13 இறுதித் தீர்மானம் இன்று…
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் அவசரக் கூட்டம் இன்று மாலை அலரி மாளிகையில் இடம்பெறுகிறது.
இந்தக் கூட்டத்துக்கு அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமை ஏற்கவுள்ளதாக, கட்சியின் நிர்வாகச் செயலர் ஆரியசேன தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் முக்கியமாக, 13ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு, ஆளும் கூட்டணி கட்சிகளான ஜாதிக ஹெல உறுமயவும், தேசிய சுதந்திர முன்னணியும் எதிர்ப்புத் தெரிவித்து வருவது, வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடாத்துவது குறித்து ஆராயப்படவுள்ளது.
அத்துடன், 13ஆவது அரசமைப்பை முற்றாக இரத்துச் செய்யாவிட்டால், வீதியில் இறங்கிப் போராடப் போவதாக, சிங்கள ராவய, பொது பல சேனா போன்றவற்றின் தலைமையில் 27 சிங்கள பெளத்த அமைப்புகள் விடுத்துள்ள எச்சரிக்கை குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
மேலும், கிழக்கு மாகாணசபையின் அமர்வுகளை நான்கு அமைச்சர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களும் புறக்கணித்து வருவது, வடமேல் மாகாணசபைக்குத் தேர்தலை நடாத்துவது குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments