அசாத்ஸாலியின் கைது தொடர்பில் சில கேள்விகள்!
லதீப் பாரூக்
மே மாதம் இரண்டாம் நாள், வியாழக் கிழமை.
நேரம் அதிகாலை காலை 5.30.
கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயரும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஸாத்சாலி அவர்களின் புதல்வியாரின் கொலன்னாவை இல்லம் விசேட அதிரடிப் படை மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் முற்றுகையிடப்படுகின்றது.
காலை 7.45 மணியளவில் அஸாத்ஸாலி சரணடைகின்றார். கோட்டையிலுள்ள குற்றப் புலனாய்வுத் துறைத் தலைமையகத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்படுகின்றார்.
இனவாத அமைப்புக்கள் சிலவற்றினால் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையிலான தீவிர இனவாதப் பிரச்சார இயக்கம் முன் கொண்டு செல்லப்படும் நிலையிலும், அதற்கெதிராக குரல் கொடுக்க எந்த அரசியல்வாதியும் முன்வராத நிலையிலும், தைரியமாகவும், ஒழிவு மறைவின்றியும் குரல் கொடுத்தவர் அசாத்சாலி.
அவரது கைது பரந்தளவிலான விமர்சன அலைகளை உண்டு பண்ணியுள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இனங்கள் மற்றும் மதங்கள் இடையிலான ஒற்றுமையைச் சீர்குழைப்பதற்கு மக்களைத் தூண்டினார் என அசாத்சாலி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதில் இருக்கின்ற வேடிக்கையும், முரண்நகையும் என்னவென்றால், யுத்தத்திற்குப் பிந்தைய இலங்கையின் சமாதான சூழலில், மிக மோசமான இனவாதக் கருத்துக்களை முன்வைத்து, தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வரும் ஜாதிக ஹெல உருமய, பொது பல சேனா, சிங்ஹல ராவய உள்ளிட்ட இனவாத அமைப்புக்களின் தலைவர்களும் இதே பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படாமல் இருப்பதுதான்.
2009 யுத்த வெற்றிக்குப் பின்னரான காலப்பகுதியில், இக்குழுக்கள் முஸ்லிம்களை இலக்கு வைத்த பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்தன. முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் கேவலப்படுத்தித் தாக்கும் விதமான பல இணையதளங்கள் நிறுவப்பட்டன. இவற்றைத் தடை செய்யுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்றே அமைந்திருந்தது. இணையதளங்கள் தவிர, துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், சமூக இணையதங்கள் என பல வழிகளில் முஸ்லிம் விரோதப் பிரசாங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் விளைவாக முன்னெப்போதும் இல்லாத வகையிலான முஸ்லிம் விரோத அசம்பாவிதங்கள் நாடளாவிய ரீதியில் அதிகரிக்கத்துவங்கின.
11, ஜூன், 2011
நேரம் சுமார் இரவு பதினொரு மணி
அநுராதபுரத்தில் நானூறு ஆண்டுகள் பழமையான ஷெய்க் சிக்கந்தர் வலியுல்லாஹ் என்பவரின் அடக்கத்தளம் (ஸியாரம்) தகர்க்கப்படுகின்றது. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொலிசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
20, ஏப்ரல், 2012
தம்புள்ள ஹைரிய்யா ஜும்ஆ பள்ளிவாயல் தாக்குதலுக்கு இலக்காகின்றது. தம்புள்ளை விகாராதிபதி சங்கைக்குரிய இனாமலுவ சுமங்கல தேரர் சில காடையர்களைச் சேர்த்துக் கொண்டு தாக்குதலில் ஈடுபடுகின்றார். இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பள்ளி வாயலொன்று தாக்கப்பட்டமையால், வெள்ளிக் கிழமை ஜும்ஆத் தொழுகை நடாத்தப்படாமல் போன சம்பவம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.
இதில் வறுத்தத்திற்குரிய விடயம் என்னவென்றால், தாக்குதல் நடாத்திய காடையர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்குப் பதிலாக, அவர்களுக்குச் சோரம் வகையில், பள்ளி வாயிலை இடித்து விட்டு, வேறோர் இடத்திற்கு மாற்றுமாறு பிரதமர் தீ.மூ. ஜயரத்ன உத்தரவிட்டமைதான்.
இவ்விதம் சிறியதும், பெரியதுமாக ஏராளமான சம்பவங்கள் வௌ;வேறு பகுதிகளில் பதிவாகி இருக்கின்றன.
முஸ்லிம் கடைகளில் கொள்வனவு செய்வோர் மீது அழுகிய முட்டைகளை வீசி எறிந்தமை, பெஷன் பக் என்ற முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஆடை அணிகலன் நிறுவனம் தாக்கப்பட்டமை, அல்லாஹ்வின் பெயரோடு ஒரு நாயின் உருவம் பொறிக்கப்பட்ட பதாதைகள், முஸ்லிம்களின் புனிய ஆலயமான புனித கஃவாவோடு, சேர்ந்து பன்றியின் உருவம் பொறிக்கப்பட்ட பதாதைகள் , முஸ்லிம் பெண்மணியொருவரின் ஹிஜாப் ஆடையைக் கலைய முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவர் முயன்றமை , முஸ்லிம் பெண் மணி ஒருவருக்குக் கட்டாய குடும்பக் கட்டுப்பாடு மேற்கொள்ள வைத்தியர் ஒருவர் மேற்கொண்ட முயற்சி.
பாடசாலை அதிபர் ஒருவர் சட்டத்தரணியான பழைய மாணவி ஒருவரை, முக்காட்டோடு தனது பாடசாலைக்குள் நுழைவதைத் தடை செய்தமை, மற்றொரு பாடசாலையில் முஸ்லிம் சிறார்கள் அதிபரால் ஆசிரியர்களுக்கு குனிந்து வணக்கம் செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டமை, இரு நடைபாதை வியாபாரிகள் முச்சக்கர வண்டியில் வந்த பிக்குகள் இருவரால் தாக்கப்பட்டமை.
இது போன்று பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பதிவாகாத, வெளிச்சத்திற்கு வராமல் மூடி மறைக்கப்பட்ட சம்பவங்கள் எத்தனையோ!
இவ்விதம் இவ்வினவாதக் குழுக்கள் மையநீரோட்ட அமைதியை விரும்பும் சிங்கள சமூகத்தின் மனங்களில் விஷத்தைக் கலக்கும் வகையில் செயற்பட்டு வருவதன் விளைவாகவே இச்சம்பவங்களை நோக்க வேண்டும். பல வெளிநாட்டுச் சக்திகள் இவற்றின் பின்புலத்தில் இருக்கிறார்களா என்பது குறித்து, முஸ்லிம் சமூகத்தில் நிலவுகின்ற ஆழமான சந்தேகங்களுக்கும் அடிப்படை இல்லாமல் இல்லை.
கண்டி, மஹரகம மற்றும் பல இடங்களில் இடம்பெற்ற பொதுக் கூட்டங்களில் முஸ்லிம் வியாபாரங்களைப் பகிஷ்கரிக்குமாறும், முஸ்லிம்களோடு எதுவித கொடுக்கல்- வாங்கலும் வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும், காணிகளை அவர்களுக்கு விற்கவோ, அவர்களிடம் இருந்து வாங்கவோ வேண்டாம் எனவும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் சங்கைக்குரிய கலகொட அத்தே குணான்சர தேரர் வேண்டுகோள் விடுத்தார். அடுத்த வெசாக் பண்டிகையைக் கொண்டாடுவது முஸ்லிம்கள் பலர் தரிசிக்கின்ற தப்தர் ஜெய்லானி அமைந்துள்ள குருகலையில் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முஸ்லிம் அல்லாதவர்களுக்கு உணவளிக்கும் போது, மூன்று முறை துப்பி விட்டே முஸ்லிம்கள் உணவு வழங்குகிறார்கள் என்பது போன்ற அண்ட புழுகல்களையும் பிக்கு ஒருவர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
இவ்விதம் இக்குழுக்கள் வெளிப்படுத்தி வரும் கருத்துக்களும், அதன் விளைவாக உருவாகி வரும் அசம்பாவிதங்களும் ‘இனங்கள் மற்றும் மதங்கள் இடையிலான ஒற்றுமையைச் சீர்குழைக்கும்’ வகையிலேயே அமைந்துள்ளன. அவ்வாறிருந்தும் இவற்றின் தலைவர்கள் எவரும் கைது செய்யப்படாமல் இருப்பது ஏன்? என்பதுதான் அனைவருக்கும் எழுகின்ற நியாயமான கேள்வியாகும்.
அச்ச சூழலில் முஸ்லிம் வாழ்ந்து வரும் நிலையில், முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதிகளும் சமூகத்தை மறந்து விட்ட நிலையில், முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தவர் அஸாத்சாலி மாத்திரமே. ஆனால், இன்று அவர் சிறைக் கம்பிகளுக்கு பின்னால் இருக்கின்றார்.
நன்றி : Metro Mirror
No comments