நோர்வே – இலங்கை மோதல் வலுக்கிறது!
இலங்கை நீதிமன்றின் தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கைக்கான நோர்வே தூதரக அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் என கொழும்பு நீதிமன்றம் அண்மையில் அறிவித்திருந்தது. கொழும்பு மேலதிக நீதவான் அமாலி ரணவீர இந்த உத்தரவினை பிறப்பித்திருந்தார்.
முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனமான சகவாழ்வு மன்றத்தின் தலைவர் குமார் ரூபசிங்கவினால் நோர்வே தூதரக அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
உறுதிமொழி அளிக்கப்பட்டதனைப் போன்று நிதி உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நோர்வேயின் முன்னாள் தூதுவர் ஹில்டே ஹரால்ஸ்டட் மற்றும் இரண்டு அதிகாரிகள் 98.5 மில்லியன் ரூபாவினை வழங்கத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை நீதிமன்றின் தீர்ப்பு புரிந்துகொள்ள முடியாத வகையில் அமைந்துள்ளது என நோர்வே வெளிவிவகார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் ப்ரோட் அன்டர்சன் தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் ஏனைய தரப்பின் கருத்துக்கைள நீதிமன்றம் உதாசீனம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தூதரக அதிகாரிகள் ராஜதந்திர வரப்பிரசாதம் உடையவர்கள் எனவும் இதனால் தூதரக அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது எனவும் நோர்வே ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ராஜதந்திர வரப்பிரசாதங்கள் தொடர்பிலான வியன்னா பிரகடனத்தை இலங்கை அரசாங்கம் மதித்து செயற்பட வேண்டுமென தற்போதைய நோர்வே தூதுவர் க்ரேட் லொச்சின் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் வியன்னா பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு நீதிமன்றின் உத்தரவு தொடர்பான மொழிபெயர்ப்பு அறிக்கையை உன்னிப்பதாக கவனித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
(TL)
No comments