Breaking News

வடக்குத் தேர்தலை ஒத்திவைப்பதற்காகவே சம்பிக்க, விமலின் நாடகம் அரங்கேற்றம் : விக்கிரமபாகு

wikiவட மாகாணசபைத் தேர்தலை நடத்தாது ஒத்திவைப்பதற்காகவே ஜனாதிபதியின் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச ஆகியோரின் எதிர்ப்பு நாடகம் அரங்கேற்றப்படுகின்றது என்று நவ சமசமாஜக் கட்சியின் தலைவரும் தெஹிவளை கல்கிஸை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
அதிகாரங்கள் இல்லாத மாகாண சபையை தமிழ் தலைவர்கள் ஏற்கமாட்டார்களென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக கலாநிதி விக்கரமபாகு கருணாரத்ன தெரிவிக்கையில்,
வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விரும்பவில்லை.
ஆனால் இந்தியாவினது அழுத்தம் காரணமாக தேர்தலை நடத்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஜனாதிபதி தள்ளிவிடப்பட்டுள்ளார். இவ்வாறானதோர் நிலையிலேயே அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச ஆகியோரை தூண்டிவிட்டு வட மாகாண சபைத் தேர்தலுக்கு எதிரான நாடகத்தை ஜனாதிபதி அரங்கேற்றியுள்ளார்.
இந்த எதிர்ப்பை பயன்படுத்தி அதிகாரங்களை பறிப்பதற்கான அனுமதியை இந்தியாவிடம் இலங்கை கோரும் அதற்கு இந்தியாவும் இணங்கி, தமிழ் அரசியல் கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிடுமாறு வலியுறுத்தும். ஆனால் தமிழ் தலைமைகள் அதிகாரமில்லாத சபையை ஏற்க மாட்டார்கள், நிராகரிப்பார்கள் இவ்வாறு குழப்பகாரமான நிலைமையை தோற்றுவித்து வட மாகாண சபைத் தேர்தலை நடத்தாது தள்ளிவைப்பதே அரசாங்கத்தின் திட்டமாகும்.
பொது நலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் நாடுகளும் வட மாகாண சபைத் தேர்தலை தள்ளிவைக்கும் இலங்கையின் திட்டத்தை எதிர்க்கப் போவதில்லை. இந்தியா உட்பட மேற்கத்தைய நாடுகளுக்கு தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்கவேண்டுமென்பதில் அக்கறை கிடையாது.
இங்குள்ள காணிகளையும் வளங்களையும் கொள்யைடிப்பதே அவர்களது இலக்காகும் என்றார்.

No comments