புயலுக்கு போர்க் கொடி தூக்கும் ராவம் பலய அமைப்பு
கடந்த சில தினங்களாக இலங்கையை விசேடமாக வடக்குப் பகுதியை புயல் அச்சுறுத்தி வருகிறது. இதற்கு மஹாசேன என பெயரிடப்பட்டுள்ளது.
அது தற்போது திருகோணமலையில் இருந்து 650 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இது மியான்மர் - பங்களாதேஷ் நோக்கி நகர்ந்து வருகிறது. எனினும் இதன் தாக்கம் இலங்கையிலும் காணப்படுகிறது.
அங்காங்கே சிறியளவிலான சூறாவளி வீசி வருவதுடன், இடிமின்னலுடன் மழையும் கொட்டி வருகிறது,
இந்நிலையில் தற்போதுள்ள புயலுக்கு மஹாசேன என பெயரிடப்பட்டமைக்கு, பெளத்த பேரினவாத அமைப்பான ராவன பலய போர்க்கொடி தூங்கியுள்ளனர்.
சிறிலங்காவின் சிறந்த மன்னனாக கருதப்படும் மஹாசேனனின் பெயரை அழிவுகளை ஏற்படுத்தும் புயல் சூட்டப்பட்டுள்ளதாக அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மஹாசேன மன்னனின் பெயரை இந்தப் புயலுக்குச் சூட்டியதற்காக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் எச்.காரியவசம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
வங்கக் கடலில் உருவாகும் புயல்களுக்கு, இந்தப் பிராந்தியத்தில் உள்ள எட்டு நாடுகள் பெயரிடுவது வழக்கம்.
அகரவரிசைப்படி ஒவ்வொரு புயலுக்கும் அந்தந்த நாடுகள் அளித்த பட்டியலின் படி புயல்களுக்கு பெயரிடப்பட்டு வருகிறது.
2003இல் இலங்கை கொடுத்த மஹாசேன மன்னனின் பெயர், தற்போது வழங்கக் கடலில் நிலைகொண்டுள்ள புயலுக்கு சூட்டப்பட்டது.
அனைத்துலகக் குழுவினால் இந்தப் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்தப் பெயரை நீக்கும்படி இலங்கையினால் கோரப்பட்டுள்ளது.
எல்லாக் காலங்களிலும் புகழ்பெற்ற மன்னனான மகாசேனனின் பெயரை புயலுக்குச் சூட்டியது அவமானம் என்று மூத்த பேராசிரியர் ஜே.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.
மகாசேன என்ற பெயரை இந்தப் புயலுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்று புதுடெல்லியில் உள்ள வளிமண்டலவியல் நிலையத்துக்கு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையின் இந்த முடிவினால், வங்கக் கடலில் தற்போது நிலைகொண்டுள்ள புயல் பெயரை இழந்துள்ளது.
அடுத்த புயலுக்கு பிரியா என்று பெயர் சூட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments