பொது பல சேனாவின் கல்முனை மாநாடு: பொய்யான செய்தி என்கிறார் டிலந்த
கல்முனை நகரில் மாநாடு ஒன்றினை நடாத்துவதற்கான எந்தவித ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லையென பொதுபல சேனாவின் பிரதம நிறைவேற்றதிகாரி டாக்டர் டிலந்த விதானகே நவமணிக்கு தெரிவித்தார். ஊடகங்களில் இதுதொடர்பாக வெளிவந்துள்ள செய்திகளில் உண்மை கிடையாதென்றும், இதுவொரு வதந்தி என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கல்முனைப் பிரதேசத்திலுள்ள ஒருசில தமிழ் பிரமுகர்களைச் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை நடத்துவதற்குத் தீர்மானித்திருந்ததாகவும் அக்கலந்துரையாடல் கூட கல்முனையில் நடாத்தப்பட மாட்டதென்றும் பிரிதொரு இடத்தில் அதனை நடாத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கல்முனைப் பகுதியிலுள்ள சில தமிழ் பிரமுகர்களைச் சந்திப்பது தொடர்பான தகவல்களை அடிப்படையாகக் கொண்டே அங்கு பொதுபலசேனாவின் மாநாடொன்றினை நடாத்தப் போவதாக வதந்தி பரப்பியுள்ளனர். கல்முனை நகரில் மாநாடொன்றினை நடாத்துவதற்கான தேவையும் பொதுபலசேனாக்குக் கிடையாதென்றும் டிலந்த விதானகே தெரிவித்தார்.
இதேவேளை, 9ஆம் திகதி பிற்பகல் 3.00 மணியளவில் அம்பாறை நகரில் திட்டமிட்டபடி பொதுக் கூட்டமொன்று நடாத்தப்படுமென்றும் இதில் அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வதாகவும் மேலும் தெரிவித்தார்.
No comments