சிறுபான்மையினரை அடிமைகளாக வைத்துக்கொள்ள முயற்சிக்கபடுகிறது! முஸ்லிம் காங்கிரஸ்
அதிகாரங்களை இல்லாதொழித்தல் என்ற வாதம் பரவலாக ஓங்கி நிற்கின்ற நிலையில், சிறுபான்மை சமூகத்தினரை அடிமைகளாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற மனப்பாங்கு வெளிப்பட்டிருக்கிறது என்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதங்கம் வெளியிட்டுள்ளது.
கிழக்கு இராணுவப் பல்கலைக்கழகம் அமையவிருப்பதாக கசிந்துள்ள தகவல்கள் தொடர்பில் விளக்கமளிக்கும்போதே ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் ஹசன் அலி எம்.பி. இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் கிழக்கில் மக்களின் காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமித்துவருவதாகவும் ஹசன் அலி எம்.பி தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்துரைத்த ஹசன் அலி எம்.பி,
கிழக்கில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவப் பல்கலைக்கழகம் அமையவிருப்பதாக தகவல் தொடர்பில் உத்தியோகபூர்வமாக எதனையும் கூறமுடியாது. இருந்தபோதிலும், கிழக்கில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் செங்காமம், அஸ்ரப்நகர் ஆகியவற்றை உதாரணமாகக் கூறலாம். அஸ்ரப் நகரை பொறுத்தவரையில்அங்கு 160 குடும்பங்கள் இருந்தன. எனினும், தற்போது அங்கு வெறும் நான்கு குடும்பங்களே இருக்கின்றன. மிகுதியானோரின் குடியிருப்புக் காணிகள் அனைத்தும் இராணுவத்தினால் ஏற்கப்பட்டிருக்கின்றன.
இவ்விவகாரம் தொடர்பில் வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் பிரகாரம் குறித்த காணிகளை இராணுவம் உரியவர்களிடம் கையளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும், இது இன்னும் இடம்பெறவில்லை.
நிலைமை இவ்வாறு இருக்கும்போது அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு இருக்கின்ற அதிகாரங்களை இல்லாதொழிக்க வேண்டுமென்ற வாதம் ஓங்கி நிற்கிறது. அப்படியானால், எந்தவொரு அதிகாரமும் இல்லாதவர்களாய் சிறுபான்மை சமூகத்தினரை அடிமைகளாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே பெரும்பான்மையினரின் நோக்கம் என்பது தெளிவுபடுகின்றது.
இதேவேளை, அதிகாரங்களை இல்லாதொழிக்க வேண்டும் என்ற கோஷசத்தையும், அதேநேரம் இராணுவ ஆக்கிரமிப்பு, இராணுவ கெடுபிடிகள் ஆகியவற்றைக் குறிப்பிட்ட சிலரே விரும்புகின்றனர். தவிர்க்க முடியாத காரணத்தினால் அவர்களின் குரல்களும் எடுபடுகின்றன. எனினும், ஒட்டுமொத்த சிங்களவர்களும் இந்த நிலைப்பாட்டில் இருப்பார்கள் என்று கூறிவிடமுடியாது. என ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
No comments