இலங்கை மீதான பிடியை இறுக்கத் தொடங்கியுள்ள அமெரிக்கா!
இலங்கைக்கான நிதியுதவியை 20 சதவீத்த்தினால் குறைக்கும் திட்டத்தை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி முன்வைத்து சில வாரங்களேயான நிலையில் அமெரிக்காவின் மற்றொரு நிதியுதவி விலக்கப்பட்டதான தகவல் வெளியாகியுள்ளது.
நீதித்துறை மறுசீரமைப்புத் திட்டங்களை மேற்கொள்வதற்காக அமெரிக்கா ஒதுக்கியிருந்த 450 மில்லியன் ரூபா நிதியுதவியே மீளப்பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிதி மீளத் திரும்பியுள்ளதற்கான உண்மையான காரணங்கள் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.
இலங்கை அதிகாரிகளுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முடியாததாலேயே தாம் நிதியுதவியை விலக்கிக் கொள்ள நேரிட்டதாக அமெரிக்கத் தரப்பில் நியாயம் கூறப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத் தரப்பில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் அமெரிக்காவின் நிபந்தனைகள் நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் என்பதால் அந்த நிதியுதவி நிராகரிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
ஆனால் அதற்கு மேல் எதுவும் தன்னால் கூறமுடியாது என்றும் அவர் தெரிவித்து விட்டார்.
ஏற்கனவே அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி நிதியுதவிக் குறைப்பை அறிவித்த போது அது மிகச்சிறிய தொகைதான். அதனால் எந்தப் பாதிப்பும் வராது என்று மிக அலட்சியமாக கூறியிருந்தது இலங்கை அரசாங்கம்.
அதுபோலவே நீதித்துறை மறுசீரமைப்புக்காக அமெரிக்கா வழங்கிய 450 மில்லியன் ரூபா மீளப்பெறப்பட்டதற்கும் அரசாங்கம் அதுபோன்ற பதிலையே கொடுத்துள்ளது.
எவ்வாறாயினும் இலங்கைக்கான நிதியுதவிகளைக் குறைக்கும் அமெரிக்காவின் முடிவு, இப்போது 450 மில்லியன் ரூபா நிதியுதவி மீளப்பெறப்பட்ட விவகாரம் ஆகியவற்றுக்கிடையில் நேரடித் தொடர்பு ஏதும் இல்லை.
ஆனாலும் இந்த நிதியுதவிக் குறைப்பு மற்றும் ஒதுக்கப்பட்ட நிதி மீளப்பெறப்பட்டமைக்கு பிரதான காரணம் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசலே என்பதில் சந்தேகமில்லை.
இலங்கை அரசாங்கம் சொல்வது போன்று ஜப்பான் போன்ற நாடுகள் அள்ளி வழங்குவதைப் போல அமெரிக்கா ஒன்றும் இலங்கைக்கு நிதியுதவிகளை அளவுகணக்கில்லாமல் அள்ளி வீசும் நாடு கிடையாது.
ஒரு குறிப்பிட்ட அளவு நிதியையே அமெரிக்கா வழங்கி வருகின்ற அதேவேளை, அந்த நிதியுதவியின் செயற்திறனை உன்னிப்பாக அவதானிக்கவும் தவறாது.
இதனைக் கண்காணித்து நடைமுறைப்படுத்தவே யு.எஸ.எய்ட் என்ற அமைப்பை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் யு.எஸ்.எய்ட் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
மனிதாபிமான உதவிகள் என்ற அடிப்படைக்குள் கண்ணிவெடிகளை அகற்றல் இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகள், படையினருக்கு போர் சாராத பயிற்சி அளித்தல் போன்றவை இடம்பெறுகின்றன.
வாழ்வாதார உதவிகள் எனப்படும் போது வறுமையில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் அதிகரிப்பது.
அபிவிருத்தி உதவிகள் என்ற வகையில் அமெரிக்கா கணிசமான உதவிகளை வழங்கி வருகிறது.
அண்மைக்காலத்தில் அமெரிக்கா இலங்கையின் நீதித்துறையை மறுசீரமைப்பதில் கூடிய கவனம் செலுத்தி வருகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.
அமெரிக்காவின் இந்த நோக்கத்துக்கும், போர்க்குற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறல் விவகாரத்துக்கும் நெருக்கமான தொடர்புகள் உள்ளன.
இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்களுக்கு பொறுப்புக் கூறப்பட வேண்டும் எனவும் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.
இதற்காக நம்பகமான சுதந்திரமான விசாரணையை நடத்தும்படி அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகின்றது.
அத்தகையதொரு விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி விசாரிப்பதற்கு, இலங்கையின் நீதித்துறை கட்டமைப்புகளை நவீனமயப்படுத்துவதே அமெரிக்கத் திட்டத்தின் அடிப்படை நோக்கம்.
அமெரிக்காவின் எதிர்பர்ப்பு நிறைவேறுமா இல்லையா என்பது அடுத்த விவகாரம்.
ஆனால் தற்போதைய நிலையில் போர் தொடர்புடைய குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்தும் நிலை ஒன்று ஏற்பட்டால் அதனை தாங்கிக் கொள்ளுகின்ற சக்தி இலங்கையின் நீதித்துறைக்கு கிடையாது.
ஏற்கனவே நீதித்துறை பல்லுப் பிடுங்கப்பட்ட பாம்பாக உள்ளது என்று விமர்சிக்கப்படுகின்ற நிலையில் நீதிமன்றச் செயற்பாடுகளில் ஏற்படும் காலதாமதம் போர் தொடர்பான குற்றங்களுக்கு சரியான நீதியை சரியான நேரத்தில் வழங்க முடியாது என்பது அமெரிக்காவுக்கு நன்றாகவே தெரியும்.
உதாரணத்துக்கு ஏராளமான குற்றவியல் வழக்குகள் தாமதமாவதற்கு அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தில் போதிய வசதிகளின்மை ஒரு முக்கிய காரணம் அதனை நவீனமயப்படுத்த வேண்டும்.
நீதிமன்ற ஆவணங்கள் பழைய முறைப்படியே கோப்புகளாக பேணப்படுகின்றன. அவற்றை கணனி மயப்படுத்த வேண்டும்.
நீதிபதிகளுக்குப் போதிய பயிற்சியின்மையால் தீர்ப்புகள் எழுதுவது தள்ளிப் போகின்றன.
இதனை நிவர்த்திக்க தர்ப்பு எழுதும் பயிற்சியை அளிக்க வேண்டும்.
இதுபோன்ற வசதிகளை ஏற்படுத்தி நீதித்துறையை நவீன மயப்படுத்துவதன் மூலம் துரிதமாக நீதி கிடைக்கச் செய்யலாம் என்பது அமெரிக்காவின் எதிர்பர்ப்பு.
ஜனநாயகத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு முதலில் நீதி முறையாக நிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதையும், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் அமெரிக்கா எதிர்பார்க்கிறது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் சார்பில் வெளியிடப்படும் ஒவ்வொரு அறிக்கையிலும் இந்த விவகாரங்கள் எதிரொலிப்பதை கவனிக்கலாம்.
நீதித்துறைக் கட்டமைப்பை நவீனமயப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு துரிதமாக நீதி கிடைக்கச் செய்வதன் மூலம் நல்லிணக்கச் சூழலை உருவாக்கலாம் என்ற அமெரிக்காவின் எதிர்பார்ப்பு இலங்கையின் அலட்சியம் அல்லது பிடிவாதத்தினால் நிறைவேறாமல் போயுள்ளது.
இலங்கை அதிகாரிகளுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியாமல் போனதால் தான் 450 மில்லியன் ரூபாவை விலக்கிக் கொள்ள நேரிட்டது என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வடக்கில் உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்த முற்பட்ட போது அரச படைகளின் தலையீடுகளை எதிர்கொண்டதாகவும் அதனால் அந்த்த் திட்டங்களை தொடர முடியாமல் போனதாகவும் அண்மையில் அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் கூறியிருந்தார்.
அதுபோன்ற தலையீடு இந்த நிதியுதவி விவகாரத்திலும் ஏற்பட்டிருக்கலாம்.
ஏனென்றால் நீதி அமைச்சுக்கான இந்த நிதியுதவி குறித்து அமைச்சர் பசில் ராஜபக்சவின் கீழ் உள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாகவே பேச்சு நடத்தப்பட்டது.
இந்தப் பேச்சுகளில் இணக்கப்பாடு ஏற்படாது போனதாலேயே நிதியுதவி திரும்பப் பெறப்பட்டது.
அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு பசில் ராஜபக்ச இணங்காமல் போயிருக்கலாம். அல்லது அவரது நிபந்தனைகளுக்கு அமெரிக்கா இணங்காமல் போயிருக்கலாம்.
ஆனால் ஒன்று அமெரிக்காவின் இந்த நிதியுதவியைப் பெறுவதன் மூலம் தமக்கான பொறியை தாமே வலுப்படுத்திக் கொள்ள நேரிடும் என்று இலங்கை அரசாங்கம் நன்றாகவே உணர்ந்திருக்கும்.
இதனால் இயன்றளவுக்கு இந்த நிதியுதவிப் பொறியில் இருந்து தப்பிக்கவே இலங்கை முயன்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் அண்மைக்காலமாக மோசமடைந்து வருகின்றன.
குறிப்பாக தற்போதைய அமெரிக்கத் தூதுவரின் செயற்பாடுகள் அரசாங்கத்துக்கு திருப்தி தரவில்லை என்று கூறப்படுகிறது.
அமெரிக்கத் தூதுவர் சிசன் கடந்த மாத இறுதியில் கிழக்கிற்கு மேற்கொண்ட பயணமும் சர்ச்சையில் முடிந்துள்ளது.
இந்தப் பயணத்தின்போது அமெரிக்கத் தூதுவர் சிங்கள, முஸ்லிம் உறவுகள் குறித்து விசாரித்து அறிந்து கொண்டதும், அது தொடர்பாக வெளியிட்ட கருத்துகளும் அரசாங்கத்தை சினங்கொள்ள வைத்துள்ளன.
கொழும்பில் லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் இடம்பெற்ற வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலரும் பங்கேற்ற கருத்தரங்கின் போது அமெரிக்கத் தூதுவரின் மீதான கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ்.
உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டுத் தலையீடுகள் தேவையற்ற பிரச்சினைகளையே ஏற்படுத்தும் என்று அவர் கூறியது, அமெரிக்கத் தூதுவரை இலக்கு வைத்துத் தான்.
இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா இறுக்கமான போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ள அதேவேளை அமெரிக்கப் பிடியில் சிக்காமல் இலங்கை நழுவி ஓடத் தொடங்கியுள்ளது.
இலங்கை மீது நேரடியாக அழுத்தங்கள் தொடரும் என்ற அமெரிக்க அறிவிப்பின் பின்னணியிலும், தற்போதைய நகர்வுகளின் அடிப்படையிலும் பர்க்கும்போது அடுத்தடுத்த கட்டங்களில் இலங்கை மீதான அமெரிக்காவின் நடவடிக்கைகள் மேலும் இறுக்கமானவையாக இருக்கலாம் என்றே கருதப்படுகிறது.
(Tamil Win)
No comments