கோதாபயவின் பெயரைப் பயன்படுத்தி இத்தாலியில் அட்டகாசம்!
இலங்கையில் கொலை, கொள்ளை ஆகிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவினர் சிலர் இலங்கையிலிருந்து தப்பிச் சென்று இத்தாலியில் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் இத்தாலியில் வாழும் இலங்கையர்களுக்கு பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்தி, அவர்களுக்கு இடையூறு செய்துவருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து இத்தாலியிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் இதற்குத் தீர்வுகாணப்படவில்லையெனக் கூறப்படுகிறது.
பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தமக்கு மிக நெருக்கமானவர் எனக் கூறி, அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து பல்வேறு அடாவடித்தனங்களைச் செய்துவருவதாக முறையிடப்பட்டுள்ளது.தெரியவருகிறது.
பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் பெயரைப் பயன்படுத்தி இந்தத் தரப்பினரோ அல்லது இலங்கையைச் சேர்ந்த வேறு ஏதாவது பாதாள உலகக் குழுவினரோ இலங்கையருக்கு ஏதேனும் இடையூறுகளைச் செய்வார்களாயின் இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சுக்கு நேரடியாக முறைப்பாடு செய்ய முடியும் என இலங்கையின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய அறிவித்துள்ளார்.
முறைப்பாடுகளைச் செய்பவர்களின் தகவல்கள் இரகசியமாக பேணப்படும் எனவும், இலங்கை பாதாள உலகக் குழுவினர் எந்தவொரு நாட்டில் இருந்தாலும், அவர்களைக் கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதற்கு இலங்கையர்களின் முழுமையான ஆதரவு தேவை எனவும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments