் தொங்கவிட்டு காட்சிப்படுத்தல் பயங்கரமானது. ஏனைய மதத்தவதைத் துணுக்குறச் செய்வது என்றும் கூறினார்.

புத்தரின் போதனையில் கூறப்படுகின்ற தர்மம் சரணங் கச்சாமி|| எனப்படுவதின் பொருள் என்ன? எஹ்து நஸ்ராத்தல் முஸ்தகீன் என்பதின் பொருள் என்ன? சிந்தித்துப் பாருங்கள். எல்லா மதங்களும் என்ன கூறுகின்றன.

ஊர் முழுக்க உள்ள பள்ளிகளிலெல்லாம் ஒலி பெருக்கி மூலம் அதான் கூறத் தேவையில்லை. ஒன்றிரண்டு பள்ளிகளில் கூறினால் போதும்.

நமது நாட்டைப் பொறுத்தவரை உலமாக்களின் சமூகப் பங்களிப்பு மிகக் குறைவு. பொதுவாகவே உலமாக்கள் எல்லோருமே அறிஞர்கள் அல்லர். பெரும்பாலானோர் பத்தாம் பசலிகளாகவே இன்னும் இருக்கிறார்கள்.

குர் ஆன் கூறும் இல்ம் குர் – ஆனுக்குள்ளே மட்டும் இல்லை. அது வெளியிலும் இருக்கிறது. சீனா சென்றாயினும் சீர் கல்வியைத் தேடு என்ற வாக்கு வெறும் கல்வியை மட்டும் குறிப்பதாக கருதக்கூடாது. அவர்களது தொழில்நுட்பத்தையும் கற்று வருதல் என்பதே அதன் மறைபொருளாகும்.

சீனர்களிடம் காகிதம் செய்தல், பீங்கான் செய்தல் போன்றவற்றைக் கற்று வரலாம்.

இல்ம் எனப்படுவது இருவகைப்படும். ஒன்று ஆகிறத்துக் கல்வி மற்றையது உலகக் கல்வி.

ஹக்கன் யகீன் என்பது இறைவனுக்கு உரியது.

ஐனுல் யகீன் என்பது தொட்டு, முகர்ந்து சுவைத்து அறியும் கல்வியாகும்.

இல்முல் யகீன் என்பது காரணா காரியங்கள் மூலம் கண்டறிந்து கற்கும் கல்வியாகும்.

ஸ்பெயின் நாட்டில் ஒரு வருடத்தில் செய்யப்பட்ட மொழி பெயர்ப்புக்கள் அப்பாசியரின் வீழ்ச்சிக்குப் பின்னர் அராபிய உலகம் இதுகாலவரை செய்ததேயில்லை.

இன்றைய உலகு வெறும் நுகர்வோர் உலகமாக மாறி விட்டது. தேடல், திரட்டல் எதுவுமே இல்லை. கயிற்றின் சுருக்கை எமக்கு நாங்களே போட்டுக் கொண்டுள்ளோம். கயிற்றை இழுக்க வேண்டியது மட்டும்தான் பாக்கி. இவ்வாறு உணர்ச்சிகரமாகக் கூறினார் கலாநிதி அமீர் அலி.

நன்றி: நவமணி

பெறப்பட்டது: காத்தன்குடி.இன்போ

No comments