எக்னெலிகொடவை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: அருந்திக எம்.பி.
தலையை மொட்டையடித்துக் கொண்டு பிரான்ஸில் மறைந்திருந்து தாய் நாட்டுக்கு எதிராக செயற்படும் ஊடகவியலாளர் பிரகீத எக்னெலிகொடவை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்பு தரப்பினரும் உளவுப் பிரிவினரும் மேற்கொள்ள வேண்டுமென அருந்திக பெர்ணான்டோ எம்.பி. இன்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கடந்த 5ஆம் திகதி பத்திரிகை பேரவை சட்ட மூல விவாதத்தின் போது காணாமல் போனதாக கூறப்படும் ஊடகவியலாளர் பிரகீத எக்னெலிகொடவை பிரான்ஸில் அருந்தித பெர்ணான்டோ எம்.பி. சந்தித்ததாக கருத்து வெளியிட்டார்.
இது தொடர்பில் அச்சு இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் இணையத் தளங்களை பயன்படுத்தியும் எக்னெலிகொடவின் மனைவியும் வேறு பலரும் தன் மீதும் அரசின் மீதும் பொய்யான குற்றச்சாட்டுக்களை வெளியிட்டு தனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் பராளுமன்றத்தில் தெரிவித்து அருந்திக பெர்ணான்டோ சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அருந்திக பெர்ணான்டோ மேலும் உரையாற்றுகையில்,
சந்தியா எக்னெலியகொட உண்மையில் நேசிப்பவரானால் இந்த கருத்தை வெளியிட்ட என்னிடம் இவ்விடயம் தொடர்பில் வினவியிருக்க வேண்டும். அதனை விடுத்து ஊடகங்களுக்கு கருத்துக்களை வெளியிடுவது வெளிநாடுகளுக்கு தகவல்களை தெரிவிப்பது வேதனைக்குரிய தாய் நாட்டுக்கு எதிரான செயலாகும்.
நான் அண்மையில் பிரான்சுக்கு சென்றிருந்தேன். அப்போது எனது பாடசாலை நண்பரான மஞ்சுள வெடிவர்தன என்னை சந்தித்தார்.
இதன் போது தலையை மொட்டையடித்து ஒருவரை எனக்கு காண்பித்து அவர் எக்னெலியகொட எனத் தெரிவித்தார்.
ஆனால் அந்நபர் என்னோடு பேசவில்லை. அதேபோன்று ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைப்பாகை கட்டிக் கொண்டு சுனந்த தேசப்பிரிய காணப்பட்டார். அவர் அருகில் எக்னெலிகொட மொட்டையடித்து காணப்பட்டார்.
எனவே சந்தியா எக்னெலிகொடவுக்கு தனது கணவர் இருக்கும் இடம் தெரியும். நவீன தொழில் நுட்ப உபகரணங்களூடாக தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இதனை கண்டு பிடிக்க முடியாது.
யுத்த காலத்திற்கு பின்னர் இப் பெண்மணி இலங்கைக்கு எதிராக கருத்துக்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிற்கும் தெரிவித்தவர்.
No comments