கோத்தபாய தன்னை உப ஜனாதிபதியாக நினைத்து கொண்டு அரசியல் பேசுகிறார்!- மனோ கணேசன்
கோத்தபாய ராஜபக்ச இன்று ஒரு அமைச்சின் செயலாளர். வேறு எந்த ஒரு அமைச்சின் செயலாளரும் பகிரங்கமாக அரசியல் பேசுவதில்லை. ஜனாதிபதியின் சகோதரர் என்ற ஒரே அந்தஸ்த்தின் காரணமாக கோத்தபாய தன்னை ஒரு உப ஜனாதிபதியாக உருவகித்து கொண்டுள்ளார். இதன் காரணமாகவே அவர் இன்று வரம்பு மீறி பகிரங்கமாக அரசியல் பேசுகிறார்.
இவருக்கு நான் கடந்த மாதமே ஒரு பிரபல சிங்கள ஊடகம் மூலமாக ஒரு ஆலோசனை சொன்னேன். அதை மீண்டும் இப்போது சொல்கிறேன். கோத்தபாய ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்ற உறுப்பினாராக பதவி ஏற்கட்டும். அதன் பிறகு பாதுகாப்பு அமைச்சர் ஆகட்டும்.
அரசியலமைப்பை திருத்தி உப ஜனாதிபதியாககூட ஆகட்டும். அதுபற்றி நாம் கவலைப்பட போவதில்லை. ஆனால் பாராளுமன்ற வாத விவாதங்களில் கலந்துகொண்டு பதில் சொல்லும் கடப்பாடு இல்லாத இடத்தில் இருந்துகொண்டு அவர் அரசியல் பேசி நாட்டை குழப்பக்கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைக்கு வழங்கப்பட கூடாது என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளது தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும்கூறியதாவது,
வரையறையுடன் கூடிய மட்டுப்படுத்தப்பட்ட காவல்துறை அதிகாரங்களே மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பையும், அதில் உள்ள 13ம் திருத்தத்தையும் வாசித்தால் இந்த உண்மை விளங்கும். அதற்கு மேலாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரமும், பாராளுமன்றத்தின் மேலாதிக்கமும் இருக்கின்றன.
இந்த நிலையில், நாட்டின் அரசியலமைப்பை முறையாக வாசித்து புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு அல்லது வேண்டுமென்றே அதை திரித்து சொல்பவர்களுக்கு கௌதம புத்தனின் போதனைகள்தான் ஞானோதயம் தர வேண்டும்
உண்மையில் மாகாணசபை அதிகாரங்கள் போதாது என்று தமிழ் அரசியல் கட்சிகள் சொல்கின்றன. மாகாணசபைகளை ஒரு ஆரம்பமாக கூட ஏற்றுக்கொள்ள கூடாது என தமிழ் மக்கள் மத்தியில் ஒரு சாரார் கருதுகின்றார்கள்.
இந்நிலையில் இருப்பதையும் குறைக்கும் யோசனைகளை பகிரங்கமாக விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க, குணதாச அமரசேகர, பொதுபல சேனாவின் ஞானசார கலபொட தேரர் ஆகியோருடன் சேர்ந்து கோதாபய ராஜபக்சவும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
உண்மையில் இவர்கள் அனைவரையும் பின்னால் இருந்தபடி இவர்தான் தூண்டி விடுவதாக நாம் சந்தேகிக்கின்றோம்.
மக்களை பிழையாக வழி நடத்தும் இந்த முட்டாள்தனமான பிற்போக்கு கருத்துகளுக்கு நாம் பலமுறை பதில் சொல்லி விட்டோம். இந்த கருத்துகள்தான் நாட்டில் மீண்டும் பிரிவினைவாதம் தோன்ற காரணமாக அமைய போகின்றன.
ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பிரிப்பதன் மூலமே நாட்டு பிரிவினையை தவிர்க்க முடியும் என்பது இந்த நாட்டின் வரலாறு எடுத்துக் காட்டும் படிப்பினை. அண்டை நாடு இந்தியாவின் வரலாற்றை பார்த்தும் இதை நாம் அறிந்துகொள்ள முடியும்.
வரலாற்றில் இருந்து பாடம் படிக்க முடியாத நபர்கள்தான், அதிகாரம் பகிர்வதை எதிர்க்கிறார்கள். இவர்கள்தான் இந்த நாட்டில் இன்று உண்மையான பிரிவினை வாதிகள்.
கோத்தபாய ராஜபக்சவுக்கு தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் இருக்கலாம். அதற்கான உரிமை அவருக்கு இருக்கின்றது. ஆனால் அவர் இன்று ஒரு அரசாங்க அதிகாரி. இந்த பதவி நிலையை மறந்துவிட்டு அவர் தொடர்ச்சியாக அரசியல் கருத்துகளை சொல்லிக்கொண்டே இருப்பது மக்களுக்கு தவறான செய்தியை வழங்குகிறது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் தேசிய பட்டியலில் தற்காலிகமாக பலர் இருக்கின்றார்கள். இவர்கள் ஒருவரது பாராளுமன்ற உறுப்புரிமை பெற்றுக்கொண்டு கோத்தபாய ராஜபக்ச பாராளுமன்றம் செல்ல வேண்டும் என நான் விரும்புகின்றேன்.
அவர் பாராளுமன்றம் வர வேண்டும் என நான் சொல்ல முடியாது. ஏனென்றால் நான் அங்கு இல்லை. இன்று பாராளுமன்றத்தில் சிறப்பான எம்பீக்கள் இருக்கின்றார்கள்.
பாராளுமன்றம் சென்று தனது இந்த கருத்துகளை கோத்தபாய ராஜபக்ச சொல்வாரானால், அவற்றுக்கு உரிய பதில்களை, அதிகார பகிர்வை ஆதரிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு வழங்குவார்கள்.
உண்மையில் கோத்தபாய ராஜபக்ச பாராளுமன்றம் சென்று பாதுகாப்பு அமைச்சையே பொறுப்பேற்று, பாதுகாப்பு அமைச்சராக முடியும். பாராளுமன்றத்தில் இந்த விவகாரம் பற்றிய வாதப்பிரதிவாதங்களில் பங்குபற்ற முடியும்.
இதை செய்யாமல் தான் மட்டுமே பங்குபற்றும் அரசாங்க ஊடகங்களில் தோன்றி கருத்துகள் கூறுவதையும், பாதுகாப்பு அமைச்சு நிகழ்வுகளில் அரசியல் கருத்துகளை சொல்வதையும் கோத்தபாய ராஜபக்ச நிறுத்த வேண்டும். இவ்வாறு கூறினார் மனோ கணேசன்.
மலையகத்திலும் காணி சுவீகரிப்பு தொடர்கிறதா?-மனோ கணேசன் கேள்வி
பயன்படுத்தப்படாத காணிகள் என்று சொல்லி, 25,000 ஏக்கர் மலையக தோட்டப்புற காணிகளை தோட்ட நிறுவனங்களிடமிருந்து மீளப்பெற்று, அவற்றை தெரிவு செய்யப்பட்ட வேலையற்ற இளைஞர்களுக்கு, ஆளுக்கு இரண்டு ஏக்கர்களாக பிரித்து வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
காணிகளை பெறுகின்ற வேலையற்ற இந்த இளைஞர்களுக்கு, இந்த காணிகளில் விவசாயம் செய்வதற்காக கடன் வழங்கவும், காணிகளில் பயிரிட நாற்றுகளை, விதைகளை வழங்கவும், உரவகைகளை வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக முதல்கட்டமாக 100 மில்லியன் ரூபாவை திறைசேரி ஒதுக்கியுள்ளது.
இந்த தோட்டப்புற காணிகளையும், கடன் உதவிகளையும் பெறுகின்ற 12,500 வேலையற்ற இளைஞர்கள் பட்டியலில், வேலையற்ற தோட்டப்புற மலையக தமிழ் இளைஞர்கள் எத்தனை பேரின் பெயர்கள் இடம்பெறுகின்றன என்பதை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக தமிழ் அரசியல்வாதிகள் அறிவார்களா என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மலையகத்தில் உழைக்கும் மக்களின் இருப்பை இல்லாது ஒழிக்கும் இனவாத நோக்குடன் முன்னேடுக்கப்படும் எந்தவொரு காணி சுவீகரிப்பு நடவடிக்கையையும் ஜனநாயக மக்கள் முன்னணி, முற்போக்கு தோழமை கட்சிகளுடன் இணைந்து எதிர்த்து போராடும் என்றும் குறிப்பிட்டார்.
தோட்ட காணிகள் பகிர்ந்து அளிக்கப்படப்போகும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தாவது,
இன்று நாவலப்பிட்டி பஸ்பாகே கோறளைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட போகில் பாரண்டா தோட்ட குடியிருப்பில் வாழ்ந்துவரும் தோட்ட தொழிலார்களை அப்புறப்படுத்தி அந்த தோட்ட காணிகளை தனியாருக்கு வழங்கும் முயற்சிக்கு எதிராக தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கி போராட தொடங்கிவிட்டார்கள்.
எனவே மலையக தோட்டப்புற காணிகளை மீளப்பெற்று அவற்றை, தெரிவு செய்யப்பட்ட வேலையற்ற இளைஞர்களுக்கு பகிர்ந்து அளிக்கும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பாக பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளன.
1970 காலகட்டத்தில் மலையகத்தில் நடைபெற்ற காணி எதிர்ப்புக்கு எதிரான தோட்ட தொழிலாளர்களின் மாபெரும் போராட்டம்நடும் மீண்டும் இன்று மலையகத்தில் நடைபெற அரசாங்கம் வழி ஏற்படுத்துகின்றதா? நிதி அமைச்சில் இம்மாத ஆரம்பத்தில் நடைபெற்ற இது சம்பந்தமான உயர்மட்ட கூட்டத்துக்கு அரசில் உள்ள மலையக தமிழ் அமைச்சர்கள் அழைக்கப்பட்டார்களா?
தோட்டப்புறங்களிலும் காணியும், கடனும் பெறுவதற்கு தகுதிவாய்ந்த வேலையற்ற தமிழ் இளைஞர்கள் இருக்கின்றார்கள் என்பது அரசாங்க உயர்மட்டத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதா?
இந்த காணிப்பகிர்வு - கடன் வழங்கல் தொடர்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக அரசியல் கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்து உடன்பாடு நிலவுகின்றதா? இதுபற்றி தாம் அறிந்துகொண்டுள்ள விபரங்களையும், தமது நிலைப்பாடுகளையும் அரசில் உள்ள மலையக கட்சிகள் மலையக இளைஞர்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க தயாரா? இந்த கேள்விகளுக்கான பதில்களை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக அரசியல்வாதிகள் மலையக மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.
இந்த தோட்ட காணிகள், வேலையற்ற இளைஞர்களுக்கு 30 வருட நீண்டகால குத்தகைக்கு வழங்கப்பட உள்ளன. இந்த திட்டம் தொடர்பாக, தமக்கு இதுவரை அரசாங்கம் எதுவும் அறிவிக்கவில்லை என தோட்ட முகாமை நிறுவன சங்கத்தின் தலைவர் லலித் ஒபயசேகர தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை, தோட்டங்களில் ஏற்கனவே தொழில் செய்து வாழும் தோட்ட தொழிலாளர்களுக்கும், காணிகளை பெறும் புதியவர்களுக்கும் இடையில் தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிக்கும் எனவும் நிறுவனங்கள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
அந்நிய செலவாணியை இந்நாட்டுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேல் அள்ளி வழங்கி வரும் மலையக தோட்ட தொழிற்துறையை உருவாக்கிய, மலையக தமிழ் பாட்டாளிகளை புறக்கணித்துவிட்டு இந்த திட்டம் நடைமுறையாக போகின்றதா? மலையக தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவ பலத்தை நுவரேலியா மாவட்டத்தில் வெட்டி குறைக்கும் முகமாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுகின்றதா?
வடக்கில், கிழக்கில் நடைபெறும் காணி அபகரிப்புக்கு சமானமான மலையக காணி அபகரிப்பு இதுவா? 1970களில் இடம்பெற்ற அநீதியான மலையக காணி சுவீகரிப்புக்கு எதிராக போராடி உயிர் நீத்த தியாகி சிவனு லட்சுமணனின் போராட்டத்தை மீண்டும் மலையகம் காணப்போகின்றதா? என்ற கேள்விகள் இன்று மலையக சிந்தனையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளன என தெரிவித்தார்.
No comments