Breaking News

'இலங்கையில் பகைமைக்கு இடமில்லை' கொழும்பில் இளைஞர்கள் பேரணி (Photo)

இலங்கையில் பகைமைக்கு இடமில்லை எனும் தொனிப்பொருளுடனான  பேஸ் புக் நண்பர்களின் பேரணி ஒன்று  இன்று கொழும்பு தாமரை தடாகம் முன்பாக இடம்பெற்றது.

நாட்டில் ஒற்றுமையை பாதுகாக்கும் வகையிலான பதாகைகளை ஏந்தியவாறு தாமரை தடாகம் முன்பிருந்து  தாமரை தடாக வீதியினூடாக ஊர்வலமாக பொது நூலக சந்திவரை சென்றது.

சமாதானத்திற்காக  பேஸ் புக் மூலமான அழைப்பின் பேரில் ஒன்று சேர்ந்த இபேபேரணியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் பாராளு மன்ற உறுப்பிணர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் சமாதான விரும்பும் மக்கள் உட்பட பல சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன்(த.தே.கூ.), ஆர்.யோகராஜன் (த.தே.கூ.), சுஜீவ சேனசிங்க(ஐ.தே.க.), ஹர்ஷ டீ சில்வா(ஐ.தே.க.), எரான் விக்ரம ரத்ன(ஐ.தே.க.), ரஜீவ விஜேசிங்க (ஐ.ம.சு.கூ.) ஆகியோர் கலந்து கொண்டனர். அத்தோடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், மனோ கணேசன் ஆகியோரும் மாகாணசபை உறுப்பினர்களான பத்தேகம சமித்த தேர் (தென் மாகாண சபை), ஷிரால் லக் திலக (மேல் மாகாண சபை) போன்றோரும் கலந்துகொண்டனர்.

இந்த ஒன்று கூடலின் போது ஒருங்கமைப்பாளர்களால் துண்டுப்பிரசுரமொன்று பகிரப்பட்டது. அதில் இலங்கையில் பகைமையுணர்வை இல்லாது செய்வதற்கு சில வழிகாட்டல்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

முக்கியமாக எந்த மதமும் ஏனைய மதங்களுடன் பகைமையை பாராட்டுமாறு கூறவில்லை. எனவே மத அடிப்படையில் வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்வதோடு இதனை ஏனையோர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் என்றும் அந்த துண்டுப்பிரசுரத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதேவேளை குறித்த கூட்டத்தை குழப்புவதற்காக மற்றுமொரு கும்பல் அங்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்தது. எனினும் குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பொலிஸார் குழப்பம் விளைவிக்க முயன்ற கும்பலை அங்கிருந்து வெளியேற்றினர்.

மாற்று குழுவின் துண்டு பிரசுரத்தில் , பேஸ் புக் குழுமத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணியானது வெளிநாட்டு சக்திகளுடன் சேர்ந்து இலங்கையை பிரிக்கும் சதித்திட்டமாகும். வெளிநாட்டு தலையீடுகளுக்கான முயற்சி இதுவாகும் என குறிப்பிடப்பட்டிருந்ததோடு, நீங்கள் இவர்களுடன் சேர்ந்து தேச துரோகம் செய்ய முயற்சிக்கிறீர்களா என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இந்த துண்டு பிரசுரத்துக்கு அடிப்படைவாதிகளுக்கு எதிரான மக்கள் செயற்றிட்டம் உரிமை கோரியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

No comments