Breaking News

அசாத் சாலி கைது : புதிய செய்திகள்

azath

தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கொழும்பு மாநகர பிரதி மேயருமான அஸாத் சாலி வியாழன் காலை இரகசியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 72 மணி நேர தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தேவையெனில் அது நீடிக்கப்படலாம் என்றும் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்தனர்.

கொலன்னாவையிலுள்ள அவரது நண்பனொருவரின் வீட்டில் தலைமறைவாகியிருந்த போதே இரகசியப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலன்னாவையிலுள்ள அவரது நண்பரின் வீடு நேற்று அதிகாலை முதல் பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டது. அருகிலிருந்த வீதியும் மூடப்பட்டிருந்தது. ஆயுதம் தரித்த பொலிஸார் வீதிகளில் காணப்பட்டனர். சரியாக 6.45 மணியளவில் நண்பரின் வீட்டிலிருக்கையில் அஸாத்சாலி குற்றப் புலனாய்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இவர் கைதாகியமை குறித்து அவரது மனைவியிடம் சி.ஐ.டியினர் பற்றுச் சீட்டொன்றினை வழங்கியுள்ளனர். இதன்படி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 120ஆவது ஷரத்தின் படி அஸாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட வேளை இரகசியப் பொலிஸார் அவரை மிகவும் மரியாதையுடனேயே அழைத்துச் சென்றுள்ளனர். இன்ன காரணத்துக்காகவே உங்களை கைது செய்கிறோம் என்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்துக்கே அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அவரை விசாரித்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்த்தன தெரிவித்தார். விசாரணைக்காகவே அவரை அழைத்துச் செல்கிறோம். அவரைப் பார்வையிடுவதற்கு உங்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவோம் என்றும் சி.ஐ.டி. அதிகாரிகள் அஸாத் சாலியின் மனைவியிடம் தெரிவித்துள்ளனர்.

ஆறுதல் கூறிய ஒரேயொரு முஸ்லிம் அரசியல் வாதி ரிஷாத் பதியுதீன்

இதே வேளை ரவி கருனாநாயக்க, ஜயலத் ஜயவர்தன, விக்ரமபாஹு கருனாரத்ன ஆகியோ அசாத் சாலியின் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறியுள்ளனர். அத்தோடு தற்போது வெளி நாட்டில் இருக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொலைபேசி மூல அசாத் சாலியின் வீட்டுக்கு பேசி ஆறுதல் கூறியுள்ளார். வேறு எந்த முஸ்லிம் அரசியல் வாதியும் இதுவரை விசாரிப்பதற்கேனும் கதக்கவில்லை என தெரிய வருகிறது.

கைதுக்குக் காரணம்

junior-vikadan-azath-salley

அஸாத் சாலி கடந்த சில தினங்களுக்கு முன் இந்தியா சென்றிருந்தார். அப்போது ஜுனியர் விகடன் சஞ்சிகைக்கு அவர் பேட்டியளித்திருந்தார். அரசாங்கம் முஸ்லிம்கள் மீது நெருக்குதல்களை மேற்கொண்டால் அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் என இப் பேட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பேட்டியின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே அவர் கைதாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அஸாத் சாலி தெரிவித்த கருத்துக்கு மாற்றாமாகவே ஜூனியர் விகடன் இந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளதாகவும் அஸாத் சாலி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. முஸ்லிம்கள் மீது நெருக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் அரசாங்கமே அவர்களை ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளுகிறது என்றே அஸாத் சாலி தனது பேட்டியில் தெரிவித்துள்ளதாகவும் இந்தக் கருத்து திரிவு படுத்தப்பட்டுள்ளதாகவும் அஸாத் சாலி தரப்பு தெரிவிக்கிறது.

ஜூனியர் விகடன் வருத்தம்

azath salley

அஸாத் சாலி தரப்பினர் ஜுனியர் விகடன் சஞ்சிகைக்கு திரிவுபடுத்தப்பட்ட செய்தி குறித்து தெரிவித்ததையடுத்து அடுத்த இதழில் தமது தவறு திருத்திக் கொள்ளப்படுமென சஞ்சிகை ஆசிரியர் உறுதியளித்துள்ளதாகவும் அஸாத் சாலியின் நண்பரொருவர் நவமணிக்குத் தெரிவித்தார்.

சட்ட நடவடிக்கைகள்

சாதாரண சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தால் நீதிமன்ற விசாரணையின் பின் அவரை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால் பாதுகாப்புச் செயலாளரின் பணிப்பின் கீழேயே இவரது விடுதலை இடம்பெறலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குற்றப்புலனாய்வு தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அஸாத் சாலியை இன்று நண்பகல் சட்டத்தரணி ஸிராஸ் நூர்தீன் சந்தித்தார். தான் நிரபராதி என்று உறுதியான நிலைப்பாட்டில் தானிருப்பதாகவும் அதன்போது அவர் சட்டத்தரணி ஸிராஸிடம் தெரிவித்துள்ளார்.

No comments