அசாத் சாலி உண்ணா நோன்பு போராட்டத்தை கைவிடவில்லை': மகள் அமீனா
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அசாத் சாலி உண்ணாநோன்பைக் கைவிட்டு விட்டதாக அரசாங்கம் கூறுவதை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
தமிழ் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் துணை மேயருமான அசாத் சாலி, கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டது முதல் உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
மருத்துவமனையில் உள்ள அவர், நேற்று மாலைமுதல் உண்ணாநோன்பைக் கைவிட்டுவிட்டதாக இலங்கை பாதுகாப்பு விவகாரங்களுக்காக பேசவல்ல அதிகாரி லக்ஷ்மன் ஹுலுகல்ல இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
ஆனால், அசாத் சாலியின் உடல்நிலை இன்றும் மோசமடைந்துள்ளதாகவும் அவர் இன்னும் உண்ணாநோன்பைக் கைவிடவில்லை என்றும் அவரது மகள் அமீனா சாலி பிபிசியிடம் சற்றுமுன்னர் தெரிவித்தார்.
ஜூனியர் விகடன் பேட்டி உட்பட 18 குற்றச்சாட்டுக்கள்
இதேவேளை, அசாத் சாலிக்கு எதிராக 18 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறினார்.
தமிழகத்தில் சென்னையில் வைத்து ஜூனியர் விகடன் சஞ்சிகைக்கு கொடுத்த பேட்டி மூலம், அசாத் சாலி 'இன்னொரு நாட்டில் வைத்து இலங்கைக்கு எதிராக கருத்துவெளியிட்டுள்ளதாகவும்' அதனால் இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களுக்கும் அவர் அவதூறு விளைவித்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடகமத்திய நிலையத்தின் இயக்குநர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.
அதேவேளை, அசாத் சாலிக்கு எதிரான 18 குற்றச்சாட்டுக்களில் நிதி மோசடி பற்றிய குற்றச்சாட்டு தொடர்பிலும் சிஐடி குற்றத்தடுப்பு புலன்விசாரணையாளர்கள் விசாரித்துவருவதாக ஹுலுகல்ல கூறினார்.
இதேவேளை, இலங்கையில் பொது பல சேனா என்ற கடும்போக்கு பௌத்தவாத அமைப்பின் அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பில், அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அந்த அமைப்பினர் அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமளவுக்கு எதனையும் செய்யவில்லை என்று லக்ஷ்மன் ஹுலுகல்ல பதிலளித்துள்ளார்.
இதேவேளை, ஜூனியர் விகடன் இதழுக்கு அசாத் சாலி அளித்த பேட்டியில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமளவுக்கு எதுவும் கூறப்படவில்லை என்று அசாத் சாலியின் விடுதலைக்காக அமைக்கப்பட்டுள்ள அமைப்பின் தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்திருந்தார்.
அதேநேரம், அசாத் சாலி தனது பேட்டி தவறுதலாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளதாக அனுப்பியுள்ள திருத்தச் செய்திக்குறிப்பும் ஜூனியர் விகடன் சஞ்சிகை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, அசாத் சாலி அவரது சட்டத்தரணிகளை சந்திப்பதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே. சிஸன் சமூக வலைத்தளமான டிவிட்டர் கேள்வி பதிலில் கூறியுள்ளார்.
தொடர்புடைய முன்னைய செய்தி : ஒரு பிரச்சினையும் இல்லை: அசாத் சாலி நன்றாக உணவு உட்கொள்கிறார் - ஹுலுகல்ல
No comments