Breaking News

நான் மன்னிப்புக் கோரவில்லை – அசாத் சாலி

hqdefault தன்னை விடுதலை செய்ய எவரிடமும் தான் மன்னிப்பு கோரவில்லையென குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி  விடி.வௌ்ளியிடம் தெரிவித்தார்.

விடுதலை செய்யப்பட்ட நிலையில் நவலோக வைத்தியசாலை கட்டிலில் இருந்தவாறு  கருத்து தெரிவித்த அவர் ,

என்னை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதிக்கு மன்னிப்பு கடிதம் எழுதியதாக தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை. நான் ஜனாதிபதி உள்ளிட்ட எவரிடமும் மன்னிப்பு கோரவில்லை.

நான் எந்தக்குற்றமும் செய்யாத நிலையில் எதற்காக மன்னிப்புக் கோர வேண்டும். எனது விடுதலையின் பிரதான பங்கு ஊடகங்களுக்கும் பொது மக்களுக்கும் உள்ளது.

ஊடகங்கள் பொதுமக்களுடன் இணைந்து சர்வதேச அமைப்புக்ள் மற்றும் பிற அமைப்புக்கள் கொடுத்த அழுத்தங்களே என்னை விடுதலை செய்துள்ளது.

எனது விடுதலை தொடர்பில் நான் கொடுத்த சத்தியக் கடதாசியில் மன்னிப்புக் கோரும் எவ்விதமான வாசகங்களும் இல்லை. அதில் இரண்டு வரிகள் மட்டுமே உள்ளது.

‘‘நான் எவ்விதமான தீவிரவாத நடவடிக்கைகளிலும் சம்பந்தப்படவோ அல்லது அதனை தூண்டவோ இல்லை. அத்துடன் அரசுக்கெதிராகவும் ஒரு போதும் செயற்படவுமில்லை’’ என மட்டுமே அச்சத்திய கடதாசியில் குறிப்பிடப்பட்டுள்ளது. என தெரிவித்தார்.

 

ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் மன்னிப்பு கோரப்படவில்லை : சட்டத்தரணி

சத்திய கடதாசிக்கு மேலதிகமாக ஜனாதிபதிக்கு அசாத் சாலி எழுதிய கடிதத்தில் சட்டத்தை நிலைநாட்டுமாறு மட்டுமே கோரப்பட்டிருந்ததாகவும் மன்னிப்பு எதுவும் கோரப்படவில்லை எனவும் அசாத் சாலியின் சட்டத்தரணியான சிராஸ் நூர்டீன் விடிவெள்ளியிடம் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் ,

அஸாத் சாலி சத்தியக்கடதாசிக்கு மேலதிகமாக ஜனாதிபதிக்கு ஒரு கடிதமும் அனுப்பிவைத்தார். எனினும் அதில் எங்கும் மன்னிப்பு கோரப்படவில்லை. எனினும் பாதுகாப்பு தரப்பு அஸாத் சாலி மன்னிப்புக்கோர வேண்டுமென பிடிவாதமாக இருந்தது. எனினும் அதனை நாங்கள் நிராகரித்தோம். ஜனாதிபதிகக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் சத்தியக்கடதாசியின் படி நீதியை நிலைநாட்டுமாறு மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மன்னிப்புக்கோரும் எந்தவிதமான வாசகமும் இல்லை.

மாற்றமாக இந்தியாவில் தான் வழங்கிய செவ்வியானது குறித்த ஊடகத்தால் சற்று வித்தியாசப்படுத்தி வெளியிடப்பட்டதாகவும் அது எவரையும் புண்படுத்தியிருந்தால் தனது ஆழ்ந்த கவலையினை தெரிவிப்பதாக மட்டுமே அக்கடித்தில் எழுதப்பட்டிருந்தது என தெரிவித்தார்.

.

No comments