13 இன் திருத்தத்தைப் பிற்போட முடிவு
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்கள் ஒன்றிணைவதை தடுக்கும் நோக்கில் கொண்டுவர தீர்மானித்திருந்த 19 ஆவது திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் பிற்போட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான 19 ஆவது திருத்தச் சட்டம் அவசர சட்டமூலமாக செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல கடந்த வாரம் தெரிவித்திருந்தபோதிலும் அதனை தற்போது பிற்போட்டுள்ளதாகவே அறிய முடிகின்றது.
அந்த வகையில் நேற்று பிற்பகல் பாராளுமன்றக் கட்டட தொகுதியில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் 19 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவருவது தொடர்பில் எந்த விடயமும் ஆராயப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே சட்டமூலத்தை எப்போது பாராளுமன்றத்துக்கு கொண்டுவருவது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று ஏற்கனவே ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தபோதிலும் நேற்றைய தினம் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த விடயம் குறித்து ஆராயப்படவில்லை என்றே பாராளுமன்றத் தகவல்கள் தெரிவித்தன.
அத்துடன் 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் அதன் அதிகாரங்கள் தொடர்பாகவும் ஆராயும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை முன்மொழிவது குறித்தும் எந்த விடயமும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்படவில்லை என்றும் அறிய முடிகின்றது.
13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து ஆராயும் பாராளுமன்றத் தெரிவுக்குழு செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டு புதன்கிழமையே இயங்க ஆரம்பிக்கும் என்று ஏற்கனவே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறியிருந்தார். எனினும் அது தொடர்பாகவும் எதுவும் பேசப்படவில்லை என்றே தெரியவருகின்றது.
மேலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரான அமைச்சர் ராஜித சேனாரட்னவும் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை செய்யவேண்டாம் என்று பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும் இரண்டு மாகாணங்கள் இணைவதை தடுப்பதற்காக 13 ஆவது திருத்தச் சட்டத்தின் 37 ஆவது பிரிவை நீக்கிவிடுவதற்கு நாம் எதிர்ப்பு வெளியிடவில்லை எனவும் ஆனால் அதனை 19 ஆவது திருத்தச் சட்டமாக கொண்டுவரக்கூடாது என்றும் அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டிருந்தார்.
இது இவ்வாறு இருக்க 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்திய பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இந்தியாவிடம் இருந்து ஏதாவது அழுத்தங்கள் வந்துள்ளனவா என்று கேட்டதற்கு பதிலளித்திருந்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல 13 ஆவது திருத்தச் சட்டத்தில் எவ்விதமான திருத்தங்களையும் செய்யவேண்டாம் என்று இந்தியாவிலிருந்து அரசாங்கத்துக்கு எவ்விதமான அழுத்தமும் வரவில்லை. எமது நாட்டு மக்களுக்குத் தேவையான வகையிலேயே தீர்மானம் எடுப்போம் என குறிப்பிட்டிருந்தார்.
எனினும் ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்கள் ஒன்றிணைவதை வலியுறுத்தும் 13 ஆவது திருத்தத்தின் பிரிவை நீக்கவும் மாகாண சபைகள் குறித்த சட்டமூலம் ஒன்றை கொண்டுவரும்போது அனைத்து மாகாண சபைகளினதும் அங்கீகாரத்தை பெறவேண்டும் என்ற பிரிவை நீக்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்தது.
முதலாவது திருத்தத்தை 19 ஆவது திருத்தச் சட்டமூலமாக கொண்டுவரவும் இரண்டாவது விடயம் குறித்து ஆராய பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பது என்றும் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments