இஸ்லாத்தைக் காப்பது அல்லாஹ்வின் பணி
மனிதன் காலத்தாலும் இடத்தாலும் மிகவும் அற்பமானவன். இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டவன் மனித வாழ்வு பற்றிய தத்துவத்தை இலகுவாக புரிந்து கொள்வான். படைத்த எல்லாம் வல்ல இறைவனுடைய சக்தியைப் புரிந்து கொள்வதற்கும் இது ஒரு அடிப்படை விதியாகும்.
மனிதன் காலத்தால் அற்பமானவன் என்பதனை நபியவர்கள் பின்வருமாறு புரியவைத்தார்கள். “எனது உம்மத்துடைய ஆயுள்காலம் 60 க்கும் 70 க்கும் இடைப்பட்ட ஆண்டுகளாகும் என்ற சரியான தகவலை நபியவர்கள் வெளியிட்டுள்ளார்கள். பல லட்சம் ஆயுள் கொண்ட ஒரு படைப்புதான் இப் பிரபஞ்சம். இதன் ஆயுளுடன் ஒப்பிடும் போது மனித வாழ்க்கை எவ்வளவு சிறியது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. இவ்வுலகில் மரணத்தை வென்ற எவரும் இல்லை என்பதும் மனித வாழ்வின் நிலையற்ற தன்மைக்கு எடுத்துக்காட்டாகும்.
அடுத்து, மனிதன் இடத்தால் அற்பமானவன் என்ற உண்மையையும் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பிரபஞ்சத்தில் பல லட்சம் சூரிய குடும்பங்கள் உள்ளன. அதில் ஒரு விசித்திரமான சூரிய குடும்பம்தான் எமது பூகோள சொந்தங்கள் இந்தப் புவியில் பல கண்டங்கள். கண்டத்துக்குள் பல நாடுகள். ஒரு நாட்டில் பல நகரங்கள். ஒரு நகரத்துக்குள் பல கிராமங்கள். அக்கிராமத்தில் உள்ள பல குடும்பங்களில் உள்ள ஒரு குடும்பத்தின் உறவுதான் ஒரு மனிதனாவான். இப்படிப் பார்க்கும் போது இடத்தால் மனிதனுடைய அற்பத் தன்மை இலகுவாகப் புரிகின்றதல்லவா?
இப்பிரபஞ்சத்தைப் படைத்த அல்லாஹ்தான் இவ்வளவு அற்பமான மனிதனைப் படைத்தான். இப்பிரபஞ்சத்துக்கு பல லட்சம் வருட ஆயுளைக் கொடுத்த அல்லாஹ்தான் மனிதனுக்கு மிகச் சிறிய வாழ்நாளை விதித்தான். ஏனைய பிரமாண்டமான படைப்புக்களும் மனிதனை ஒப்பிடுகையில் அல்லாஹ்வுடைய வல்லமை எம்மாத்திரம் என்ற வியத்தகு உண்மை விளங்கிவிடுகின்றது.
இறைவன், தான் நாடியதைப் படைக்கும் சக்தி படைத்தவன். அல்லாஹ்வுக்கே வானங்கள், பூமியினுடைய சகல அதிகாரங்களும் உடையன. அவன்தான் இப்பிரபஞ்சத்தைப் படைத்தான். அதற்கான திட்டம் அவனிடமே இருக்கின்றது. அவன் ஒரு தீங்கை நாடினால் யாராலும் அதனைத் தடுத்துவிட முடியாது. சகல படைப்புக்களையும் படைத்து போஷிப்பவன் அவன் ஒருவனே ஆகும்.
இது இவ்வாறிருக்க இன்று எமது நாட்டிலுள்ள ஒரு கும்பல் அறியாத்தனமாக சமூக ஊடகங்களில் மிகவும் கீழ்த்தரமான முறையில் இஸ்லாத்துக்கு எதிராக பொய்யான விமர்ஷனங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதனால் அனைத்தையும் படைத்த ஏக இறைவனைத்தான் இவர்கள் பரிகசிக்கிறார்கள். அவர்கள் விளையாட்டுக்கு எடுத்துக் கொண்டுள்ள புனித அல்குர்ஆன், வேறு யாருடையதும் அல்ல. உலக இரட்சகனான அல்லாஹ்வுடையது.
அடிப்படைகள் எதுவும் இல்லாமல் அர்த்தமற்ற கதைகளைக் கூறி கேலிச் சித்திரம் வரைந்து இக்கும்பலினால் விமர்சிக்கப்படும் நபி வேறு யாருமல்ல. சர்வலோக இரட்சகனான அல்லாஹ்வுடைய இறுதித் தூதர். உலகத்துக்கு அருட்கொடையாக வந்த உத்தம நபி முஹம்மத் (ஸல்) அவர்களையாகும்.
இன்னும், சமூக ஊடகங்களிலும், பொது ஜன ஊடகங்களிலும் கண்ணை மூடிக் கொண்டு அடிநுனி இல்லாது இவர்களினால் விமர்சிக்கப்படும் சட்டங்கள் வேறு ஒன்றுமல்ல. உலகை வடிவமைத்து அதில் வாழ்க்கையை அமைத்துத் தர தகுதியான அல்லாஹ்வினுடைய சட்ட ங்களையாகும்.
மட்டுமல்லாது, மோஷமான வார்த்தைகளினாலும் பொய்யான குற்றச் சாட்டுக்களையும் சோடித்து கேலி செய்யும் சமூகத்தவர்கள் வேறு யாருமல்லர். சர்வ வல்ல அல்லாஹ்வையும் அவனால் வழங்கப்பட்ட தூய மார்க்கத்தையும் ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள்.
உலகில் எந்தவொரு மூலை முடுக்கிலும், எந்தவொரு சமூகத்தாலும் இன்னுமொரு சமூகத்துக்கு நடைபெறாத ஒரு மோஷமான நடைமுறை ஜனநாயகமுள்ள, மதச் சுதந்திரம் மதிக்கப்படும் ஒரு நாடான எமது தாய் நாட்டில் அரங்கேருகின்றது. ஒரு மத்தைச் சேர்ந்த சிலர் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களையும் அவர்கள் புனிதமாக கருதும் சன்மார்க்க அம்சங்களையும் இழிவாக சித்திரித்து வருகின்றனர். பகிரங்கமாக வெகுசன ஊடகங்களில் பேசி வருகின்றனர்.
பல்லின சமூகமாக அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ்நது வரும் இந்நாட்டில், ஒரு சாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தி குளிர்காய விரும்புகிறது இந்தக் கூட்டம். இதிலும் கவலையான விடயம் என்னவெனில், சில வெகுசன ஊடகங்களுக்கும் அதிகாரத்திலுள்ள சிலரும் இவர்களைப் போசித்து வளர்ப்பதாகும்.
அகிம்சையைப் போதிக்கும் உலகிலுள்ள பிரபலமான ஒரு மதத்தைச் சேர்ந்த சில போதகர்கள் இவ்வாறு நடந்து கொள்வது ஆச்சரியமாகவுள்ளது. அதிலும், இனவாத நச்சுக் கருத்துக்களை இன்னொரு சிறுபான்மை சமூகத்தின் மீது கக்கும் செயல்பாட்டை கட்டவிழ்த்து விட்டுள்ள இவர்கள் விடயத்தில், ஏனைய மதகுருக்களின் மௌனம் முழு முஸ்லிம் சமூகத்தையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.
ஒரு சமூகத்தின் மீது தவறான கற்பனைகளை வளர்த்துக் கொண்டு, பொய்யான கட்டுக் கதைகளை இட்டுக்கட்டும் இத்தகையவர்களது செயற்பாட்டினால், சர்வதேச ரீதியில் அபகீர்த்திக்கு உள்ளாகிக் கொண்டிருப்பது பல நுறு வருடங்கள் கட்டிக்காத்து வந்த அவர்களது கலாசாரமும் சமயமும் ஆகும்.
உலகத்தைப் படைத்த இரட்சகன் முன்னால் காலத்தாலும், இடத்தாலும் மிகவும் அற்பமானவன் தான் மனிதன். இந்த உண்மையை மறந்து அல்லாஹ்வுடைய தீனையே இவர்கள் விளையாட்டாகவும், பரிகாசமாகவும் எடுத்துள்ளார்கள். இது அவர்களுக்கு மிகவும் மோஷமான ஒரு நிலையை நிச்சயம் ஏற்படுத்திவிடும். அல்லாஹ் அல்குர்ஆனில் அத் தவ்பா 32 ஆவது வசனத்தில் பிரஸ்தாபிக்கும் விடயம் இன்றைய சூழ்நிலையை காட்சிப்படுத்துகின்றது.
“தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை ஊதி அணைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், காபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்’. முஸ்லிம்களை ஆத்திர மூட்டுவதற்காக இறை இல்லமான கஃபாவையும் புனித வழிகாட்டியான அல்குர்ஆனையும் அல்லாஹ்வினுடைய இறை சட்டங்களையும் முஃமீன்களின் உயிரிலும் மேலான அல்லாஹ்வின் இறுதித் தூதரையும் இவர்கள் மோஷமான முறையில் சமூக ஊடகங்களில் சித்தரித்து வருகின்றனர்.
இத்தகைய விசமிகளுக்கு அல்லாஹ்வின் சோதனை இருக்குமென்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. கஃபாவை இடிக்கவென பெருமைகொண்டு ஆணவத்துடன் மதம் பிடித்த யானைகளை எடுத்து வந்த ஆப்றஹா மன்னனுடைய உண்மை வரலாறு எமக்கு அல்குர்ஆன் கூறும் ஆறுதலாகும். அல்லாஹ் அவனது வீட்டைப் பாதுகாத்தான். எமது நாட்டில் இத்தகைய கூட்டம் இன்று விமர்சனத்துக்கு எடுத்துக் கொண்டுள்ள கருப்பொருளும் அல்லாஹ்வின் மார்க்கமாகும். ஆப்றஹாவின் யானைப் படையைத் தோற்கடித்த அல்லாஹ் நிச்சயம் அவனுடைய தீணைப் பாதுகாப்பான். அவன் அதற்கு சக்தி பெற்றவன் என்பது எமது அசையாத நம்பிக்கையாகும்.
இருப்பினும், மற்றுமொரு பக்கமும் பார்க்கப்பட வேண்டியிருக்கிறது. அல்லாஹ்வின் தீனுடைய காவலர்களாகிய எமது பங்களிப்பு என்ன என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். இதனை சுருக்கமாகப் புரிந்து கொள்வதற்கு இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களுடைய ஒரு பிரபலமான கூற்று போதுமானது. அவர்கள் கூறியுள்ளதாவது.
“தான் உயிரோடிருந்து இஸ்லாம் மடிவதை விட இஸ்லாம் உயிரோடிருப்பதற்காக தான் மடிவது மேல்’ இஸ்லாத்தை வைத்து மறுமை வெற்றியைப் பெறுவதற்கு முயற்சிக்காமல், இஸ்லாத்தைக் காட்டி இவ்வுலகிலுள்ள அற்ப ஆயுளை கழிக்க நினைப்பவர்களுக்கும் இஸ்லாம் எவ்வளவு தூற்றப்பட்டாலும் பரவாயில்லை. தன் உடமையும் உயிரும் பாதுகாக்கப்பட்டால் போதும் என நினைப்பவர்களுக்கும் இமாமவர்களுடைய வாழ்க்கை ஒரு சிறந்த முன்மாதிரியாகும்.
(அபூஷிபா)
நன்றி : நவனமணி
No comments