Breaking News

காத்தான்குடியில் சூதாட்ட விடுதியை அமைத்துக் காட்டுங்கள்: BBS சவால்

galaboda-atte-gnanasaraகொழும்பில் கசினோ சூதாட்ட மத்திய நிலையத்தை அமைக்கும் அரசாங்கம் முடிந்தால் காத்தான்குடியிலோ அல்லது  நிலாவெளியிலோ கசினோ சூதாட்ட நிலையத்தை அமைத்துக்காட்டட்டும் என பொது பல சேனா சவால் விடுத்துள்ளது.

அவ்வமைப்பின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அதன் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இந்த சவாலை முன்வைத்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்தியாவில் கசினோ சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்நாடு பொருளாதாரத்தில் அபிவிருத்தியடைந்து உலகின் மூன்றாவது வல்லரசாக திகழ்கிறது. ஏன் எம்மால் கசினோ சூதாட்டம் இல்லாமல் பொருளாதார அபிவிருத்தியை காண முடியாதா?

மது, மாது, விபச்சாரம் மற்றும் போதைவஸ்த்துக்களை பெற்றுக் கொள்ளும் சுப்பர்மார்க்கட்டே கசினோ சூதாட்ட மத்திய நிலையமாகும். இதனை கடுமையாக எதிர்க்கின்றோம். இதனை தடுப்பதற்கு உயிர்த்தியாகம் செய்யவும் தயாராகவுள்ளோம் 

யுத்தத்திற்கு பின்னர் அனைத்து மக்களையும் இணைத்துக்கொண்டு அபிவிருத்திகளை முன்னெடுத்து நாட்டின் கீர்த்தியை வரலாற்றை உலகறியச் செய்வார்களென்று எதிர்பார்த்தோம். ஆனால் பெளத்த தலைவர்கள் தேசப்பற்றாளர்கள் எனக்கூறிக் கொள்கின்றனர். அத்தலைவர்களுக்கு ஆலோசனை வழங்குபவர்கள் வெளிநாட்டில் படித்துவிட்டு அங்குள்ள கீழ்த்தரமான கலாசாரத்தை எமது நாட்டில் பரப்புவதற்கான ஆலோசனைகளை வழங்குகின்றனர். 

நாட்டை சீரழிக்கும் கபடத்தனமான ஆலோசனைகளையே நாட்டுத் தலைவர்களுக்கு வழங்குகின்றனர். பெளத்த பாரம்பரிய கலாசாரத்தைக் கொண்ட எமது நாட்டில் புராதனச் சின்னங்கள் உள்ளன. அழகிய கடற்கரை  உள்ளது. இயற்கை வளங்கள் காணப்படுகின்றன. சிறந்த கால நிலையுள்ளது. இதனை உல்லாசப் பிரயாணிகளுக்கு காண்பித்து எமது பெளத்த கலாசாரத்தை தெளிவுப்படுத்துவதன் மூலம் உல்லாசப் பிரயாணத்துறையை மேம்படுத்தலாம். ஆனால் அதற்கு மாறாக எமது அழகிய கடற்கரை பிரதேசத்தில் அரை நிர்வாணத்துடனான பெண்களைக் காட்டி விளம்பரம் செய்கின்றனர். 

கசினோ சூதாட்ட பிரேரணையை அரசாங்கம் கொண்டு வந்த போது அதனை ஒரு பிரதேசத்திற்கு கட்டுப்படுத்துவதாகவே தெரிவித்தது. ஆனால் அதனையும் அரசாங்கம் பின்பற்றுவதில்லை. 

டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் 350 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 36 மாடிகள் 400 அறைகளுடனான ஹோட்டல் அமைத்து அதில் கசினோ சூதாட்டத்தையும் நடத்தவுள்ளனர். அரசாங்கம் ஏன் இதற்கு அவசரமாக அனுமதி வழங்க வேண்டும். இந்த சூதாட்ட மத்திய நிலையத்துக்கு மட்டுமல்ல நாட்டில் அனைத்து சூதாட்டங்களையும் எதிர்க்கின்றோம். சூதாட்டத்தை தடுக்க போராட்டங்களை நடத்துவோம் அத்தோடு உயிர்த்தியாகம் செய்யவும் பின்னிற்க மாட்டோம் என்றும் அவர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.

No comments