Breaking News

இனவாதத்தை தூண்டும் SMS களை பரப்பியதாக அசாத் சாலி மீது குற்றச்சாட்டு- சாலியின் வீட்டில் CID

315774_538334319527671_1778985718_nநாட்டில் இனவாத மற்றும் மதவாதங்களை தூண்டும் வகையில் கையடக்க தொலைபேசி வழியாக குறுந்தகவல்களைப் பரப்பியமை தொடர்பாக இன்று திங்கட்கிழமை குற்றப் புலனாய்வுத் துறை பொலிஸார் தேசிய ஐக்கிய முன்னணி பொதுச் செயலாளர் அஸாத் சாலியை விசாரணைக்கு உட்படுத்தினர்.

இதுசம்பந்தமாக சி.ஐ.டி தலைமையகத்துக்கு வந்து வாக்குமூலம் ஒன்றை வழங்குமாறு அவர்கள் அஸாத் சாலியை கடந்த சில வாரங்களாக வற்புறுத்தி வந்தனர். ஆனால் அங்கு வரமுடியாது. தேவையானால் வீட்டுக்கு வாருங்கள் உங்கள் கேள்விகளுக்கு பதில் தருகிறேன் என்று அஸாத் சாலி திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

இந்நிலையில் இன்று முற்பகல் அஸாத் சாலியின் வீட்டுக்கு வருகை தந்த பொலிஸார் அண்மைக் காலங்களில் ஆங்கில ஊடக நிறுவனம் ஒன்றை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் முஸ்லிம்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சுமார் 27 குறுந்தகவல்களைப் பரிமாறியுள்ளதாகவும் அவற்றில் மூன்று தகவல்கள் அஸாத் சாலிக்கு அனுப்பப்பட்டுள்ளமை பற்றியும் கேள்வி எழுப்பினர்.

‘ஏன்னுடைய தொலைபேசி இலக்கம் ஏராளமான மக்களுக்குத் தெரியும். தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் என்னோடு பேசுகின்றனர். அதுபோல் தினசரி நூற்றுக்கணக்கான குறுந்தகவல்களும் எனக்கு வருகின்றன. யார் என்ன தகவலை எப்போது அனுப்புகின்றார்கள் என்றெல்லாம் என்னால் நினைவில் வைத்திருக்க முடியாது. அப்படி நான் அவற்றையெல்லாம் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று யாரும் எதிர்ப்பார்க்கவும் முடியாது. மேலும் நீங்கள் குறிப்பிடும் இந்தத் தகவல் எனக்கு வந்ததாக சொல்லுகின்றீர்கள். அப்படியானால் நீங்கள் கேள்வி கேட்க வேண்டியது தகவல் அனுப்பியவரையே தவிர அதைப் பெற்றுக் கொண்ட என்னையல்ல’ என்று பதில் அளித்துள்ளார்.

பொலிஸார் எழுப்பிய மேலும் சில கேள்விகளுக்கு பதில் அளித்த அஸாத் சாலி, ‘நாட்டில் குழப்பம் விளைவிப்பதும் விளைவிக்க முயல்வதும் பதற்ற நிலையை ஏற்படுத்துவதும் நாங்கள் அல்ல. அது யார் என்பதை நான் உங்களுக்கு ஆதாரபூர்வமாகக் காட்டுகின்றேன்’ எனக் கூறி அநுராதபுரம் தர்கா உடைக்கப்படுவது, தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்படுவது உட்பட இன்னும் பல முஸ்லிம் விரோத செயற்பாடுகள் பற்றி தன் வசம் உள்ள படங்களை அவர்களுக்குக் காட்டியுள்ளார். ‘உங்களது உயர் அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில் தான் இவ்வளவு அநியாயமும் இந்த நாட்டில் நடந்திருக்கின்றது.

அவர்களை விசாரித்தால் இந்த சம்பவங்களின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள். இந்த குழப்பவாதிகளின் அனுசரணையாளர்கள் யார்? பாதுகாவலர்கள் யார்? என்பதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். அதை விட்டுவிட்டு முஸ்லிம்களை ஆத்திரப்படாமல் அமைதியாகவும், சகிப்புத் தன்மையோடும் நடந்து கொள்ளுமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்துவரும் என்னை விசாரணை செய்வதில் பலனில்லை. இவ்வாறு மொட்டை குறுந்தகவல்கள் அனுப்பி முஸ்லிம்களையோ மற்றவர்களையோ குழப்பவேண்டும் என்ற எண்ணமோ தேவையோ எனக்கு கிடையாது. அதற்கான நேரமும் எனக்கு இல்லை. நான் எதைப் பேசினாலும் நேரடியாக பேசுவேன். மக்களுக்கு சொல்ல வேண்டியதை நேரடியாகச் சொல்வேன்.

அதில் எந்த அச்சமும் எனக்கில்லை. நடந்த சம்பவங்களை பொலிஸாராகிய நீங்களே மூடிமறைக்கப் பார்க்கின்றீர்கள். இவை தொடர்பாக இதுவரை ஒருவரையாவது நீங்கள் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தியுள்ளீர்களா? பொலிஸ்மா அதிபர் மிகவும் நல்லவர். அவர் தனது கடமையை பாரபட்சமின்றி செய்வார் என்று இன்னமும் நாம் நம்புகின்றோம்’ என்று பதில் அளித்துள்ளார். வாக்குமூலத்தைக் குறிப்பெடுத்துக் கொண்ட பொலிஸார் அங்கிருந்து அமைதியாகத் திரும்பிச் சென்றுள்ளனர்.

 

(NM)

No comments