செனல்4 ஆவனப் படத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பில் பிழை இருக்கிறது : பீ.எம்.ஹம்ஸா
இலங்கையின் போர்க் குற்றங்கள்' என்ற தலைப்பில் பிரித்தானியாவிலிருந்து ஒளிபரப்பு செய்யப்படும் செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு, இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கை தொடர்பில் மேற்படி தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோக்கள் போலியானவை என்றும், இந்த வீடியோ காட்சிகளின் நம்பகத்தன்மை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் ஐரோப்பிய நாடாளுமன்றிற்கான இலங்கை பிரதிநிதி பீ.எம்.ஹம்ஸா தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடாளுமன்றில் செனல் 4 ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டதன் பின்னர் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஆவணப்படத்தின் மூல ஆதாரங்களை தந்து உதவினால் விசாரணைகளை நடத்த முடியும் எனவும் தெரிவித்துள்ள அவர், தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்டவர் என்ற ரீதியில் செனல் 4 ஊடகத்தின் ஆவணப்படம் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது என்பதனை திட்டவட்டமாக அறிவிக்க முடியும்' எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை திருப்திபடுத்தும் நோக்கில் செனல் 4 தொலைக்காட்சி செயற்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள ஹம்ஸா, தமிழீழ விடுதலைப் புலிகளின் குற்றச் செயல்களுக்கு நிதி உதவிகளை வழங்கியவர்கள் தற்போது சுயாதீன மனித உரிமை ஆர்வலர்களாக தங்களை வெளிப்படுத்திக்கொள்ள முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் எண்ணிலடங்காத மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர். செனல் 4 ஆவணப்படத்தில் தமிழ் மொழியில் குறிப்பிடப்பட்ட கருத்துக்கள் பிழையாக திரிபுபடுத்தப்பட்ட அடிப்படையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் தாக்கியதாக பொதுமக்கள் குறிப்பிட்டு கூறவில்லை. தாக்குதல் நடத்தப்பட்டதாகவே அவர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய புதல்வர் பாலசந்திரனை இராணுவத்தினர் படுகொலை செய்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. ஒரு சில புகைப்படங்களை வைத்துக்கொண்டு இந்தப் படுகொலையை படையினர் மேற்கொண்டிருக்கலாம் என தீர்மானிப்பது எந்த வகையில் நியாயமானது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
செனல் 4 ஊடகத்தின் ஆங்கில மொழிப்பெயர்ப்பில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதனை தமிழ் மொழி தெரிந்த அனைவரும் ஏற்றுக்கொள்வர்' எனவும் ஹம்சா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
(ST)
No comments