தம்புள்ளை பள்ளிவாசலின் இருப்பு கேள்விக்குறி
நிர்வாகம் மீண்டும் ஜனாதிபதிக்கு கடிதம்
தம்புள்ளைப் ஹைரியா பள்ளிவாசலை காப்பாற்றித் தாருங்கள் என்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அகில இலங்கை ஐம் இய்யத்துல் உலமா சபை வக்பு சபைக்கு பல கடிதங்கள் மூலம் கோரிக்கை விடுத்தும் எதுவித பலனும் ஏற்படவில்லை. இப்போது பள்ளிவாசலைச் சூழவுள்ள கட்டிடங்கள் உடைக்கப்பட்டு வருகின்றன பள்ளிவாசலின் இருப்பு பள்ளிவாசலுக்கு எதுவும் செய்ய மாட்டோம் என்கிறீர்கள். ஆனால் இப்போது பள்ளிவாசலுக்கு பாதகம் வரும் போல் இருக்கிறது. நாம் எப்போதும் அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளவில்லை. எனவேதான் பள்ளிவாசல் விடயத்தில் தலையிட்டு தீர்வொன்றினைப் பெற்றுத் தாருங்கள் என்று ஜனாதிபதியிடம் மீண்டும் நிர்வாக சபை கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் அகில இலங்கை ஐம்இய்யத்துல் உலமா சபைக்கும் வக்பு சபைக்கும் தனித்தனியாக கடிதங்களும் எழுதப்பட்டுள்ளன.
நாங்கள் எம்மாலியன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். பள்ளிவாசலைப் பாதுகாத்துத் தருவது உங்கள் பொறுப்பு. உங்கள் பங்களிப்பினை சமூகத்திற்காகச் செய்யுங்கள் என்றும் உலமா சபைக்கும் வக்பு சபைக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்,
இதற்கிடையில் தம்புள்ளை புனித பூமி அபிவிருத்தித் திட்டத்தை துரிதப் படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கடந்த திங்கட் கிழமை ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்றுள்ளது. இதில் தம்புள்ளை ரங்கிரி விகாரை தலைமை மதகுரு இனாமலுவே சுமங்கல தேரர் உட்பட நகர அபிவிருத்தி அதிகார சபை உயரதிகாரிகளும் பங்கு பற்றியுள்ளனர். இதன்போது தம்புள்ளை புனித பூமி அபிவிருத்தி திட்டத்தை துரித ப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டதாக தெரியவருகிறது.
கட்டிடங்கள் அகற்றம்
இதேவேளை கடந்த 23ஆம் திகதி பள்ளிவாசலை சூழவுள்ள கட்டிடங்கள் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் உடைக்கப்பட்டுள்ளன. சுமார் 150 பாதுகாப்புப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
தம்புள்ளை புனித பூமி அபிவிருத்தித் திட்டத்தை செயற்படுத்தும் நகர அபிவிருத்தி அதிகாரசபை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி 17/டிஎம்/ 931 எனும் இலக்கமிட்ட கடிதமொன்றினை பள்ளிவாசல் பிரதேசத்தின் குடும்பங்களுக்கும் வர்த்தக நிலையங்களுக்கும் அனுப்பியிருந்தது. 2012.10.31 ஆம் திகதிக்கு முன்பு காணிகளை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒப்படைக்கும் படியும் மாற்றீடாக கண்டலம வீதி பொல்வத்தயில் காணி வழங்கப்படுமெனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிவித்தலின்படியே கடந்த வாரம் கட்டிடங்கள் பல அகற்றப்பட்டன.
இது தொடர்பாக தம்புள்ளை புனித பூமி அபிவிருத்தித் திட்ட நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டப் பணிப்பாளர் எச். ஏ. தயானந்தவுடன் விடிவெள்ளி தொடர்பு கொண்பு வினவியபோது ''''நஷ்டஈடு வழங்கப்பட்ட 18 கட்டிடங்களே கடந்த வாரம் அகற்றப்பட்டன. மொத்தம் 106 வீடுகளும் கடைகளும் அகற்றப்படவுள்ளன. அகற்றப்படும் காணி உரிமையாளர்களுக்கு பொல்வத்தயில் நிலம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. இரு மாதகாலத்துக்குள் இந்தப் பணி பூரணப்படுத்தப்படும். ஏ9 பாதை அபிவிருத்திக்காகவே இந்தக் கட்டிடங்கள் அகற்றப்படுகின்றன. 65 அடி அகலமான பாதையாக இது விரிவுப்படுத்தப்படவுள்ளது'''' என்றார்.
பாதை அபிவிருத்தியின் போது பள்ளிவாசல் பாதிக்கப்படுமா என்று வினவிய போது ''''அங்கு ஒரு மத்ரஸாவே இயங்கி வருகிறது'''' என அவர் பதிலளித்தார்.
பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் சட்டத்தரணி பி. அமானுல்லாவை தொடர்பு கொண்டு வினவிய போது பள்ளிவாசல் தாக்குதலுக்குட்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடைந்து விட்டது. இதுவரை இதற்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை பள்ளிவாசலைத் தாக்கிய தரப்பினர் தொடர்ந்தும் பள்ளிவாசலை அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.
பள்ளிவாசலின் வரலாறு பள்ளிவாசலின் பதிவு என்பவற்றை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் விளக்கியிருக்கிறோம். ஐவேளை தொழுகை நடப்பதையும் ஜும்ஆ தொழுகைக்கு 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வதையும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறோம். பள்ளிவாசலுக்கு என்ன நடக்கும் என்ற பீதியில் மக்கள் இருக்கிறார்கள் ஜனாதிபதியிடமிருந்தே இதற்கான பதிலை எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.
(VD)
No comments