தொல்பொருள் வலயமாகிறது ஜெய்லானி!
‘‘எமது அடுத்த இலக்கு ஜெய்லானி. ஜெய்லானி பள்ளிவாசல் அமைந்துள்ள நிலப்பரப்பில் கூரகல விகாரை அமைந்துள்ளது. இது எமது புனித பிரதேசம். இப்பிரதேசத்தைப் பாதுகாப்பது எமது கடமை. அதற்காக எதிர்வரும் வெசாக் தினத்தன்று கூரகல பகுதியில் பல ஆயிரக் கணக்கானோர் அணிதிரளவுள்ளோம்Ó என்று பொதுபலசேனா அமைப்பு பகிரங்கமாக அறிவித்துள்ளது.
எதிர்வரும் மே மாதம் 24ஆம் திகதி வெசாக் தினமாகும். பெளத்தர்களின் புனித தினமே அது.
பொதுபலசேனாவின் அறிவிப்பினையடுத்து முஸ்லிம் கவுன்ஸில் உடனடியாக செயலில் இறங்கியது. பிரச்சினை முஸ்லிம் - சிங்கள இனங்களுக்கிடையில் விரிசல்களை உருவாக்கிவிடும் என்பதால் அதனைத் தடுக்கும் திட்டங்கள் தீட்டப்பட்டன. பேச்சுவார்த்தைகள் மூலம் சமரச தீர்வொன்றினைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் முஸ்லிம் கவுன்ஸில் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை களமிறங்கின.
மூன்று கட்டப் பேச்சுவார்த்தைகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபய ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்று இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம்.அமீன், செயலாளர் அஸ்கர்கான், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி, பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாறக், பிரதிச் செயலாளர் மெளலவி எம்.எஸ்.எம்.தாஸிம், ஜெய்லானி பள்ளிவாசல் தலைவி ரொசானா அபுசாலி, இத்தாபன நாயக்க தேரர், பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரர், அஸ்கிரியபீட தம்மானந்த தேரர், தெல்தொட்ட தம்ம ஜோதி தேரர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சமரச தீர்வுக்கான ஆலோசனைகள்
பிரச்சினையை சமரசமாக தீர்த்துக்கொள்வதற்காக பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
* கூரகல பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கென ஜெய்லானி பள்ளிவாசலுக்கு 22 ஏக்கர் காணி ஒதுக்குதல்.
*54 ஏக்கர் காணியை அனைவரும் பயன்படுத்தக் கூடியவாறு பொது பாவனைக்கு ஒதுக்குதல்.
*பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான நான்கு கடைகளை நீதிமன்ற உத்தரவின்படி ஒரு வார காலத்துக்குள் அப்புறப்படுத்தல்,
*முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் குறிப்பிட்ட கடைகளை நிர்மாணிக்க அனுமதியளித்தல்.
*ஏப்ரல் மாத இறுதிக்குள் பள்ளிவாசல் சார்ந்ததாக அமைந்துள்ள கட்டிடத்தை அகற்றுதல்.
*சிவனொளிபாத மலையைப் போன்று இந்த இடத்தை தரிசித்து சமய வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதித்தல்.
குறிப்பிட்ட இணக்கப்பாட்டின்படி முஸ்லிம்களுக்கு சொந்தமான 4 கடைகளும் உரிமையாளர்களினால் கடந்த 3ஆம் திகதி அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஜெய்லானி பள்ளிவாசல்
அப்துல் காதிர் ஜெய்லானி எனும் பெயருடைய இஸ்லாமிய இறை நேசருடன் தொடர்புள்ள பிரதேசங்களில் ஒன்று பலாங்கொடையிலுள்ள ஹிட்டுவாங்கல, கூரகல எனும் இரு மலைகளுக்கிடையில் அமைந்துள்ள ஜெய்லானி ஆகும்.
கூரகல சுரங்க மலை (குகையைக் கொண்டுள்ள மலை) அல்லது கால் அடிமலை எனவும் அழைக்கப்படுகிறது. பெரிய பாராங்கல் ஒன்றின் கீழ் மங்கலான பாதச்சுவடு காணப்படுவதனாலேயே அது இவ்வாறு அழைக்கப்படுகிறது.
ஹிட்டுவாங்கல (உள்ளங்கை அடையாளம் பதிந்துள்ள மலை) என்றும் அழைக்கப்படுகிறது. இறைநேசர் தியானத்தில் ஈடுபட்டிருந்த கூரகல ஹிட்டுவாங்கலயை விட உயரமானது. 6 அடி நீளமும் 4 அடி அகலமும் உடைய தியான இருக்கை செங்குத்தான உயரமான மலை விளிம்பில் ஆபத்தான நிலையில் அமைந்துள்ளது.
1922ஆம் ஆண்டு ஹிட்டுவாங்கல மலையின் கீழ் சிறிய பள்ளிவாசல் ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. கூரகல பெளத்த துறவிகளின் தியான ஸ்தலம் என உரிமை கோரப்பட்டாலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இப்பிரதேசத்தில் பெளத்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கூரகல குகையைத் தவிர ஏனைய எல்லா குகைகளிலும் அவை பெளத்த பிக்குகள் சங்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டன என கல்வெட்டுகள் தெளிவாகத் தெரிவிக்கின்றன. கூரகலயில் கல்வெட்டுகள் இவ்வாறு குறிப்பிடாமை கவனிக்கத்தக்கதாகும்.
இலங்கை வரைபடத்தில் திருத்தம்
இலங்கை சுதந்திரம் பெற்ற பின்பு இலங்கையின் வரைபடம் திருத்தியமைக்கப்பட்டது. 1901 முதல் 1928 வரையிலான காலத்தில் இலங்கையின் வரைபடங்கள் கூரகலையை ஒரு ‘முஹம்மதியஸியாரம்’ என்றே குறிப்பிட்டுள்ளன. இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்த குறியீடு 1971ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திருத்தங்களுடனான இலங்கை வரைபடத்தில் ‘முஹம்மதியா ஸியாரம்’ எனும் சொல் நீக்கப்பட்டுள்ளது. இதேவேளை தொல்பொருள் திணைக்களத்தினால் இடப்பட்டுள்ள பெயர்ப்பலகையில் இவ் இடம் ‘கி.மு.2ஆம் நூற்றாண்டுக்கான பெளத்த துறவி மடம் என காட்டப்பட்டுள்ளது.’
லக்ஸதீவு மெளலானா
போத்துக்கேயர், ஒல்லாந்தர் இலங்கையின் கரையோரப் பகுதியில் குடியேறியதன் பின் ஜெய்லானி கைவிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் வர்த்தகர்கள் கூரகல ஊடாக இரத்தினபுரிக்கு பாவா ஆதம் மலைச் சிகரத்துக்குமான பாதையைப் பயன்படுத்துவதை நிறுத்திக்கொண்டதுடன் தப்தர் ஜெய்லானியும் கைவிடப்பட்டது. 1850 வரை ஜெய்லானி பெயரளவிலே இருந்தது.
இந்தியா லக்ஸதீவைச் சேர்ந்த மெளலானா அப்துல் காதர் ஜெய்லானி தியானத்தில் கழித்த இடத்தைத் பற்றி அறிய பலாங்கொடைக்கு வந்து முயற்சிகளை மேற்கொண்டு குறிப்பிட்ட குகைக்குச் சென்று பல நாட்கள் தங்கினார்.
மெளலானா 1908இல் வபாத்தானார். அவரது அடக்கஸ்தலமே பாவா ஸியாரம் என அழைக்கப்படுகிறது. இது ஜெய்லானிக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
தாது கோபுரம் நிர்மாணம்
1971ஆம் ஆண்டு தொல்பொருள் திணைக்களம் ஜெய்லானியில் 4 அடி உயரமான தாதுகோபுரம் ஒன்றினை நிர்மானித்தது. 4 அடிக்கு மேல் கோபுரம் நிர்மாணிக்கப்பட்டால் முஸ்லிம்களால் பிரச்சினை ஏற்படும் என அரசு உணர்ந்தது. இதனாலே 4 அடியுடன் கோபுர நிர்மாணத்தை நிறுத்திக்கொள்ளுமாறு அமைச்சரவை கட்டளையிட்டது.
இதன்பின்பு பள்ளிவாசல் அமைந்துள்ள இட நிலக்கூறுகள் தொல்பொருள் ஒதுக்கிடமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இதனையடுத்தே அவ்விடத்தில் பெளத்த துறவி மடமொன்று இருந்ததாகக் கூறும் பெயர்ப்பலகையொன்று தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்டது.
பின்பு தொல்பொருள் திணைக்களத்தினால் அவசர அவசரமாகக் கட்டப்பட்ட தாது கோபுரம் அமைச்சரவையின் கட்டளைப்படி நிறுத்தப்பட்டதையடுத்து கூரகலவுக்கான (ஜெய்லானி) முஸ்லிம்களின் உரிமைகள் பாதிக்கப்பட மாட்டாது எனும் சுற்று நிருபமும் அரசினால் வெளியிடப்பட்டது.
இஸ்லாமிய தொல்பொருள்
தொல்பொருள் திணைக்களம் சிங்கள, பெளத்த, தொல்பொருட்களில் மாத்திரமே தொடராக அக்கறை செலுத்தி வந்துள்ளது.
ஜெய்லானியிலுள்ள அரபு எழுத்துக்கள் மற்றும் ஹிட்டுவாங்கல பாறையிலுள்ள அரபு எழுத்துக்களைப் பதிவு செய்து, அவற்றின் பொருள் விளக்கத்தை ஆராயுமாறு முஸ்லிம்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது என்றாலும் தொல்பொருள் திணைக்களம் இதனைக் கவனத்தில் கொள்ளவில்லை. அரபு எழுத்துக்களின் அமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் இக் கல்வெட்டுகள் எவ்வளவு பழமையானது எனக் கூறமுடியாதுள்ளது. இதனால் இதுபற்றி ஆய்வுகளை மேற்கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.
முஸ்லிம் கவுன்ஸில் தலைவர்
முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீனிடம் இது தொடர்பில் கருத்து வினவியபோது அவர் பின்வருமாறு தெரிவித்தார்.
‘ஜெய்லானி பள்ளிவாசல் அமைந்துள்ள கூரகல பிரதேசம் பெளத்தர்களின் புனித பிரதேசம் எனவும் தொல்பொருள் பகுதி எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினையின் பின்னணியில் பொதுபலசேனா இருக்கிறது.
ஜெய்லானி, முஸ்லிம்களுக்கும், பெரும்பான்மையினருக்குமிடையில் மோதலொன்றுக்கு காரணமாக அமைந்து விடுவதை நாம் விரும்பவில்லை. எனவே, சமரச முயற்சிகளை ஏற்படுத்தி தீர்வு காணுவதில் முஸ்லிம் கவுன்ஸில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளரின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது பேராசிரியர் பெல்லன்வில தேரரும் சமரச முயற்சியில் மிகவும் ஈடுபாடுகாட்டினார். இந்த சமரச முயற்சி இரு தரப்பினரது வெற்றி என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பள்ளிவாசலைப் பாதுகாத்துக் கொள்வது எமது கடமை என்றார்.
பள்ளிவாசல் பரிபாலன சபை
ஜெய்லானி பள்ளிவாசல் பரிபாலன சபையின் தலைவி ரொஷானா அபுசாலி விடிவெள்ளிக்கு
கருத்துத் தெரிவிக்கையில்,
‘ஜெய்லானி பள்ளிவாசல் மற்றும் அப்பிரதேசம் முஸ்லிம்களுக்கு மிகவும் பெறுமதி வாய்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். பள்ளிவாசல் பிரதேசம் மற்றும் பள்ளிவாசல் தொடர்பான பிரச்சினைகளுக்கு பரிபாலன சபை சுமுகமான இணக்கப்பாட்டுடனான தீர்வுகளை பெற்றுக்கொள்ளவே விரும்புகிறது.
ஏனைய சமூகங்களுடன் இணைந்து நல்லுறவுடன் செயற்படுவதையே நோக்காகக் கொண்டுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்புச் செயலாளருடன் கலந்துரையாடியிருக்கிறோம். எமது சமயக் கடமைகளுக்கு பாதுகாப்பு வழங்குவார் என்பதில் எமக்கு நம்பிக்கையிருக்கிறது என்றார்.
பாதுகாப்புச் செயலாளர் நேரடி விஜயம்
இதேவேளை, கடந்த திங்கட்கிழமை மாலை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஜெய்லானி பள்ளிவாசல் அமைந்திருக்கும் கூரகல பகுதிக்கு நேரடி விஜயமொன்றினை மேற்கொண்டார். அவர் பள்ளிவாசல் மற்றும் பள்ளிவாசலுடன் இணைந்த சுரங்கத்தையும் பார்வையிட்டார்.
பாதுகாப்புச் செயலாளர் பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவி ரொஷானா அபுசாலி உட்பட பரிபாலன சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.
கூரகல பிரதேசம் தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாட்டின் கீழ் இருப்பதனால் இப்பிரதேசம் தொடர்பான தீர்மானங்களை தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் செனரத் திஸா நாயக்கவினாலேயே மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.
தீர்மானங்கள் முஸ்லிம்களின் சமயக் கடமைகளுக்கு தடைகள் இன்றி மேற்கொள்ளப்படுமெனவும் சமயத்தலம் பாதுகாக்கப்படுமென அவர் உறுதியளித்ததுடன் இவ்வாறு தீர்மானங்களை மேற்கொள்ளும்படி தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கினார்.
தொல்பொருள் திணைக்களத் தீர்வுகள் எவ்வாறு அமையும்?
பாதுகாப்புச் செயலாளர் ஜெய்லானி பள்ளிவாசலுடன் தொடர்புடைய பிரச்சினைகளை தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் கைகளில் ஒப்படைத்துவிட்டு நழுவிக் கொண்டுள்ளதாகவே எண்ணத் தோன்றுகிறது.
தொல்பொருள் திணைக்களத்தின் பணி தொல் பொருள்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதாகும். 1971 ஆம் ஆண்டில் இத்திணைக்களம் இப்பகுதியில் தாதுகோபுரம் ஒன்றினை நிறுவியமை குறிப்பிடத்தக்கதாகும்.
அமைச்சரவையின் கட்டளையின்பின்பே இத்தாது கோபுர நிர்மாணப் பணிகளை திணைக்களம் நிறுத்தியது. பள்ளிவாசல் அமைந்துள்ள நிலக்கூறுகள் தொல்பொருள் ஒதுக்கிடமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் திணைக்களப் பணிப்பாளர் முஸ்லிம்களின் சமய வழிபாடுகளுக்கும் பள்ளிவாசலுக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் தீர்வுகளை மேற்கொள்வாரா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நன்றி: விடிவெள்ளி
No comments