Breaking News

அஸாத் சாலி விடுதலை தொடர்பில் எமக்கு தெரியாது: ஹுலுகல்ல, புத்திக சிறிவர்தன, மொஹான் சமரநாயக

laxmanhullugalea பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியின் விடுதலை குறித்து தமக்கு ஒன்றும் தெரியாது என்று தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல, பொலிஸ் பேச்சாளர் புத்திக சிறிவர்தன மற்றும் ஜனாதிபதி பேச்சாளர் மொஹான் சமரநாயக ஆகியோர் தெரிவித்தனர்.

கடந்த 2 ஆம் திகதி வியாழக்கிழமை கொலன்னாவ பகுதியில் வீடொன்றில் வைத்து கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும் தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளருமான அசாத் சாலியை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரித்து வந்த நிலையில் சரியாக 9 நாட்களின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அசாத்சாலி மீதான தடுப்புக் காவல் உத்தரவை விலக்கிக் கொண்டதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.

எனினும் இவ்விடுதலை தொடர்பில் முழுமையானதும் உத்தியோகபூர்வமானதுமான தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக முதலில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அசாத் சாலி விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் இது குறித்து தனக்கு அறிவிக்கப்படவில்லை. ஆகவே தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்துடன் தொடர்பு கொண்டு கேட்குமாறு கூறினார்.

இதனையடுத்து தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷமன் ஹுலுகல்லவுடன் தொடர்பு கொண்டு வினவிய போது அசாத் சாலியின் விடுதலை தொடர்பில் தமக்கு ஒன்றும் தெரியாது. இதனை ஜனாதிபதியின் அலுவலகத்திலேயே கேட்க வேண்டும் எனக் கூறினார்.

அதற்கு பின்னர் ஜனாதிபதி பேச்சாளரான மெஹான் சமரநாயக்கவுடன் தொடர்பு கொண்டு அசாத் சாலிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளாரா அல்லது அசாத் சாலி மன்னிப்பு கோரினாரா? என்று வினவிய போது அசாத்சாலியின் விவகாரம் பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடையது. தனக்கு இது குறித்து அறிவிக்கப்படவில்லை என கூறினார்.

No comments