எல்லோரும் ஒன்றுபட்டு இனவாதத்தை தோற்கடிப்போம்: சுமந்திரன் எம்.பி. பேட்டி
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் நவமணிக்கு வழங்கிய செவ்வி
கேள்வி: சிங்கள கடும்போக்காளர்களின் இனவாத செயற்பாடுகள் பற்றி…?
பதில்: இந்த நாட்டில் தற்போது இனவாதம் தலைவிரித்தாடுகின்றது. தமிழர்கள், முஸ்லிம்கள் என்று பாராது முழு சிறுபான்மையினரையும் இலக்கு வைத்து மிக வேகமாகவும், மோஷமாகவும் இனவாதம் கக்கப்படுகின்றது. பதவியிலுள்ள அரசாங்கங்களே கடந்த காலங்களில் இனவாதத்தைத் தூண்டி அரசியல் இலாபம் அடைந்தார்கள். காலத்துக்குக் காலம் சிங்கள கடும்போக்காளர்களை கொண்டு சிறுபான்மையினர் மீதான அடக்கு முறைகளை அடாவடித்தனங்களை பதவியிலுள்ள அரசுகள் முன்னெடுத்துள்ளன.
தற்போதைய அரசும் தற்போது இனவாதிகளை ஆயுதமாகக் பயன்படுத்தி சிறுபான்மையினரை நசுக்கப் பார்க்கின்றனர். முஸ்லிம்களுக்கெதிராக அண்மைக் காலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் தீவிர இனவாத செயற்பாடுகளும் அரசின் துணையுடனேயே முன்னெடுக்கப்படுகின்றன. பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பொதுபல சேனாவின் அலுவலகமொன்றினை திறந்து வைத்தது இதற்கு மிகச்சிறந்த சான்றாகும்.
கேள்வி: இனவாதத்தை ஏன் தூண்டி விடுகிறார்கள்?
பதில்: அரசியல் ரீதியான பிரச்சினைகள் தோன்றும் பெரும்பான்மையினருக்கும் பிரச்சினைகள் இருக்கின்றதென்பதை வெளிக்காட்டுவதற்காக இனவாதக் குழுக்கள் களத்தில் இறக்கப்படுகின்றனர். இந்த அரசு இப்போது இந்தப் பணியை கச்சிதமாகச் செய்துள்ளது. சிறுபான்மையினர் தமது உரிமைகளுக்காகக் குரலெழுப்பும்போது இந்த உரிமைகள் தொடர்பில் சிங்கள மக்களிடையே பதிலையும், அச்சத்தையும் ஏற்படுத்தி அதன் மூலம் குளிர்காய முனைகிறது இந்த அரசு.
உண்மை நிலை என்னவென்றால் சிறுபான்மையினரின் வழங்காமலிருக்க அல்லது தட்டிக்கழிக்க இனவாதிகள் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படுகின்றனர். பொதுபல சேனா போன்ற இனவாத அமைப்புகள் கொடுக்கப்பட்ட இந்தப் பணியைச் சச்சிதமாகச் செய்கின்றன.
கேள்வி: அரசாங்கம் ஏன் இதனைக் கட்டுப்படுத்துவதில்லை?
பதில்: அரசாங்கமே இனவாதத்தைத் தூண்டிவிட்டிருக்கின்ற நிலையில் அவர்கள் தான் அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். எனினும் அரசு இதைச் செய்யாது கை கட்டி மௌனம் காக்கிறது. அரசாங்கம் நினைத்தால் நாளைக்கே இதனைக் கட்டுப்படுத்தலாம்.
சிறுபான்மையினரின் போராட்டங்களை நசுக்கவும், உரிமைகளை மறுக்கவும் இனவாதிகள் அரசுக்கு தேவைப்படுகின்றனர். பாதுகாப்புச் செயலாளரின் அண்மைக்காலச் செயற்பாடுகள் இதனைத் தெட்டத் தெளிவாக வெளிக்காட்டுகிறது.
கேள்வி: இனவாதிகளின் செயற்பாடுகளைத் கண்டிப்போரை அரசு நெருக்கிறதே?
பதில்: ஆம், பொதுபல சேனா போன்ற இனவாதிகளை உருவாக்கியதே இந்த அரசுதான். இந்த நிலையில் அவர்களுக்கெதிராக குரல் கொடுக்கும்போதும், கண்டிக்கும்போதும் அரசுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அதனால் இனவாதிகளின் செயற்பாடுகளைக் கண்டிப்போர் மீது அரசு வலை விரிக்கிறது.
கேள்வி: அஸாத் சாலி கைதும் இது போன்றதா?
பதில்: ஆம், சந்தேகமே இல்லை. அஸாத் சாலி இனவாதிகளின் செயற்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சித்தார். அதற்கெதிராக குரல் கொடுத்தார். போராடினார். இந்த விஷயத்தில் அரசாங்கம் மௌனம் காப்பதையும் கண்டித்தார். பாதுகாப்புச் செயலாளரும் அரசாங்கமும் இனவாதிகளுக்கு உதவி ஒத்துழைப்பு வழங்குவதாக பகிரங்கமாகவே தெரிவித்தார். அவர் உண்மையான விடயங்களைத்தான் சொன்னார். அவரது கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை அரசினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள்.
மௌலவி ஒருவரைத் தூண்டி அவர் மீது பொலிஸ் முறைப்பாடொன்றினைச் செய்ய வைத்தார். பின்பு அந்த மௌலவியே அந்த முறைப்பாட்டினை வாபஸ் பெற்றுக் கொண்டார். இதனால் அஸாத் சாலிக்கு முன்கூட்டியே நீதிமன்றத்துக்குச் சென்று பிணை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் ஏற்பட்டது. அது வித்தியாசமானதொரு குற்றச்சாட்டு. ஏற்கனவே அஸாத் சாலி பிணை பெற்றுக் கொண்டிருந்தால் பிணை பெறாத குற்றத்தைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்தது.
இதனடிப்படையில் பயங்கரவாதத்துக்குத் துணைபோகும் விதத்தில் அவர் கூற்றுத் தெரிவித்திருப்பதாக குற்றம் சுமத்தி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை அழுத்தங்களையடுத்து அவரை விடுதலை செய்தது. நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டுக்களையடுத்தே அஸாத் சாலியை அரசு விடுதலை செய்தது.
அதாவது பொய்க் குற்றச்சாட்டின் பேரிலேயே அஸாத் சாலி கைது செய்யப்பட்டது இதிலிருந்து தெளிவாகிறது. அஸாத் சாலியின் வாயை அடைக்க வேண்டுமென்பதற்காக அரசு முயற்சித்தது. அதனடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
கேள்வி: இனவாதத்துக்குத் தூபமிட்டவர்களை அரசு கைது செய்யவில்லையே?
பதில்: ஆம், இனவாதத்தைத் தூண்டியவர்கள் அரசுக்கு வேண்டியவர்கள். அதனால் அவர்களை அரசு கைது செய்யவில்லை. இனவாதத்தை, இனவாதிகளை கண்டித்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இந்த விடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாடு என்னவென்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம்.
கேள்வி: எதிர்காலத்திலும் இவ்வாறான கைதுகள் தொடருமா?
பதில்: நிச்சயமாக, இனவாதிகளின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. அவர்களின் செயற்பாடுகள் சிறுபான்மையினரின் இருப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது. அரசும் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறானதொரு பின்னணியில் இனவாதிகளைக் கண்டிப்பேர் எதிர்காலத்தில் கைது செய்யப்படலாம் என்ற அச்சமும் இருக்கிறது.
கேள்வி: இனவாதிகளின் கை ஓங்கினால் சிறுபான்மையினரின் எதிர்காலம் என்னவாகும்?
பதில்: முதலில் தமிழ் மக்களை குறிவைத்து மிகப் பயங்கரமான யுத்தமொன்றினை முன்னெடுத்தார். தமிழ், முஸ்லிம் மக்களின் இந்த யுத்தத்தினால் பேரிழப்புக்களைச் சந்தித்தார்கள். இப்போது முஸ்லிம் மக்களுக்கெதிரான போராட்டமொன்றினை இனவாதிகள் முன்னெடுத்துள்ளார்கள். நாளை இன்னொரு சமூகத்துக்கெதிராகவும் இது திரும்பலாம்.
சிங்கள கடும் போக்காளர்களின் இவ்வாறான தீவிர செயற்பாடுகள் சிறுபான்மையினரின் நலன்களை பெரிதளவில் பாதித்துள்ளது. அவர்களது காணி, பொருளாதாரம், சொத்துக்கள் உட்பட பல்வேறு விடயங்கள் இனவாதிகளின் செயற்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் பொருளாதாரத்தைக் குறி வைத்தும் அவர்கள் செயற்பட்டு வருகிறார்கள்.
வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களின் காணி, இருப்பிடங்களை அபகரிக்கும் முயற்சிகளுக்கும் இனவாதிகள் தூபமிட்டு வருகிறார்கள். சிறுபான்மையினர்களின் நலன்களை இனவாதிகளின் செயற்பாடுகளால் பெருமளவில் பாதிக்கப்படக் கூடும்.
கேள்வி: முஸ்லிம்களுக்கெதிரான இனவாத செயற்பாடுகளை எவ்வாறு நோக்குகிறீர்கள்?
பதில்: பொதுபல சேனா போன்ற இனவாத அமைப்புக்கள் அண்மைக் காலமாக முஸ்லிம்களை இலக்கு வைத்து இனவாதச் செயற்பாடுகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. வன்முறையாகவும் இது சில தடவைகளில் உருவெடுத்திருக்கிறது. பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டமை. ஹலால் விவகாரம், அபாயா போன்ற முஸ்லிம்களின் உடை, விடயத்திலும் இனவாதிகள் கை வைத்திருக்கிறார்கள். முஸ்லிம்களின் பொருளாதாரத்தை நசுக்குவதிலும் குறி வைத்திருக்கிறார்கள். இது பாராதூரமானதொரு விடயம். இந்த நிலை தொடருவதற்கு அனுமதிக்க முடியாது.
கேள்வி: இந்த விடயத்தில் முஸ்லிம் தலைவர்களின் செயற்பாடு பற்றி…?
பதில்: முஸ்லிம் அமைச்சர்களின் செயற்பாடுகள் திருப்தியளிப்பதாக இல்லை. அவர்கள் அரசுக்கு வாக்காளத்து வாங்கும் நிலையே காண்கின்றோம். முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. பள்ளிவாசல் உடைப்பு, ஹலால் விவகாரம் உட்பட இன்னோரன்ன விடயங்களில் அரசு மௌனம் காத்து வருகின்றமை குறித்து அமைச்சர்கள் தமது முழுமையான எதிர்ப்பிணை வெளிக்காட்டவில்லை. ஏனைய முஸ்லிம் தலைவர்கள் குரல் கொடுத்தாலும் அது அவ்வளவு எடுபட்டதாகத் தெரியவில்லை.
கேள்வி: முஸ்லிம்கள் தற்போது என்ன செய்ய வேண்டும்?
பதில்: இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு எதிராக முஸ்லிம்கள் தமது எதிர்ப்பினை பல்வேறு வழிகளிலும் வெளிக்காட்டி வருகின்றனர். முஸ்லிம் அமைப்புகள், அரசியல்வாதிகள், பிரமுகர்கள் ஒருமித்துச் செயற்பட வேண்டும். பொது எதிரியான இனவாதத்தை வெற்றி கொள்வதற்கான வியூகங்களை வகுக்க வேண்டும். பேதங்களை மறந்து ஒன்றுபட்டு, ஒருமித்துக் குரலெழுப்பும் போது இனவாதிகள் பின்னடைவுகளை எதிர்கொள்வார்கள்.
கேள்வி: சிங்கள கடும்போக்காளர்கள் விடயத்தில் முஸ்லிம் தலைமைகளுடன் இணைந்து செயற்படுவீர்களா?
பதில்: நிச்சயமாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறுபான்மையினரின் அநீதி குறித்து எப்போதும் பேசி வருகிறது. அதற்காக உள்ளூரிலும், சர்வதேசத்திலும் குரல்கொடுத்து வருகிறது. பொதுபலசேனா போன்ற சிங்கள இனவாதிகளின் செயற்பாடுகளை முழு சிறுபான்மை சமூகங்களும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும்.
முஸ்லிம் அரசின் தலைமைகள், அமைப்புகளுடன் ஒன்றிணைந்து இனவாதிகளுக்கு எதிராகப் போராட என்றும் தயாராகவே இருக்கின்றோம். இப்போது கூட நாம் இனவாதிகளின் செயற்பாடுகளுக்கெதிராக குரலெழுப்பி வருகின்றோம். எதிர்காலத்திலும் இந்த நிலையே தொடரும்.
கேள்வி: பாதுகாப்புச் செயலாளர் ஒரு அரச நிர்வாகி அவர் அரசியலில் தலையிட முடியுமா?
பதில்: முடியாது, அவர் அரசாங்கத்தின் மிக முக்கிய பொறுப்பொன்றினை வகிக்கிறார். பாதுகாப்பு நகர அபிவிருத்தி அமைச்சுக்களின் செயலாளராகப் பணி புரிகிறார். தனது பதவிப் பொறுப்பினை மதிக்காது செயற்பட்டு வருகிறார். அரசியல் விடயங்களில் நேரடித் தலையீடு செய்கிறார். இதனை எந்த வகையிலும் அரச நிர்வாகி ஒருவர் மேற்கொள்ள முடியாது. அரச நிர்வாகத்தின் சட்ட ஒழுங்குகளை மீறிச் செயற்படுகிறார். அரச பணிகளை விட அரச குடும்பத்தினைக் காப்பதற்கான நடவடிக்கைகளையே அவர் மேற்கொள்கிறார். இது அவரது பதவியைத் துஷ்பிரயோகம் செய்யும் செயற்பாடாகும்.
கேள்வி: சிங்கள இனவாதிகளின் 13ஐ ஒழிக்கச் சொல்கிறார்களே?
பதில்: 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்டுள்ளது. இதனை அகற்ற முயற்சிப்பது பெரும் விளைவுகளைத் தோற்றுவிக்கும். பொலிஸ், காணி அதிகாரங்களை நீக்கிவிடுவது என்பது சிறுபான்மையிருக்கு இரைக்கும் அநீதியாகும். வடக்கு, கிழக்கு மாகாண சபைகளில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அது ஆபத்தானது என்கிறார்கள். இதனை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. 13 முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அது மட்டுமன்றி 13க்கு அப்பால் சென்றும் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும்.
கேள்வி: இதற்கு அரசு உடன்படுமா?
பதில்: உடன்பட்டுத்தான் ஆகவேண்டும். இனப்பிரச்சினைக்கு அரசு உறுதியான தீர்வினைக் காண விரும்பினால் 13க்கு அப்பால் சென்ற அதிகாரப் பரவலாக்கத்தினை அரசு மேற்கொள்ள வேண்டும். 13க்கு அப்பால் சென்று அதிகாரப் பரவலாக்கம் செய்வதாக அரசு சர்வதேசத்துக்கு வாக்குறுதியளித்துள்ளது. அரசு இந்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும்.
கேள்வி: வடக்குத் தேர்தல் நடத்தப்படுமா?
பதில்: அரசாங்கம் செப்டெம்பரில் தேர்தல் நடத்தப்படுமென அறிவித்துள்ளது. இக்காலத்தில் நீதியான, நேர்மையான தேர்தல் இடம்பெறுமென எதிர்பார்க்கின்றோம். ஊழல், மோஷடியான முறையில் தேர்தலை நடாத்த அரசு முயன்றால் அதற்காக முனைப்புடன் போராடுவோம்.
கேள்வி: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடனான உறவு பற்றி?
பதில்: தமிழ் தேசிய கூட்டமைப்பு மு.கா.வுடன் கடந்த காலங்களில் தொடர்ச்சியான பேச்சுக்களை நடாத்தியது. முஸ்லிம் மக்களின் உரிமைகள் அவர்களது நலன்கள் குறித்து நாம் அக்கறை கொண்டுள்ளோம். அதுபற்றி மு.கா.வுடன் பேசியுள்ளோம். எதிர்காலத்திலும் பேசுவோம்.
கேள்வி: இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் முஸ்லிம்களின் நலன்கள் பேணப்படுமா?
பதில்: நிச்சயமாக, அவ்வப்போது முஸ்லிம் தரப்புகளுடன் இது தொடர்பில் பேசுவோம். முஸ்லிம்கள் உரிமைகளைப் பெற்று சுயமரியாதையுடன் வாழ்வதற்கான சிறந்த கட்டமைப்பொன்றினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வகுக்கும். இதன் பொருட்டு முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஏனைய தரப்புகளுடன் பேசுவதற்கு நாம் தயாராகவே உள்ளோம்.
கேள்வி: முஸ்லிம்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?
பதில்: தற்போது நெருக்கமான கால கட்டமொன்றில் உள்ளோம். சிறுபான்மையினர் திட்டமிட்ட அடிப்படையில் நசுக்கப்படுகிறார்கள். எனவே, வேறுபாடுகளை மறந்து விடுங்கள். தமிழ் தரப்புகளுடன் ஒற்றுமை பேணி எமது உரிமைகள், நலன்களைப் பெற போராடுவோம். அதற்காக உறுதி பூணுவோம். முஸ்லிம்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் மிகச்சரியான, தெளிவான தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டும்.
(நேர்காணல் ஸிராஜ் எம். சாஜஹான்)
நன்றி : நவமணி
No comments