தேசிய ஷூரா கவுன்சிலை சாத்தியமாக்குவோம்

இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் நீண்ட காலமாக உணரப்பட்டு வந்த தலைமைத்துவ இடைவெளிக்கு தீர்வு காணும் நோக்கில் தேசிய அளவில் ஷூரா கவுன்சில் ஒன்று உதயமாவதற்கான சாத்தியக் கூறுகள் தென்பட ஆரம்பித்துள்ளன. அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ்வின் உதவியாலும் பொது பல சோனாவின் வருகையாலுமே இலங்கை முஸ்லிம் சமூகம் இவ்வாறானதொரு தலைமைத்துவக் கட்டமைப்பை தாபிக்கும் சிந்தனையை நோக்கி வழிநடத்தப்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை.

அண்மைக்காலமாக முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கி வரும் மதவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காணவும் முஸ்லிம் சமூகத்தை ஓரணியில் திரட்டவும் முடியாமலிருந்தமைக்கு காரணம் சமூகத்திலுள்ள ஒவ்வொரு சாராரும் வெவ்வேறு திசைகளில் பயணித்தமையேயாகும்.

குறிப்பாக ஹலால் விவகாரத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சமூகத்திலுள்ள ஏனைய தரப்புகளின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளாது அல்லது அதுபற்றிக் கருத்திலெடுக்காது மேற்கொண்ட தீர்மானங்களின் விளைவுகளை நாம் இன்று அனுபவித்துவருகிறோம்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் அரசியல்வாதிகள் ஒரு திசையிலும் உலமாக்கள் மற்றொரு திசையிலும் இஸ்லாமிய இயக்கங்கள் தமது வேலைத்திட்டங்களின் அடிப்படையிலும் கல்விமான்கள் தமது துறைகளோடு மாத்திரம் நின்றும் பயணித்து வருவதே வரலாறாகும். அவ்வப்போது சமூகத்திற்கு அச்சுறுத்தலான விடயங்கள் தோற்றம் பெறும் போது மாத்திரமே இந்த தரப்பினர் அனைவரும் ஏதேனும் ஒரு அடிப்படையில் கூடிப் பேசிவிட்டு கலைந்துவிடுவர். இவர்களுக்கிடையிலான ஒழுங்க மைக்கப்பட்ட பொறி முறை ஒன்றோ அல்லது ேவலைத்திட்டங்களோ இல்லாமையே இவ்வாறு வெறுமனே கூடிக் கலைவதற்குக் காரணமாகும்.

அவ்வாறன்றி நமது அரசியல், சமூக, கலாசார, பொருளாதார மற்றும் மார்க்க விவகாரங்களில் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமாயின் சகல துறைகளையும் சமூகத்தின் பல்வேறு தரப்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்துவோரின் கருத்துக்களும் ஆலோசனைகளும் பெறப்படுவது அவசியமாகும். அவ்வாறானதொரு மஷூராவின் அடிப்படைடையில் எடுக்கப்படும் தீர்மானமே பரகத் நிறைந்ததாக அமையும். இன்றேல் அத்தீர்மானமே பல்வேறு குறைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்துவிடும்.

அந்த வகையில் தற்போது அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஷூரா கவுன்சில் பற்றிய ஆலோசனைகளும் கருத்தாடல்களும் சம்பந்தப்பட்ட தரப்பினர் மத்தியில் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அத்துடன் இதில் உள்ளீர்க்கப்பட வேண்டியவர்கள் பற்றிய பெயர் விபரங்களும் பட்டியலிடப்பட்டு சம்பந்தப்பட்டவர்களோடு கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனாலும் துரதிஷ்டவசமாக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள தரப்பினர் மத்தியிலும் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோற்றம் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது.

இவ்வாறானதொரு பாரிய முயற்சியை மேற்கொ ள்ளும் போது கொள்கையளவில் முரண்பாடுகளும் வித்தியாசமான அபிப்பிராயங்களும் தோற்றம் பெறுவது இயல்பேயாயினும் அவை பெரிது படுத்தப்படாது ஒருமைப்பாட்டுடனும் விட்டுக் கொடுப்புகளின் அடிப்படையிலும் இந்த முயற்சிகள் முன்கொண்டு சொல்லப்பட வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

ஏனெனில் இலங்கை முஸ்லிம் சமூகமானது இன்று தான் தெரிவு செய்த அரசியல் தலைமைகளால் கைவிடப்பட்டுள்ளது. மார்க்க தலைமைத்துவமும் அவ்வப்போது எடுக்கும் முடிவுகள் விமர்சன ங்களுக்குரியதாக மாறியிருக்கின்றன.

இந்நிலையில் முஸ்லிம் சமூகத்தை சிறப்பாக வழி நடத்தவும் பிரச்சினைகள் தோற்றம் பெறும்போது உரிய காலத்திற்குப் பொருத்தமான தீர்வுகளை முன் வைக்கவும் இவ்வாறானதொரு பல தரப்பு பிரதிநிதிகள் அடங்கிய தேசிய ஷூரா கவுன்சில் ஒன்றே ஏற்றுக் கொள்ளத்தக்க தலைமைத்துவக் கட்டமைப்பாக அமைய முடியும்.

எனவேதான் நமது சமூகத்தின் இக்கட்டான நிலையைக் கருத்திற் கொண்டு தற்போது முன்னெடுக்கப்படும் இந்த தேசிய ஷூரா கவுன்சில் ஒன்றை நோக்கிய முயற்சிகளுக்கு சகல தரப்பினரையும் வேறுபாடுகளை மறந்து கைகோர்க்க முன்வருமாறு அழைப்பு விடுக்கிறோம். இந்த தருணத்தை தயவு செய்து கைநழுவ .விட வேண்டாம் எனவும் வினயமுடன் வேண்டிக் கொள்கிறோம். 

 

விடிவெள்ளி ஆசிரியர் கருத்து

No comments