சிரியா மோதலால் புகழ்பெற்ற அலப்போ பள்ளிவாசல் மினாரத் தரைமட்டம்
சிரியாவின் வரலாற்று பாரம்பரியம் மிக்க அலப்போ நகர் உமையத் பள்ளிவாசலின் மினாரத் (கோபுரம்) தகர்த்தழிக்கப்பட்டுள்ளது. இதனை சிரிய அரச ஊடகம் மற்றும் செயற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளதோடு அரசு மற்றும் கிளர்ச்சியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கிளர்ச்சியாளர்கள் 11ம் நூற்றாண்டு மினாரத்தை தகர்த்தழித்ததாக அரச செய்திச் சேவையான சானா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் அரச இராணுவத்தின் பீரங்கி தாக்குதலாலேயே இந்த மினாரத் அழிக்கப்பட்டிருப்பதாக செயற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
உமையத் பள்ளிவாசல் யுனெஸ்கோ மரபுரிமைச் சொத்துக்களில் ஒன்றாகும். இந்த பள்ளிவாசல் இருக்கும் பகுதி இந்த ஆண்டு ஆரம்பம் தொடக்கம் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. ஆனால் இந்த பகுதியை சுற்றி அரச படை தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த பள்ளிவாசலை பாதுகாக்குமாறு கடந்த ஒக்டோபரில் யுனஸ்கோ இரு தரப்பிடமும் கோரிக்கை விடுத்தது. இஸ்லாமிய உலகின் மிக அழகான பள்ளிவாசல் என இதனை யுனஸ்கோ வர்ணித்துள்ளது.
இணையதளத்தில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் பள்ளிவாசலின் மினாரத் முற்றாக அழிந்து அதன் பகுதிகள் குவியலாக காணப்படுகின்றன. 12 ம் நூற்றாண்டைக் கொண்ட பள்ளிவாசலின் ஏனைய பகுதிகளும் துப்பாக்கி மற்றும் செல் தாக்குதல்களால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
அல் கொய்தாவுடன் தொடர்புபட்ட ஜபத் அல்நுஸ்ரா படை இந்த பள்ளிவாசலை தகர்த்ததாக சானா செய்தி குறிப்பிடுகிறது. “தீவிரவாதிகள் பள்ளிவாசலின் தென்பகுதி வாயிலில் இருக்கும் மினாரத்திற்கு வெடி பொருட்களை வைத்து தகர்த்தழித்துள்ளனர்” என அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் அலப்போவில் இருக்கும் செயற்பாட்டாளர் மொஹமட் அல் காதிப் ஏ.பி.செய்திச் சேவைக்கு அளித்த தகவலில், 148 அடி உயரம் கொண்ட மினாரத்தை அரச படையின் டாங்கிகளே ஷெல் தாக்குதல் மூலம் அழிந்தன என்றுள்ளார்.
எனினும் பல மாதமாக நீடிக்கும் மோதலால் ஏற்கனவே பள்ளிவாசலின் பல பகுதிகளும் பாரிய சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. பள்ளிவாசலின் தொல் பொருட்கள், கலை வேலைப்பாடுகள் அழிக்கப்பட்டுள்ளன.
இதில் பல தொல் பொருட்கள் திருடப்பட்டுள்ளதோடு முஹம்மத் நபியின் தலைமுடியை வைத்திருக்கும் பெட்டி என நம்பப்படும் ஒரு பொருளும் சூறையாடப்பட்டுள்ளது. எனினும் பழைமையான அல்குர்ஆன் கையெழுத்து பிரதிகளை மீட்டு பாதுகாப்பாக வைத்திருப்பதாக கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். சிரியாவின் வரலாற்று பாரம்பரியம் மிக்க பல பகுதிகளையும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரச படைகள் தமது தளங்களாக பயன்படுத்தி வருகின்றனர். சிரியாவின் 6 மரபுரிமைச் சொத்துகளில் 5 மோதல் காரணமாக சேதமடைந்திருப்பதாக யுனஸ்கோ குறிப்பிட்டுள்ளது.
நன்றி : தினகரன்
Post Comment
No comments