Breaking News

முஸ்லிம் இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் சக்திகள்

zuhair600(கடந்த வாரம் நவமணி பத்திரிகையில் வெளியான பேட்டி, இது அசாத் சாலியின் விடுதலைக்கு முன்னர் பிரசுரிக்கப் பட்டதாகும் என்பதை கருத்தில் கொள்ளவும்)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈரான் தூதுவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம்.சுஹைர் நவமணிக்கு வழங்கிய விஷேட செவ்வி

கேள்வி: முஸ்லிம்களுக்கெதிரான இனவாத செயற்பாடுகளை எவ்வாறு நோக்குகிறீர்கள்?

பதில்: முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகள் சில காலங்களில் உச்சத்துக்கு வந்துவிடும். பின்னர் அது வந்த வேகத்திலேயே தளர்ந்தும் விடுவதுண்டு. எனினும் கடந்த நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு முன்பு பொதுபல சேனா, சிங்கள ராவய உட்பட சில பௌத்த அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கெதிரான நச்சுக் கருத்துக்களைப் பரப்பி யதுடன், உலமா சபை மற்றும் முஸ்லிம் அமைப்புக்களை, பிரமுகர்களை இலக்கு வைத்து பல்வேறு செயற்பாடுகளையும் கருத்துக்களையும் முன்வைத்தனர். இது பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மோதல்கள் உருவெடுத்து விடுமோ என்ற பயங்கர சூழ்நிலையும் தோற்றுவித்திருந்தது. எனினும் அரசாங்கம் முன்னெடுத்த ஒரு சில நடவடிக் கைளினால் தற்போது நெருக்கடி நிலை தளர்ந்துள்ளது.

கேள்வி: பயங்கரவாத அமைப்புக்களோடு முஸ்லிம்களுக்குத் தொடர்பு உள்ளதாமே?

பதில்: இது ஒரு முக்கியமான விடயம் இலங்கையில் அல்கைதா, தலிபான்கள், ஜிஹாத் குழுக்கள் இருப்பதாக மேற்கத்திய நாடுகளில் நிலவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இலங்கையிலுள்ள முஸ்லிம்களின் பயங்கரவாத அமைப்புக்கள் ஊடுருவியுள்ளதாக சர்வதேச கவனத்தை ஈர்த்தெடுக்கும் முயற்சியாக இவ்வாறான பொய்க் கதைகள் முன் வைக்கப்படுகின்றன. இதனை மேற்கு நாடுகளின் சதியாகவே நான் காண்கின்றேன். இங்கு அல்கைதா, தலிபான், ஜிஹாத் குழுக்கள் இருப்பதாக பொய்க் கதைகளை கூறுவதன் மூலம் பௌத்த முஸ்லிம் உறவில் விரிசல்களை ஏற்படுத்தவும் முயற்சிக்கப்படுகின்றது. இவ்வாறான மோஷமான செயற்பாடுகளின் மூலம் ஒரு சிலர் அரசியலில் இலாபம் தேட முயற்சிக்கின்றனர். இவ்வாறான நிலைமைகள் ஏற்படும் போது எமது சமூக நலன் கருதி அனைவரும் ஒற்றுமையோடு இவற்றினை எதிர்கொள்ள முன் வரவேண்டும்.

கேள்வி: இது பற்றி அரசின் நிலைப்பாடு தெளிவானதென்று நினைக்கிறீர்களா?

பதில்: மேற்கு நாடுகள் இங்கு அல்கைதா, தலிபான்கள் இருப்பதாக கூறிய போதிலும் இலங்கை அரசு அதனை மறுத்துள்ளது. அல்கைதா, தலிபான்கள் இந்த நாட்டில் இல்லையென்பதை பாதுகாப்புச் செயலாளரும், படைத் தரப்பினரும் உறுதி செய்துள்ளனர். முஸ்லிம்களைப் பொறுத்த வரை இது ஒரு முக்கிய விடயம்.

கேள்வி: மேற்குலகம் இவ்வாறு கூறுவதற்கான காரணிகள் என்ன?

பதில்: மேற்கு நாடுகள் பல நாடுகளில் பயங்கரவாதம் என்ற போர்வையில் ஊடுருவுவதற்கு இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுக்களைத் தொடுத்ததுண்டு. இதனைப் பூதாகாரமாக்கி சில நாடுகளைத் தாக்கி அழித்த நிறைய சான்றுகளும் உண்டு. இலங்கையைப் பொறுத்த வரை மேற்குலகுடன் முறுகல் நிலை தொடர்கின்றது. ஜெனீவாவில் இலங்கைக்கெதிரான பிரேரணை நிறைவேற்றத்துக்கு மேற்கு நாடுகளே பெருமளவு ஆதரவு அளித்துள்ளன. இதனால் மேற்குலகு இலங்கை தொடர்பில் நல்ல நிலைப்பாட்டில் இல்லை.

இந்நிலையில் இலங்கையில் அல்கைதா, தலிபான்கள் ஊடுருவியுள்ளதாக உளறுவதன் மூலம் எமது நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர் குலைத்து குளிர்காய்வதற்கு இந்த நாடுகள் முயற்சிக்கின்றன. அத்தோடு நோர்வே போன்ற ஒரு சில நாடுகள் இந்த நாட்டில் இன மோதல்களை ஏற்படுத்தி அமைதியைக் குழப்பி தமக்குச் சார்பானதொரு நிலைமையைத் தோற்றுவிக்கும் சதி முயற்சியில் இறங்கியுள்ளன. இச்சதி முயற்சி குறித்து முஸ்லிம்களும் பௌத்தர்களும் விழிப்புடன் செயற்பட வேண்டும்.

கேள்வி: முஸ்லிம் பயங்கரவாதம் இலங்கையில் வியாபித்துள்ளதாக மேற்கு நாடுகள் எழுப்பியுள்ள குற்றச்சா ட்டுக்களால் எமது முஸ்லிம் இளைஞர்கள் பாதிக்கப்பட இடமுண்டா?

பதில்: பொதுபல சேனா, சிங்கள ராவய, ஜாதிக ஹெல உறுமய போன்ற சிங்கள அமைப்புக்கள் இங்கு ஜிஹாத் செயற்பாடுகள் உள்ளதாக பகிரங்கமாகத் தெரிவித்துள்ளனர். மேற்கு நாடுகளும் இத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன. இந்த நிலையில் முஸ்லிம் இளைஞர்கள் தீவிரச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் பட்சத்தில் அவர்கள் இலக்கு வைக்கப்படலாம். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்படலாம். எனவே, முஸ்லிம் இளைஞர்கள் இந்த விடயத்தில் நிதானமாகவும், பொறுப்புடனும் செயற்பட வேண்டும்.

கேள்வி: இந்தியாவிலும் பயங்கரவாத தடைச் சட்டம் அமுலில் உள்ளதே?

பதில்: ஆம், இந்தியாவில் பயங்கரவாத எதிர்ப்புக்கான வலுவான சட்டங்கள் உள்ளன. இந்தியாவில் ஜே.எஸ்.எஸ் ஆர். எஸ்.எஸ். போன்ற பல்வேறு இந்து தீவிரவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன. இந்த அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கெதிரான மிகக் கடுமையான செயற்பாடுகளை முன்னெடுத்தன. முன்னெடுத்தும் வருகின்றன. இந்த அமைப்புக்களின் தலையீடு களின் காரணமாக இங்கு பயங்கரவாத தடைக்கான கடுமையான சட்டங்கள் அமுலிலுள்ளன. இச் சட்டங்கள் பெரும்பாலும் முஸ்லிம்களை இலக்காகக் கொண்டே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இச் சட்டங்களின் கீழ் இந்தியாவில் 51206 முஸ்லிம்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கெதிரான குற்றச் சாட்டுக் கள் சுமத்தப்படவும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவும் இல்லை என 2013 ஏப்ரல் மாதத்தில் வெளியாகிய இந்துப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013 ஏப்ரல் 3 ஆம் திகதி வெளியாகிய இந்துப் பத்திரிகையில் மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது. சிறை களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 51206 அப்பாவி முஸ்லிம்களையும் விசாரிப்பதற்கு துரிதமாக நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டுமென்பதே அச் செய்தியாகும். இந்திய யூனியன் அமைச்சர் சுசில் குமார் சிந்தியா இத் தகவலை வெளியிட்டு இது தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளைக் கோரியுள்ளார். இந்திய பயங்கரவாத தடைச் சட்டங்களின் முஸ்லிம்கள் படும் இன்னல்கள் குறித்த அதிர்ச்சி தரும் தகவல் இது.

கேள்வி: இலங்கையிலும் இந்த நிலை ஏற்படுமா?

பதில்: எமது இளைஞர்களின் செயற்பாடுகள் எவ்வாறு அமையுமென்பதைப் பொறுத்தே இதுபற்றி எதுவும் கூற முடியும். ஓரிரண்டு பேர்களைத் தவிர எமது இளைஞர்கள் கைது செய்யப்படவில்லை. எமது செயற்பாடுகளை பயங்கரவாதத்துக்கோ பயங்கரவாதிகளுக்கோ சார்பாக அமைத்துக் கொள்ளாது நிதானமாகவும் விவேகத்துடனும் செயற்படுவதன் மூலம் இவ்வாறான நெருக்கடியான நிலைமைகளைத் தடுத்துக் கொள்ள முடியும்.

கேள்வி: இந்த விடயத்தில் எமது இளைஞர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?

பதில்: இந்தியாவைப் போன்று இலங்கையிலும் பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறையிலுள்ளது. உள்நாட்டில் பௌத்த தீவிரவாத அமைப்புக்களும் மேற்குலகமும் குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ளன. நாம் போராட வேண்டும் ஆயுதம் ஏந்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்குச் செல்வோம் என்றால் இப் பயங்கரவாதச் சட்டம் எமது இளைஞர்களையும் இலக்கு வைக்கும். விசாரணைகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்படலாம். இந்த நிலைமைக்கு முஸ்லிம் இளைஞர்களைத் தள்ளி விடுவதற்கான சதி முயற்சிகளும் அரங்கேற்றப்படலாம். மேற்கத்திய, உள்ளூர் சூழ்ச்சிகளும் முன்னெடுக்கப்படலாம். இவ்வாறான சதி வலையில் முஸ்லிம் இளைஞர்கள் இருக்கக் கூடாது. மிகவும் புத்திசாதுரியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

கேள்வி: அரசின் செயற்பாடுகள் முஸ்லிம்களை இலக்கு வைக்கின்றதா?

பதில்: இந்த அரசாங்கம் ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. இந்த நிலையில் தேர்தல்கள் மூலமே அரசை வீழ்த்த முடியும். ஆயுதம் ஏந்தியும், வன்முறைகளைத் தூண்டியும் அரசாங்கத்தை வீழ்த்த முயற்சிப்பது ஆபத்தானது. முஸ்லிம்களைப் பொறுத்த வரை தற்போதைய அரசாங்கம் சாதகமான நடவடிக்கைகளை எடுத் துள்ளது. சில நேரங்களில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக முஸ்லிம்கள் வாதங்களை முன்வைக்கவும் முடியும். முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.

இவ்வாறான நிலையில் அரசுடன் முட்டி மோதிக் கொண்டு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்வது எமது சமூகத்துக்கு ஆபத்தாக அமையலாம். இது குறித்து முஸ்லிம் அமைச்சர்கள், அரசியல் வாதிகள், முஸ்லிம் அமைப்புக்கள் ஜனாதிபதி அரசாங்கத்துடன் நேரடியாகப் பேசி இணக்கப்பாடுகளுக்கு வர வேண்டும். வன்முறைச் செயற்பாடுகள் மூலம் எதனையும் சாதிக்க முடியாது. வன்முறைகள் காரணமாக உயிரிழப்புக்களும் சொத்து இழப்புக்களும் ஏற்படுமேயன்றி தீர்வுக்கான முயற்சிகள் கைகூடப் போவதில்லை. இது குறித்து முஸ்லிம்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும். ஜம்மியத்துல் உலமா, ஏனைய முஸ்லிம் அமைப்புக்களின் வழிகாட்டல்களை ஏற்று அமைதியான முறையில் எமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

கேள்வி: முஸ்லிம் இளைஞர்கள் தற்காலத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும்?

பதில்: இது முக்கியமானதொரு விவகாரம். எமது இளைஞர்கள் மிக மிக விழிப்புடன் செயற்பட வேண்டிய கால கட்டத்தில் உள்ளனர். பொதுபலசேனா, ஜாதிக ஹெல உறுமய, சிங்கள ராவய போன்ற இனவாத சக்திகளுக்கு மேற்கு நாடுகள் சில நிதியுதவி வழங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் எமது இளைஞர்களை இலக்கு வைத்து சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். இச்சதி முயற்சிகள் எந்த நேரமும் மேற்கொள்ளப்படலாம். எமது இளைஞர்களை வளைத்தப் பிடித்து தாக்குதல் சம்பவங்களுக்கு மேற்கொள்ளவும் சதித் திட்டம் முன்னெடுக்கப்படலாம். உலக நாடுகளில் இவ்வாறான சதி முயற்சிகள் நிறையவே நடந்து வருகின்றன. இதிலிருந்து நாம் பாடம் படிக்க வேண்டும். படிப்பினைகளைப் பெற வேண்டும்.

கேள்வி: உதாரணத்துக்கு ஏதாவது சொல்வீர்களா?

பதில்: ஆம், இந்தியாவில் மும்பைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபோது பாகிஸ்தானின் லஷ்கர் ஈதைபாவுக்கு தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தோடு தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனையும் நிறைவேற்றப்பட்டது. இத் தாக்குதலின் பின்னணியிலும் சதி முயற்சியொன்று நடந்தேறியது. அமெரிக்காவைச் சேர்ந்த ரிசட் ஹெட்லி என்பவரே இச் சதி முயற்சியின் சூத்திரதாரி என்பதை அவரே, ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

மும்பைத் தாஜ் ஹோட்டல் மீதான தாக்குதல், யூத கட்டிடமொன்றின் மீதான தாக்குதல் குறித்த தாக்குதல் முயற்சிகளுக்கான திட்டங்களை இவரே வகுத்திருந்தார். இதற்கான உளவுவேலை, உரிய இடத்தினை ஆராய்ந்தெடுத்தல், எங்கு மறைந்திருந்தல் உட்பட இரகசியத் தகவல்களை லஷ்கர் ஈதைபாவுடன் இவர் பரிமாறிக் கொண்டுள்ளார். இதனை ரிசட் ஹெட்லி ஏற்றுக் கொண்டுள்ளார். எனினும் இவர் மீதான விசாரணைகள் அமெரிக்காவிலேயே மேற்கொள்ளப்பட்டதுடன், 15 வருட கால சிறைத் தண்டனையும் அவருக்கு விதிக்கப்பட்டது. இச்சதி முயற்சி எமது இளைஞர்களுக்கு சிறந்த படிப்பினையாகும்.

கேள்வி: இந்த நாட்டிலும் இவ்வாறு இடம்பெற வாய்ப்புக்கள் உண்டா?

பதில்: ஏன் இல்லை. பொதுபல சேனாவுக்கு நோர்வே உதவி வழங்குகிறது. இதனை அந்த அமைப்பின் பிரதம நிறைவேற்றதிகாரியே ஒப்புக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் சர்வதேச சதி முயற்சிகளில் நோர்வே தீவிர பங்கை வகிக்கிறது. இதேபோன்று மேலும் பல மேற்கு நாடுகளின் சில சக்திகளும் இங்குள்ள அமைப்புகளுடன் தொடர்புகளை வைத்துள்ளது. இவ் வெளிநாட்டு சக் திகள் எமது இளைஞர்களை மூளைச் சலவை செய்து பெருமளவு நிதிகளை வழங்கி மும்பை போன்ற தாக்குதல் சம்பவங்களை இங்கு நடாத்த முனையலாம். இதன் மூலம் அரசாங்கத்தை முஸ்லிம்களிடமிருந்து பறிக்கும் சதி முயற்சிகளும் மேற்கொள்ளப்படலாம். பெரும்பான்மையினருடன் மோதல்களுக்கும் இச் சக்திகள் தூபமிடலாம். இது குறித்து நாம் விழிப்புடன் செயற்பட வேண்டும்.

கேள்வி: முஸ்லிம் கட்சிகள் பிளவுபட்டுள்ளமை ஆரோக்கியமானதா?

பதில்: முஸ்லிம் தலைவர்களான பதியுதீன் மஹ்மூத், ஏ.ஸீ.எஸ்.ஹமீத் போன்றவர்கள் முஸ்லிம்கள் சகல கட்சிகளிலும் இருக்க வேண்டுமென வலியுறுத்தினர். முஸ்லிம் சமூகத்தின் நலன் கருதியே அவர்கள் இவ்வாறான கருத்துக்களை முன் வைத்தனர். எனினும் தற்போது இந்த நாட்டில் முஸ்லிம் கட்சிகள் பல உள்ளன. ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அஷ்ரப் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டபோது பேரம்பேசும் சக்தியோடு அரசா ங்கங்களையே உருவாக்கும் வல்லமையும் பெற்றிருந்தது. அஷ்ரப்பின் மறைவின் பின் இக் கட்சி பல பிரிவுகளாகப் பிரிந்திருக்கிறது. இதனால் பேரம் பேசும் சக்திகளையும் இழந்திருக்கிறது. இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு எமது கட்சிகளின் பிரிவு சாதகமானதொரு நிலையைத் தோற்றுவித்துள்ளது. எனவே முஸ்லிம் கட்சிகள் பிரிவினைகளை கைவிட்டு நல்ல நோக்கோடு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதுதான் ஆரோக்கியமான விடயமும் கூட.

கேள்வி: ஆத்திரமூட்டல் சம்பவங்கள் இடம்பெறுகின்ற போது எவ்வாறு செயற்படுவது?

பதில்: பொதுபலசேனா, சிங்கள ராவய, ஹெல உறுமய போன்ற பௌத்த அமைப்புக்கள் அண்மைக் காலமாக முஸ்லிம்கள் மீது பல்வேறு இனவாத செயற்பாடுகளை, ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்தன. இந்த வருட ஆரம்பத்தில் சிங்கள, முஸ்லிம் கலவரமொன்று வளரலாம் என்ற அளவுக்கு நிலைமை மோஷமாகியிருந்தது. எனினும் இறைவன் உதவியால் இப்போது நிலைமை மாறியிருக்கிறது. முஸ்லிம்கள் பொறுமையாகவும், புத்திசாதுரியத்துடனும் செயற்பட்டதன் உண்மையான வெளிப்பாடே இது. பொறுமைக்குக் கிடைத்த சிறந்த பரிசாகவே நாம் இதனை நோக்க வேண்டும். பஷன் பக் தாக்குதலின்போது பிரச்சினை மேலும் விஸ்வரூபம் எடுக்குமென எதிர்பார்த்தோம்.

பொதுபல சேனா இச்சம்பவத்தை கண்டித்தது. அதற்குச் சம்பந்தம் இல்லையென்றும் அறிக்கை விட்டது. ஆத்திரமூட்டல் சம்பவங்களின் போது பொறுமை காக்குமாறு இஸ்லாம் வலியுறுத்துகிறது. குர்ஆனிலும் இது தொடர்பான பல்வேறு வசனங்கள் உள்ளன. “குர்ஆனில் 43ஆவது சூறாவில், “அவர்களுக்குக் கோபம் ஏற்பட்டால் மன்னித்து விடுவார்கள் மன்னிக்கும் மனப்பான்மை தொடர்பான பல்வேறு ஆயத்துக்கள் உள்ளன. எதிரிகள் எம்மை ஆத்திரமூட்டினாலும் எமது நல்ல பண்புகள், நற்செயற்பாடுகள் மூலம் அவர்களது மனங்களை நாம் வெல்ல வேண்டும். எதிரிகளை மன்னித்து அவர்களுக்கு நாம் முன்மாதிரியாகச் செயற்பட வேண்டும். இதன் மூலம் எவ்வளவோ விடயங்களை எமக்குச் சாதிக்க முடியும்.

கேள்வி: அஸாத் சாலி கைது பற்றி..?

பதில்: அஸாத் சாலியின் பல்வேறு செயற்பாடுகள் குறித்து எனக்கு உடன்பாடு இல்லாத போதிலும் முஸ்லிம்களுக்குப் பிரச்சினை ஏற்பட்ட போது அதற்காக அவர் பலமாக குரல் கொடுத்தார். அதற்காகப் போராடினார். அதனை நாம் மதிக்க வேண்டும். அவர் இப்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். பல்வேறு குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இப்போது நீதிமன்றத்திலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் இதுதொடர்பான தகவல்கள் தெரிவிப்பது அவ்வளவு நல்லதல்ல எனக் கருதுகின்றேன்.

கேள்வி: அவரது விசாரணைகளை சாதாரண சட்டத்தின்கீழ் மேற்கொள்ள முடியாதா?

பதில்: முஸ்லிம் அமைச்சர்கள், கட்சிகள், புத்திஜீவிகள் சாதாரண சட்டத்தின் கீழ் அவர்கள் மீதான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கலாம். உரிய பாதுகாப்புத் தரப்பினருடனும் இது பற்றி முறையிடலாம். ஜனாதிபதி விரும்பினால் சாதாரண சட்டத்தின் கீழ் அவரது விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்க முடியும்.

கேள்வி: மூன்று மாத காலத்துக்கு அவர் தடுத்து வைக்கப்படுவாரா?

பதில்: மூன்று மாத காலத்துக்கு அவரைத் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான நீதிமன்ற ஆணை பெறப்பட்டிருக்கிறது. அவர் மீதான விசாரணைகள் இதற்கு முன்பு நிறைவுறும் பட்சத்தில் மூன்று மாத காலத்துக்கு முன்பே அவரை விடுதலை செய்யவும் முடியும்.

(நேர்காணல்: ஸிராஜ் எம். சாஜஹான்)

நன்றி : நவமணி

No comments