Breaking News

ஒரே கூட்டாக முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும்

muslim-leadership வாகனங்களையும், பூமியையும் சூரியனையும் சந்திரனையும் ஏனைய கிரகங்களையும் மனிதனின் எண்ணிக்கைக்கு உட்படாத நட்சத்திரங்களையும், முடிவே காணாத அண்டவெளியையும், மனிதர்களையும், ஜின்களையும், எல்லா ஜீவராசிகளையும், மற்றெல்லா படைப்பினங்களையும் படைத்து போதித்து பரிபக்குவப்படுத்துவோன் அல்லாஹ்தான் என நம்பிக்கை பூண்டவர்களே அல்லாஹ்வுடைய இந்தப் பூமியில் வாழக்கூடிய முஸ்லிம்கள். ஆனால், நிராகரிக்கக் கூடியவர்களைத் தவிர, இணைவைப்பாளர்களில் அநேகமானோர் கூட படைப்பாளன் ரப்பாகிய இறைவன்தான் என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், அவர்கள் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களையும் அல்குர்ஆனையும் வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ள மறுப்பதன் மூலம் முஸ்லிம்களிடமிருந்து வேறுபடுகின்றனர்.

மறுமையின் வேதனையின் போது நாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டாமா? என நிராகரிப்போர் புலம்புவதாக அல்குர்ஆன் கூறுகின்றது. இந்த நிலையிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கே இறுதித் தூதராக வந்த முஹம்மத் (ஸல்) அவர்கள் தனக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்கள், இணைப்பாளர்கள் இறை நிராகரிப்பாளர்கள் விடயத்தில் பெரும் முயற்சி எடுத்தார்கள் அவர்கள் நட்பண்புகளோடு, மிக அன்பான முறையில் அவர்கள் விடயத்தில் முயற்சிகள் மேற்கொண்டனர்.
இதனைத் தான் அல்லாஹ் தனது வேதமாகிய அல்குர்ஆனில் குறிப்பிடும் போது அவர்கள் விசுவாசம் கொள்ளவில்லை என்ற காரணத்தினால் நீர் உமது உயிரையே மாய்த்துக் கொள்வீரா? எனக் கேட்டு நான் நாடியவர்களையே நேரான வழியில் செலுத்துவதாக கூறுகிறான். அல்லாஹ் தன் படைப்பினங்கள் மீது அன்பு உள்ளவனாகவே இருக்கின்றான். ஆனால், மனிதர்களின் செயல்களின் தன்மைகளை அவன் அறிந்து வைத்திருக்கின்றான். இதை அல்குர்ஆன் மூலமும், அஸ்ஸுன்னாஹ் மூலமும் வெளிப்படுத்துகின்றான். அல்லாஹ் யாருக்கும் அநியாயம் செய்பவனல்ல. இந்த நிலையில் இந்தப் பூமியின் மீது முஸ்லிம்களாக வாழக்கூடிய ஒவ்வொருவர் மீதும் எப்படிப்பட்ட பாரிய பொறுப்புக்கள் உள்ளதென்பதை நாம் உணர முற்பட வேண்டும்.

இந்தப் பூமியில் கால்பதித்த முதலாவது மனிதர்கள் ஆதம் (அலை) அவர்களும் அவர்களின் மனைவி ஹவ்வாவும் ஆவார்கள். அவர்கள் முஸ்லிம்களாகவே இருந்தனர். ஆனால் உலகில் எந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டார்கள் என குர்ஆன் ஹதீஸ் கூறவில்லை. ஆனால் அதிகமான வரலாற்றாசிரியர்கள் இலங்கைக்கே வந்தார்கள் என கூறுகின்றனர். அதை ஒரு வகையில் ஆதாரமாக எடுத்தால் கூட பூமியில் மனிதர்களால் பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு முதன் மனிதராக அனுப்பப்பட்டது ஒரு முஸ்லிமே. அதையும் விட்டு விட்டு தெளிவான வரலாற்றை எடுத்துக் கொண்டால் தாய்நாடு என நோக்குமிடத்து எங்கள் தாய்மார்கள் தமிழ் சிங்களப் பெண்களாகவே இருந்துள்ளனர். அவர்கள் அரேபிய பெண்களை மணஞ்செய்த நிலையில் இங்கு வந்து தங்கவில்லை. எனவே தாய்வழி மூதாதையர் ஆரம்பகாலந்தொட்டு இங்கு வாழ்பவர்கள் என்பது நிரூபணமாகின்றது. இதை விட்டு விட்டு அவர்கள் இடைக்கால முஸ்லிம் என்றால் வெளிநாட்டு ஒருவர் அவர் வேறு மதத்தவராக இருந்து ஒரு பௌத்த பெண்ணை இன்றைய நிலையில் மணம்செய்து அந்தப் பெண்ணும் கணவனின் மதத்தை பின்பற்றினால் அவர்களின் சந்ததிகள் இலங்கைக்கு புதிதாக வந்தவர்களா?

இஸ்லாம் மனித சமுதாயம் ஒன்றே எனக் கூறுகின்றது. மனிதன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக பெயர்களையும் மொழி, வம்சரீதியான பெயர்களையும், தனக்கென இருப்பிட முகவரியையும் தேர்ந்தெடுத்துள்ளான். ஆனால் நிறத்தால், நாட்டால், பாரம்பரியத்தால் மனிதன் பிரிக்கப்படுவதற்கான காரணம் மனிதன் படைத்த ரப்பின் நோக்கத்தை மறந்து மனோ இச்சைக்கு வழிப்பட்டதாகும். அல்லாஹ்வின் கட்டளைக்கு கொள்கை ரீதியில் மாறுபட்டு பல பிரிவுகளாகப் பிரிந்ததாகும்.

இஸ்லாம் நிறத்தால், மொழியால், வம்சத்தால், வசதி வாய்ப்புக்களால், அந்தஸ்தால் மனிதர்களைப் பிரிக்கவில்லை. முஸ்லிம்கள் குர்ஆன் ஸுன்னாஹ் என்ற கொள்கையின் பால் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு சமுதாயம். அந்த ஒன்றுபட்ட சமுதாயத்தின் பாலே உலக மக்கள் அனைவரையும் பிளவுபட்ட எல்லா பிரிவினரையும் அழைக்கின்றது. இருந்தபோதும் தனக்குரிய வழியைத் தெரிந்து கொள்வதில் ஒவ்வொரு மனிதனுக்குமான சுதந்திர உணர்வை இஸ்லாம் வழங்கியுள்ளது. இஸ்லாத்தில் நிர்ப்பந்தம் இல்லை என அல்குர்ஆன் கூறுகின்றது. அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழ்பவர்களையே அல்குர்அன் அல்லாஹ்விடத்தில் மேன்மையானவர்கள் எனக் கூறுகின்றது.

உலகின் அல்லாஹ்வின் ஆட்சி நிலைநாட்டப்பட்ட ஒருநாடாக அல்லது சிறுபான்மையினராக இருந்தால் கூட அந்நிய மக்களோடு நீதியாக நற்பண்புகளோடு நடந்து கொள்வதையே இஸ்லாம் வலியுறுத்துகிறது. பெரும்பான்மையினத்தோடு சேர்ந்து மற்றொரு சிறுபான்மைக்கெதிராக செயல்படவோ, அல்லது சிறுபான்மையினரோடு இணைந்து பெரும்பான்மைக்கெதிராக செயல்படவோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை. சில மொழிகளும் சில இனங்களும் வாழக்கூடிய இந்நாட்டில் முஸ்லிம்களெனக் கூறக்கூடியவர்களிடம் நடு நிலைமையும், நேர்மையும் முன்மாதிரியும் தேவை.

மிக அண்மைக் காலத்தில் பொதுபலசேனா என்ற அமைப்பு சில பௌத்த பிக்குகளின் தலைமையில் இஸ்லாத்திற்கெதிராக மனிதநேயமற்ற வன்முறைகளில் ஈடுபட்டு வருவதும் இது தூங்கிக் கொண்டிருந்த ஒருசில இனவாத அமைப்புக்களுக்கும் உந்து சக்தியை அளித்துள்ளது. இந்நிலையில் அரசின் செயல்பாடுகள் கூட திருப்தி அளிப்பதாக இல்லை. அரசின் தலைமைகள் கூட இதற்கு உரமூட்டுவதாகவே உள்ளன.

1. ஜம்மியத்துல் உலமா சபையுடனான ஆரம்பப் பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதி உங்களிடம் பல தீவிர இயக்கங்கள் இருக்கின்றன என பொது பலசேனா குற்றம் சாட்டுகிறது என்ற கருத்தை முன்வைத்த நிலையில் பாதுகாப்பு செயலாளரின் அழைப்பின் பேரில் பல இயக்கங்களின் தலைமைகள் அழைக்கப்பட்டு புலனாய்வுத் துறையினால் கருத்தறியப்பட்டது.
2. பொதுபலசேனாவின் தலைமையகம் பாதுகாப்பு செயலாளரால் திறந்து வைக்கப்பட்டதும், அவரின் உரையில் “மெத்தசெவன’ கலாசார மற்றும் பயிற்சி நிறுவனமானது குறித்த நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுக்க மிகப்பொருத்தமானவர்களிடமே கையளிக்கப்பட்டுள்ளது. எங்களது கலாசாரம் பிக்குகளாலேயே பாதுகாக்கப்படுகின்றது என்ற கருத்தும் பொதுபலசேனா இஸ்லாத்திற்கு எதிராக நாடெங்கும் ஏற்பாடு செய்துள்ள மகாநாட்டுக்கு வலுசேர் க்கிறது.

பொதுபலசேனா மூலம் அநீதிக்கு இலக்கானவைகள்


1. மஸ்ஜிதுகள் தாக்கப்பட்டமை
2.மஸ்ஜிதுகளை அப்புறப்படுத்தல், கட்டவிடாமல் தடுத்தலுக்கான முயற்சிகள்.
3.ஹலால் சம்பந்தப்பட்டவை
4.பர்தாவை அகற்றல்
5.முஸ்லிம்களின் வியாபார நிலையங்களுக்கு பெரும்பான்மை மக்கள் செல்லக்கூடாதென்ற பிரசாரம்.
6. பலதார மணம்
7. இஸ்லாமிய வங்கிகள்
8. காதி நீதிமன்றம்.
9. வெளிநாடுகளிலிருந்து மார்க்க அறிஞர்கள் வருவதற்கான தடை.


இவ்வாறு நீண்டுகொண்டே செல்கின்றன.

இத்தகைய ஒரு சூழலில் அரசுக்கும் நாட்டின் பெரும்பான்மை, மற்றும் சிறுபான்மையினராகிய ஏனைய இனங்களுக்கும் ஒரு சமூகத்தின் நல்ல செயல்களைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத பெரும்பான்மை இனத்தின் சிறு கும்பலாகிய பொதுபலசேனாவுக்கும் எம் சமூகத்தின் சார்பில் சரியான ஆணித்தரமான ஒரு செய்தி முன்வைக்கப்பட்டதா?
ஹலால் சம்பந்தமான முடிவு எம் சமூகத்தினராலேயே பல வகையில் விமர்சனத்துக்குள்ளாகி இன்னும் இழுபறிக்குள்ளாகிக் கொண்டிருக்கக் கூடிய நிலையில் எம் சமூகத்தின் பலவீனத்தை அரசும் இனவாத சக்திகளும் விளங்காமல் இருக்குமா?
நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ளாத வரையில் அலலாஹ்வும் உங்களுக்குப் புரிந்துள்ள அருளை மாற்றுவதில்லை என அல்குர்ஆன் அறிவிக்கின்றது.

எண்ணற்ற அமைப்புக்கள், வீர முழக்கமிடும் மார்க்க அறிஞர்கள், கல்வியில் சிறந்தவர்கள், பொருள்வளமிக்கவர்கள், ஆயுத பல மிக்கவர்கள் என்ற நிலையில் 50 க்கு மேற்பட்ட நாடுகளில் பரந்து விரிந்த ஒரு சமூகம் இருந்தும் இந்த இலங்கையில் மட்டுமல்ல அந்த நாடுகளில் கூட இஸ்லாத்தின் கூட்டமைப்பு தகர்க்கப்பட்டதன் விளைவே இஸ்லாம் பற்றிப் பேசக்கூடியவர்களுக்கான தலைகுனிவும் இழிவும் எல்லா இடங்களிலும் ஏற்பட்டுள்ளன. அல்குர்ஆன் இன்னோர் இடத்தில் அல்லாஹ்வின் அருளை நிராகரிப்பைக் கொண்டு மாற்றி தனது மக்களை அழிவுக்கிடங்கில் இறக்கி விட்டவர்களைப் போல் நீங்கள் ஆக்கிவிட்டீர்களா? என வலியுறுத்தக்கூடிய ஒரு வசனமும் வருகின்றது. பிற சமூகங்களை ஒரு சமுதாயத்தின் பால் அழைக்க முதல் அந்த சமுதாயம் வஹீயாகிய குர்ஆன், ஸுன்னாஹ் அவ்விரண்டையும் ஆதாரமாகவைத்து இயங்க ஒரு கூட்டமைப்பின் பால் ஒன்றிணைய வேண்டும். இல்லாவிட்டால் ஒரு சிதறிய சமூகத்தின் செயல்பாடு விரோதிகளுக்கு எம்மைப்பற்றி விமர்சிக்க பல வாய்ப்புக்களை ஏற்படுத்துவதோடு எங்களைக் காட்டிக்கொடுக்கக்கூடியவர்கள் எங்களிடமிருந்தே உருவாகும். ஒவ்வொருவரும் நாங்கள் இஸ்லாத்திற்காக முஸ்லிம்களின் நன்மைகளுக்காகவே இவற்றைச் செய்கிறோம் என்ற கருத்தையே முன்வைப்பர்.

கருத்து முரண்பாடுகள் ஏற்படுவது சகஜமே, சிலபோது குர்ஆன் ஸுன்னாஹ்வை விளங்குவதிலும் முரண்பாடுகள் ஏற்படலாம். இதனையே தவறாக விளங்கி தங்களின் மனம் உள்வாங்கக் கூடியவைகளை வைத்து இயக்கங்களை உருவாக்கினார். தற்போது ஏதோவொன்றை விளங்கிய நிலையில் வேற்றுமையில் ஒற்றுமை, கூட்டமைப்பு தலைமைத்துவம் என்ற கருத்துக்களும் பரவலாகப் பேசப்படுகின்றன.

இறுதித்தூதர் (ஸல்) அவர்களின் காலத்திலும் அவர்களின் மறைவுக்குப் பிந்திய காலத்திலும் கருத்து முரண்பாடுகள் சில போது குர்ஆன் ஸுன்னாஹ்வை விளங்குவதில் முரண்பாடுகள் ஏற்பட்டேயுள்ளன. இவ்வாறான கட்டங்களில் அவர்கள் இயக்கங்களை உருவாக்கவில்லை. முஸ்லிம்கள் கூட்டமைப்பை தகர்க்காமலேயே சகல பிரச்சினைகளையும் ஒரே தலைமைத்துவத்தின் கீழ் உள்வாங்கித் தீர்த்துக் கொண்டனர். முரண்பாட்டாளர்கள் பிளவுகள் மூலம் வெளியேறினார். இன்றைய காலகட்டம் இந்த இலங்கை மண்ணில் மடடுமல்ல உலகெங்கும் இஸ்லாம் என்ற பெயரில் பிளவுபட்ட பல சமூகங்களே வாழ்கின்றன.

அல்லாஹ் ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கு ஒரு மேலான உவமானத்தை அல்குர்ஆனில் கூறுகிறான். வானத்தையளாவிய கிளைகளையும் நிலத்தில் ஆழமாகப் பாய்ந்த வேர்களையும் கொண்ட ஒரு நல்ல விருட்சத்திற்கு ஒப்பாகும். மற்றொரு இடத்தில் மெய்யாகவே விசுவாசம் கொண்டவர்களைப் பற்றி குறிப்பிடும் போது “உங்களில் எவரேனும் மெய்யாகவே விசுவாசங்கொண்டு நட்கருமங்களைச் செய்தால் அவர்களுக்கு முன்னர் சென்றவர்களை (பூமிக்கு) அதிபதிகளாக்கிய பிரகாரமே இவர்களையும் நிச்சயமாக பூமிக்கு அதிபதிகளாக்கி வைப்பதாகவும் அவன் விரும்பிய மார்க்கத்தில் இவர்களை ஸ்தீரப்படுத்திவைப்பதாகவும் இவர்களுடைய பயத்தை அமைதியும் பாதுகாப்புமாக மாற்றி விடுவதாகவும் நிச்சயமாக அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். (அல்குர்ஆன் 24:55)

மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற முடியாத நாட்டிலிருந்து வெளியேறும்படி அல்குர்ஆன் கூறுகின்றது. ஆனால் அப்படியான ஒரு நிலையில் நிர்ப்பந்தத்தில் பக்கத்து நாடு அகதிகளைப் பொறுப்பேற்கும் நாடாக அமையலாம். ஆனால், இஸ்லாத்திற்காக அவர்களைப் பொறுப்பேற்கக் கூடிய இஸ்லாமிய ஆட்சி மலரக்கூடிய நாடுகள் ஒன்றுகூட இல்லை. அல்லாஹ் தனது வேதத்தில் யுத்தம் முடிவுற்று நாடு சமாதானத்திற்குட்பட்டதன் பின்னர் விசமம் செய்ய முற்படாதீர்கள் என்ற உண்மையை வெளிப்படுத்துகின்றான்.

ஆனால் இந்த நாட்டில் யுத்தம் முடிவுற்று சமாதானம் ஏற்படுவதற்கு பதிலாக இனங்களுக்கு மத்தியில் விரோதத்தையும் குரோதத்தையும் வளர்க்கும் முயற்சியில் சில சக்திகள் ஈடுபட்டு வருகின்றன. பெரும்பான்மை இனத்தின் சில தீய சக்திகள் ஏனைய சமூகங்களின் சிறுபான்மை இனத்தை அடிமைப்படுத்த முயல்கின்றது. இதற்கு அரசும் துணைபோகின்றது.
முஸ்லிம் நாடுகள் எனக்கூறக்கூடிய அரசுகள் தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு உலக நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதேயல்லாமல் அல்லாஹ்வுக்காக என்ற எந்த நோக்கமும் அவர்களிடம் காண்பதற்கு இல்லை. அவ்வாறு ஒன்றிருந்தால் பலஸ்தீனம், பர்மா, ஈராக், சிரியா, மாலி, காஷ்மீர், எகிப்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் பட்டியல் மேலும் நீண்டுகொண்டேதான் செல்லும். ஒரே இனத்திற்குள் படுகொலைகள் தொடருமா? இஸ்ரேல், கம்யூனிஸ், மேற்கத்திய நாடுகளின் மேலாதிக்கத்துக்கு இடம் இருக்குமா?

இந்த நாட்டிலோ உலகின் எந்தப் பகுதிகளாக இருந்தாலும் அநியாயமாக மனிதப்படுகொலைகள் இடம்பெறாமல் தடுக்கவும் நீதி அடக்குமுறைகள் ஒடுக்கப்பட்டு மனித சமூகங்கள் நிம்மதியாக. அமைதியாக வாழ வேண்டுமாக இருந்தால் முஸ்லிம்களெனக் கூறக்கூடியயவர்களின் பங்களிப்பு மிக அவசியம். எல்லாப் பிரிவுகளிலிருந்தும் ஒதுங்கி வஹீயை மட்டும் பின்பற்றி ஒரே கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் கீழ் முஸ்லிம் என்ற பெயரில் மட்டும் நாம் ஒன்றிணைவதன் மூலமே பேரருளாளனான அல்லாஹ்வின் உதவிகொண்டு இஸ்லாத்தின் இலக்கை காணமுடியும். அல்லாஹ் இஸ்லாத்தின் மேல் ஆர்வம் கொண்டுள்ள ஒவ்வொருவருக்கும் இதற்கான தெளிவை வழங்க வேண்டும். அல்ஹம்துலில்லாஹ்!

 

(மனிதன் சஞ்சிகை ஆசிரியர் எம்.இம்தியாஸ் தாஸிம்)

 

நன்றி : நவமணி

No comments