மியன்மாரிலும் இலங்கையிலும் பௌத்தர்கள் முஸ்லிம்களைத் தாக்கியதற்கு தலாய் லாமா கண்டனம்
மியன்மாரிலும் இலங்கையிலும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் தாக்குதல்களை பௌத்த மதகுருக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என திபெத் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார்.
செவ்வாய் இரவு அமெரிக்காவின் மேரிலேன்ட் பல்கலைக்கழகத்தில், 15,000 பேருக்கு மத்தியில் உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மத ரீதியான வன்முறை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோதே இக்கருத்துக்களை அவர் முன்வைத்துள்ளார்.
மதத்தின் பெயரால் மேற்கொள்ளப்படும் அனைத்துக் கொலைகளையும் கண்டித்த அவர், தனது சொந்த மதத்தையும் இதில் உதாரணம் காட்டிப் பேசினார்.
இலங்கையிலும் மியன்மாரிலும் மதகுருக்கள் உள்ளடங்கிய பௌத்தர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை முன்னெடுக்கிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மியன்மாரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்வதற்கு இந்த மத ரீதியான வன்முறைகளே காரணமாய் அமைந்தன. அதேவேளை, பௌத்த மத குருக்கள் முஸ்லிம்களது வர்த்தக நிறுவனங்களை இலங்கையில் தாக்கியுள்ளனர்.
“மியன்மாரிலும் இலங்கையிலும் பௌத்தர்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். பௌத்த மதகுருக்கள் முஸ்லிம் பள்ளிவாசல்களை அல்லது குடும்பங்களை நாசம் செய்கின்றனர். உண்மையிலேயே இது மிகவும் துக்ககரமானது” என அவர் குறிப்பிட்டார்.
முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான எதிர்மறை உணர்வுகளை அவர்கள் உருவாக்கினால், தயவு செய்து புத்தரது முகத்தை நினைவில் கொள்ளட்டும். அங்கு புத்தர் இருந்தால் அவர் முஸ்லிம்களைப் பாதுகாப்பார்.
இவ்வாறு தலாய் லாமா அங்கு குறிப்பிட்டார்.
(MP)
No comments