Breaking News

பொது பல சேனாவின் பின்னணியில் நான் இல்லை : கோத்தாபய

4-14-2013 6-43-31 AM பொது பல சேனா அமைப்பினரின் பின்னணியில் நான் செயற்படுவதாகவும் அவ்வமைப்புக்குரிய உதவிகளை நான் செய்து வருவதாகவும் மேற்கொள்ளப்பட்டுவரும் பிரச்சாரத்தில் எவ்விதமான உண்மையும் இல்லை எனவும் அவ்வமைப்பின் பின்னணியில் தான் இல்லை எனவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம்  கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகள், கிழக்கு மாகாணத்திலுள்ள ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதி நிதிகள் மற்றும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதி நிதிகளை  கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பொது பல சேனா என்ற அமைப்பின் உறுப்பினர்களை எனக்கு மதகுருமார் என்ற அடிப்படையில் தெரியும். அந்த அடிப்படையிலே அவர்களுடனான உறவு உள்ளது. மாற்றமாக பொது பல சேனாவின் பின்னணியில் நான் இருப்பதாக கூறப்படும் செய்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை.

இந்நாட்டில் முஸ்லிம்களுக்கோ அல்லது எந்த ஒரு சமூகத்துக்கோ எதிரான செயற்பாடுகளுக்கு நாம் ஒரு போதும் துணைபோக மாட்டோம். நாட்டில் அனைவரும் சுமுகமாக வாழும் சூழலை ஏற்படுத்தவே நாம் முயற்சிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

 

நன்றி : விடிவெள்ளி

No comments