13 ஆம் திருத்தச் சட்டத்தை திருத்த அமைச்சரவை ஒருவார கால அவகாசம்
13 ஆம் திருத்தச் சட்டத்தை திருத்துவதற்கான யோசனைகளையும் கருத்துக்களையும் சமர்பிப்பதற்கு அரசில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கு ஒரு வாரகால அவகாசத்தினை அமைச்சரவை இன்று வழங்கியுள்ளது.
இன்று ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவையில் மு.கா.தலைவர் ஹக்கீமும் மேலும் சில அமைச்சர்களும் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அது தொடர்பில் ஆராயவும் கருத்துக்களையும் யோசனைகளையும் உள்வாங்கவுமே குறித்த ஒரு வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அரசு என்ற ரீதியில் 13 ஆம் திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உள்ளநிளையிலேயே இது தொடர்பில் அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
மாகாண சபைகளை ஒன்றிணைக்க ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை மாற்றுவதற்காகவே புதிய திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன. இலங்கையில் மாகாண சபைகள் இணைந்து சுயமாக இன்னுமொரு அரசை ஏற்படுத்த முடியும்.இந்நிலைமையானது ஒற்றை ஆட்சிக்கு முரண்பாடான சந்தர்ப்பமொன்றினை தோற்றுவிக்கும். ஒரே தேசத்தில் இரண்டு அரசாங்கங்கள் செயற்படமுடியாது.
இன்றையதினம் 13 ஆம் திருத்தச் சட்டத்தை திருத்துவது தொடர்பான தீர்மானம் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட இருந்த போதும், முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சிலரின் வேண்டுகோளுக்கிணங்க எதிர்வரும் 7 நாட்களுக்கு அவர்களின் கருத்துக்களையும் யோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக அது ஒத்திவைக்கப்பட்டது என தெரிவித்தார்.
No comments