Breaking News

சவூதி தூதுவர் மீண்டும் வந்தார்

Saudi_Arabia_Grungy_Flag_by_think0இலங்கைக்கான சவூதி அரேபியா தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸ் அண்மையில் மீண்டும்  இலங்கை திரும்பியுள்ளார். சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய மூதூரை சேர்ந்த ரிசான நபீகிற்கு கடந்த ஜனவரி 9ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதன் விளைவாக குறித்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவர் அஹமட் ஜவாத் கடந்த ஜனவரி 9ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தினால் மீளழைக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் சற்று விரிசல் ஏற்பட்டிருந்தது.  இதனையடுத்து இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸை 24 மணித்தியாலங்களிற்குள் நாடு திரும்புமாறு சவூதி அரேபிய அரசாங்கம் கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி அறிவித்தது. அதன் படி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் மீண்டும் சவூதி அரேபியா திரும்பினார்.

இந்நிலையில் சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவராக வீ.கிருஷ்ணமூர்த்தி அண்மையில் நியமிக்கப்பட்டார். இதனையடுத்தே  திருப்பி அழைக்கப்பட்டிருந்த இலங்கைக்கான சவூதி அரேபியா தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸ் இலங்கை திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரமழானை முன்னிட்டு பேரீத்தம் பழங்கள் அன்பளிப்பு!

VV_Saudi-Srilanka0000001இதே வேளை, எதிர் வரும்  ரமழானை முன்னிட்டு இலங்கையில் உள்ள நோன்பாளிகளுக்கு வழங்கவென சவூதி அரேபிய அரசாங்கம் 200 மெற்றிக் தொன் பேரீத்தம் பழங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

மேற்படி பேரீத்தம் பழங்களை உத்தியோக பூர்வமாக வழங்கும் நிகழ்வு கடந்த 09ஆம் திகதி பிரதமரும் புத்தசாசன மற்றும் மதவிகார அமைச்சருமான டி.எம்.ஜயரத்ன தலைமையில் அவரது வாசஸ்தளமான விசும்பாயவில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் பிரதமரிடம் கையளித்தார். மேற்படி நிகழ்வில் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பிரதியமைச்சர்களான எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்த்தன, ஏ.ஆ.எம்.அப்துல் காதர் மற்றும் மேல்மாகாண ஆளுநர் அஷ் செய்யத் அலவி மௌலானா, முஸ்லிம் சமய பன்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல், பிரதிப் பணிப்பாளர் ரபீக் இஸ்மாயில், உதவிப்பணிப்பாளர் நூறுல் அமீன் உற்பட திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மேற்படி பேரீத்தம் பழங்களை இலங்கையில் உள்ள சகல பள்ளி வாசல்களுக்கும் முஸ்லிம் சமய பன்பாட்டலுவல்கள் திணைக்களத்தினூடாக பகிர்தளிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக  பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் தெரிவித்தார்.

No comments