கொலன்னாவையில் பள்ளிவாசல் மீது தாக்குதல் : தற்போது சுமூகம்
கொழும்பின் புறநகர் பகுதியான கொலன்னாவையிலுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசல் ஒன்றின் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் அதன் அண்மையிலிருந்த வர்த்தக நிலையம் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இருவர் வெல்லம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இதற்குக் காரணம் என தெரிவிக்கப் படுகிறது.
இந்தத் தாக்குதல் காரணமாகப் பள்ளிவாசலுக்கும் வர்த்தக நிலையத்துக்கும் சேதமேற்பட்டுள்ளது.நேற்று இரவு இரு தரப்புடனும் பேசிய பின் நிலமை சுமுகத்திற்குத் திரும்பியுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, கடந்த காலங்களில் குறித்த பிரதேசத்தில் புத்தர் சிலையொன்றை நிறுவுவது தொடர்பில் சிறு பிரச்சினை ஒன்று இருந்துவந்துள்ளது. முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான காணியில் புத்தர் சிலையை நிறுவுவதற்கு சிலர் முயற்சித்த நிலையில் அதற்கு அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இன்றையதினம் மாலை குடிபோதையுடன் வந்த சிலருக்கும் முஸ்லிம் ஒருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு இறுதியில் அது பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்படுமளவுக்கு நிலைமையை மோசமடையச்செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments