அசாத்சாலியின் கருத்து துவேசம் கொண்டது என்றால், சிங்களக் கடும்போக்காளர்கள் கூறுவது மட்டும் ‘இன ஒற்றுமை’ கருத்துக்களா?
கழுதைகள் தொடர்பாக தமிழில் பல பழமொழிகள் உள்ளன. ‘கழுதை கெட்டால் குட்டிச்சுவர்’ என்பது முதல் ‘கழுதையின் காதிலே கட்டெறும்பை விட்டதைப் போல’ என்பது வரை சில ‘கழுதை மொழிகள்’ இதற்குள் அடங்குகின்றன. இவ்வாறான கழுதை மொழிகளில் ‘கழுதைக்கு உபதேசம் காதிலே சொன்னாலும் அவலக்குரல் ஒழிய ஆங்கேதும் இல்லை!’ என்பதையும், ‘கழுதைக்கு வாழ்க்கைப்பட்டால் உதைக்கு அஞ்சலாமோ’ என்பதையும் இலங்கை தொடர்பான பதிவுக்காக செய்தி வீச்சு இன்று தெரிவு செய்கின்றது.
போருக்குப் பின்னரான நல்லிணக்கம், இயல்புநிலை என கொழும்பு அதிகார மையம் சில ‘காட்சிப்படுத்தல்களை’ மேற்கொண்டாலும், மறுபுறத்தே P.T.A என்ற நாசகாரத்தனம் வாய்ந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அது மீண்டும் தீவிரமாக சுழற்சிக்கு விட முனைகிறது. இது கழுதைக்கு உபதேசம் காதிலே சொன்னாலும் அவலக்குரல் ஒழிய ஆங்கேதும் இல்லை என்ற கருத்தியலை நினைவூட்டுகிறது.
குறிப்பாக தமிழ்-முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான அசாத் சாலியை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்துவதன் மூலமாக, இலங்கைத் தீவு தொடர்பாக அனைத்துலகம் என்னதான் உபதேசம் கூறினாலும், அவலக்குரல் மட்டுமே தம்மிடமிருந்து வெளிப்படுத்தப்படும் என்பதை மகிந்த & co இன்னொருமுறை உறுதிப்படுத்துகின்றது.
இதேபோல சற்றேக்குறைய தம்மைப்போன்ற ஒரு அரசியல் குரலுக்குரிய முஸ்லிம் பிரமுகர் ஒருவர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை, இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மோசமாகிய நிலையைக் காட்டுவதாகக் கூறும் ஶ்ரீலங்காவின் நீதி அமைச்சரான ரவூப் ஹக்கீம், மறுபுறத்தே அரசாங்கத்திலிருந்து ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விலகாதெனக் கூறுவது, கழுதைக்கு வாழ்க்கைப்பட்டால் உதைக்கு அஞ்சலாமோ என்பதையும் நினைவூட்டுகிறது.
பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வியலை நாசகாரத்தனமாகத் துடைத்தழித்த ஶ்ரீலங்காவின் பல்முனைப் பொறிகளில் P.T.A எனப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டம் முக்கிய வகிபாகத்தைக் கொண்டுள்ளதை மீண்டுமொருமுறை நினைவூட்டவேண்டியதில்லை. ஒடுக்கமான சந்து ஒன்றில் இயற்கையின் அழைப்புக்காக சிறுநீர் கழிக்க முனைந்த ஒரு தமிழனைக் கூட தனது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து கேட்பாரற்ற ரீதியில் தடுத்து வைக்கும் அதிகாரத்தை சிங்களம் கொண்டிருந்தது. இன்றுகூட ‘தமிழ் அரசியல் கைதிகள்’ என்ற அடையாளத்தை சுமந்தபடி தமது வாழ்வை சிங்களத்தின் சிறைக்கம்பிகளுக்குள் தொலைத்துவரும் தமிழர்கள் எல்லாம் இந்த நாசகாரத் தடைச்சட்டத்தினால் குறிவைக்கப்பட்டவர்கள் என்பதும் நினைவூட்டலுக்குரியது.
இந்தநிலையில் 2009 இற்குப் பின்னர் இலங்கைத்தீவின் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படுவதாகக் கூறி ‘கொழுக்கட்டை’ வடிவத்தில் இருந்த தமது பயங்கரவாதத் தடைச்சட்டத்தை வெகுநுட்பமாக ‘மோதக’ வடிவுக்கு மாற்றியிருந்தது கொழும்பு. சிங்களத்தின் இந்த நாசகார சூட்சுமத்தை அறியாமல், இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டுவிட்டதாக புளகாங்கிதம் அடைந்தவர்களும் உள்ளனர்.
இவ்வாறான ஒரு பின்னணியில்தான், அசாத்சாலி என்ற அரசியல்வாதியின் பேச்சுரிமை மீது அண்மையில் P.T.A பாய்ந்தது. தமிழகத்திலிருந்து வெளியாகும் ஜுனியர் விகடன் இதழுக்கு அசாத்சாலி அளித்த செவ்வியை ஆதாரம்காட்டி 3 மாதங்களுக்கு அவரைத் தடுத்துவைக்கும் உத்தரவை P.T.A அல்லது பயங்கரவாதத் தடைச்சட்டம் வழங்கியது.
ஜுனியர் விகடனில் அசாத்சாலி குறிப்பிட்ட விடயம் இதுதான்…
“தற்போது இலங்கைத்தீவில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறை உட்பட நாட்டு மக்களின் இறையாண்மையைக் காக்க ஆயுதங்களால் அவற்றை எதிர்கொள்ள வேண்டும்” என்பது அவரது கருத்தாக இருந்தது.
தனது இந்தக் கருத்தின் மூலம் சமூகங்களுக்கு இடையில் பதற்றத்தைத் தோற்றுவிக்க அசாத்சாலி முயன்றதாக அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
முஸ்லிம் அங்காடிகள் மீது மோசமான தாக்குதலைத் தொடுத்தவர்கள், அதனை முன்னின்று நடாத்திய காவியுடைகள், ஹலால் சான்றிதழை தீயிட்டுக் கொழுத்திய இனவாதிகள் எல்லோரும் சுதந்திரமாக நடமாடும் நிலையில், இவ்வாறான வன்முறையை ஆயுதங்களினால் எதிர்கொள்வது என்ன தவறு… எனக் கருத்துக் கூறியவர் ‘தலிபான் ஆயுததாரி’யாகி விட்டார். அதாவது இலங்கைத்தீவின் இறையாண்மை என்பது, ‘ராஜபக்ச குடும்பத்திற்கு’ மட்டும் எழுதப்பட்ட ‘முதிசம்’ என்பதாகக் காட்டுகின்றனர் அதிகாரவாதிகள்.
மகிந்த & co வின் பொம்மையான D.M.ஜயரட்ன நாடாளுமன்றத்தில் கூறுவதுபோல, அசாத்சாலி போன்ற தனிமனிதர்களின் கருத்துக்களால் இனமோதல் ஏற்படும் சாத்தியக்கூறுகளை விட, தமிழ் பேசும் மக்கள் மீதான தொடர் ஒடுக்குமுறைகளும், தமிழர் தாயகத்தின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் சிங்களக் குடியேற்றவாதிகளும், அடாத்தான காணிச் சுவீகரிப்புகளும், ரிசாத் பதியுதீன் போன்ற மகிந்தவாதி முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்யும் குயுக்திகளுமே இனமோதல்களை ஏற்படுத்தும் வீரியம் கொண்டனவாக உள்ளன.
அசாத் சாலியின் கருத்து துவேசம் கொண்டதாக இருந்தால் பொதுபலசேனா காவிகளும், ராவணா சக்தி காவிகளும், ஹெல உறுமய முதல் தேசப்பற்றுள்ள தேசிய முன்னிண வரையான சிங்களக் கடும்போக்காளர்களும் கூறுவது மட்டும் ‘இன ஒற்றுமை’ கருத்துக்களா என்பதும் இங்கு ஒரு வினாவாகும்!
அசாத்சாலியின் கருத்து துவேசம் கொண்டதாக, இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்துவதாக இருந்தால் அவருக்கு ஒரேயொரு சிறைக்கூண்டு போதும்! அவரது சிறைக்கூண்டுக்கு அருகில் வெறுமையாக உற்ற சிறைக்கூண்டுகளில் ‘தாம் சிங்கள இனவாதிகள்’ என்பதை பகிரங்கமாகவே ஒப்புக்கொள்ளும் ஜாதிக ஹெல உறுமயவின் ஓமல்பே சோபித தேரர் போன்றவர்களைப் பிடித்துத் தள்ளும் ‘தில்’ சிங்களத்தின் நீதியமைச்சருக்கு உள்ளதா?
அசாத்சாலி ஒரு முஸ்லிம் அரசியல்வாதி என்பதற்காக அவர்மீது காட்டும் பச்சாதாபமாக அல்லாமல், ஆகக்குறைந்தது ஒரு நீதியமைச்சராக தனது கடமையைச் செய்யும் திராணி ஹக்கீமுக்கு உள்ளதா? அப்படியில்லாவிட்டால், இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மோசமாகியுள்ளதாக, முகம்பார்க்கும் நிலைக்கண்ணாடி முன்னால் நின்று ஏன் அவர் கருத்தியல் எச்சில் உமிழ வேண்டும்?
மகிந்த & co வின் அரசாங்கத்திலும் தொங்க வேண்டும், அதேச சமகாலம் இலங்கையின் சட்டத்தின் ஆட்சி மோசமாகிவிட்டதாகப் புலம்பவும் வேண்டும். இது வேண்டுமானால் மகிந்த & co வின் வேறு அமைச்சகத் துறைகளுக்குப் பொருந்தக்கூடும். அவ்வாறாயின் ‘கால்நடை அபிவிருத்தித்துறை அமைச்சகத்தைக் கேட்டுப்பெற்று நீதியமைச்சகத்தை வேறு யாருக்காவது Mr.ஹக்கீம் விட்டுக் கொடுக்கலாம்.
எவ்வளவோ விடயங்களை சகித்துக்கொள்ளும் இலங்கையருக்கு இதனை மட்டும் சகித்துக்கொள்வது என்ன கடினமா?
எழுதியவர் : பிரேம்
நன்றி : தமிழ் வேர்ல்ட்
No comments