தேவாலயத்தில் தொழுகை நடக்கிறது! நம்பலாமா?
இலங்கை முஸ்லிம்கள் தங்களுக்கே உரித்தான பள்ளிவாசல்களில் கூட தொழுகை நடத்துவதற்கு எதிர்ப்புகளும் மறுப்புகளும் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில் இங்கிலாந்தில் உள்ள தேவாலயம் ஒன்று தமது வளாகத்தில் தொழுகை நடத்த முஸ்லிம்களுக்கு வாசலைத் திறந்து கொடுத்துள்ள செய்தி நிச்சயம் ஆச்சரியம் தரும் ஒன்றுதான்.
ஸ்கொட்லாந்தின் மூன்றாவது பிரபல்யம் வாய்ந்த நகரான அபெர்டீனில் உள்ள சென்.ஜோன்ஸ் எபிஸ்கோபல் தேவாலயமே வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்கள் தமது ஆலய வளாகத்தில் ஜும்ஆ தொழுகை நடத்துவதற்கு தானாகவே முன்வந்து அனுமதி வழங்கியுள்ளது.
இந்த சென்.ஜோன்ஸ் தேவாலயத்திற்கு மிக அருகில் இருக்கும் செய்யத் ஷா முஸ்தபா ஜாமிஆ மஸ்ஜித் மிகவும் சிறிய பரப்பளவைக் கொண்டதாகும். இங்கு வெள்ளிக் கிழமைகளில் அதிகமானோர் ஜும்ஆ தொழுகைக்கு வருவதால் வீதியிலேயே தொழுகை நடத்த வேண்டி ஏற்படுவது வழக்கம். முஸ்லிம்கள் இவ்வாறு மழையிலும் குளிரிலும் வீதியில் நின்று தொழுவதைக் கண்ணுற்று கவலை கொண்ட இந்த தேவாலயத்தின் தலைமை மதகுரு ஐசாக் பூபாலனே இவ்வாறு முஸ்லிம்களுக்காக தேவாலயத்தின் கதவுகளைத் திறந்து கொடுத்த முன்மாதிரிக்குச் சொந்தக்காரராவார்.
தான் ஏன் இவ்வாறானதொரு வரலாற்றுப் புகழ்மிக்க தீர்மானத்தை மேற்கொண்டேன் என்பதற்கான காரணத்தை அவரே கூறுகிறார்:
வெள்ளிக்கிழமைகளில் இந்தப் பள்ளிவாசல் மக்களால் நிரம்பி வழியும். மக்கள் மழையில் நனைந்து கொண்டும் குளிரில் நடுங்கிக் கொண்டும் தொழுது கொண்டிருப்பதை அவ்வழியால் செல்லும் நான் அடிக்கடி அவதானிப்பதுண்டு. பனிக் காலத்தில் வீதி ஓரமாக நின்று தொழுவதை பார்க்கவே எனக்கு கஷ்டமாக இருக்கும். முஸ்லிம்கள் தொழும்போது அவர்களது கால்களும் கைகளும் நிலத்தில் படுவதுண்டு. இவ்வாறு அவர்கள் வீதியோரத்தில் கரடு முரடான நிலத்தில் கால்களையும் கைகளையும் பதிப்பது எனக்கு மிகவும் கஷ்டமாகவிருந்தது.
எமது தேவாலயமானது பள்ளிவாசலுடன் ஒப்பிடுகையில் மிகவும் விசாலமானது. வெள்ளிக்கிழமைகளில் குறித்த நேரத்தில் தேவாலயத்தில் மக்கள் கூடுவதில்லை. அந்த நேரத்தில் பல அறைகள் வெற்றிடமாகவே இருக்கும்.
எமது அயலவர்கள் கஷ்டப்படும்போது நாம் அதனைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவேதான் முஸ்லிம்களுக்கு தேவாலயத்தின் கதவுகளைத் திறந்து கொடுப்பதே சிறந்தது எனத் தீர்மானித்தேன். இதுபற்றி தேவாலய நிர்வாகத்துடன் கலந்துரையாடியபோது முதலில் சிலர் இது நமது பிரச்சினை அல்லவே என்றார்கள். என்னைப் பொறுத்தவரையில் இது மிகப் பெரும் பிரச்சினையாகும். அவர்கள் கஷ்டப்படுவதை நான் எனது கண்களால் பார்க்கிறேன். அயலவர்களோடு நேசமாக நடக்கும்படியே பைபிள் கூறுகிறது. பைபிளின் வழிகாட்டல்களை புறக்கணித்து எம்மால் நடக்க முடியாது.
வணக்க வழிபாட்டில் ஈடுபடுவது ஒன்றும் தவறான விடயமல்ல. வணக்க வழிபாட்டை ஊக்குவிப்பதே எனது கடமையாகும். இந்த உதவி மதம் என்பதையும் தாண்டி மனிதாபிமானத்தின் அடிப்படையில் அமைந்தது என்பதே இங்கு முக்கியமானதாகும். நாம் மதத்தால் வேறுபட்டிருப்பினும் மனிதர்கள் என்றவகையில் நாம் எல்லோரும் ஒன்றே.
கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் உறவுப் பாலத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசையாகும். அதற்கான சிறந்த சந்தர்ப்பதமாக நான் இதனைப் பயன்படுத்திக் கொண்டேன்.
இதுபற்றி முதன் முதலில் செய்யத் ஷா முஸ்தபா ஜாமிஆ மஸ்ஜித் பிரதம இமாம் அஹ்மத் மெகார்பியிடம் சொன்னபோது அவர் கூட இதில் தயக்கம் காட்டினார். அவரது தயக்கம் நியாயமானது. இதற்கு முன்னர் இவ்வாறான ஒரு முன்மாதிரி இல்லாததால்தான் இதனை ஏற்றுக் கொள்வது கடினமாகவுள்ளது. ஆனால் அவர்கள் இதனை ஏற்றுக் கொண்டபோது அது எமக்கிடையிலான உறவில் பெரும் நேர்மைய மாற்றத்தை ஏற்படுத்திற்று.
நான் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவன். நான் வளர்ந்த சூழலில் முஸ்லிம்களே அதிகம் வாழ்ந்தார்கள். அதனால் அவர்களது மத கலாசாரம் பற்றி நான் அதிகம் அறிந்து வைத்திருக்கிறேன். இதுவே இன்று இங்கிலாந்தில் அவர்களோடு நேசக்கரம் நீட்ட உதவி புரிந்திருக்கிறது என்பதை நினைக்கையில் மகிழ்ச்சியாகவிருக்கிறது என்கிறார்.
இதற்கு முன்பிருந்தே இந்த தேவாலயமும் பள்ளிவாசலும் ஒன்றோடு ஒன்று மிகவும் நட்புறவுடனேயே தமது செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றன. 2010 கிறிஸ்மஸின்போது பள்ளிவாசலிலும் உணவுகள் வழங்கப்பட்டதோடு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. அதேபோன்று செப்டெம்பர் 11 தாக்குதலின் 10 ஆண்டுகள் நிறைவையொட்டி அதில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் இப் பள்ளிவாசலும் தேவாலயமும் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்தின. இதில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமய பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.
அமெரிக்காவில் சில தேவாலயங்களில் ஏலவே தொழுகைகள் நடக்கின்றபோதிலும் இங்கிலாந்தில் இதுவே முதல் தடவை என சென்.ஜோன்ஸ் தேவாலய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். 2011 இல் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள இரு தேவாலயங்கள் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதி வழங்கியமையானது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி : விடிவெள்ளி
No comments