Breaking News

நவமணி நேர்காணல்...

3-00-13-13-04-11-anews (1) அகில இலங்கை  ஜம்இய்யதுல் உலமா  நவமணியினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்களை வெளியிட்டிருந்தது. (கடந்த 11.04.2013 அன்று அது தொடர்பாக  அதன் இனையத்தளத்தில் வெளியிட்டிருந்த அறிக்கை)

 

08.04.2013

சகோதரர் சிராஜ் எம் ஷாஜஹான்

நவமணி

156, ஆஸ்பத்திரி வீதி

கலுபோவில

தெஹிவலை

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹ{

 

உங்கள் பணி சிறப்பாக அமைய அல்லாஹ் நல்லருள் புரிவானாக!

 

நீங்களும் சகோதரர் அல்-ஹாஜ் என். எம். அமீன் அவர்களும் கேட்டுக்கொண்டதற் கிணங்க உங்கள் கேள்விகளுக்கான பதில்களை இத்தோடு அனுப்பியுள்ளேன். மேலும் ஊடக அறிக்கைகளின் பிரதி இரண்டும் இணைக்கப்பட்டுள்ளன. சமூகம் பிரச்சினைப் படாவண்ணம் அமையுமாயின் பிரசுரியுங்கள் இல்லையெனில் விட்டுவிடுங்கள். கை வசம் எனது படங்கள் இ;ல்லை. எம்மீது நீங்கள் கொண்டுள்ள நல்லெண்ணத்திற்கு எனது நன்றிகள். அல்லாஹ் அருள் புரிவானாக!

வஸ்ஸலாம்.

 

செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.

 

கண்டியில் இடம்பெற்ற உங்களது மாநாட்டில் எப்படியான தீர்மானங்களுக்கு வந்தீர்கள்?

கண்டியில் எமது நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நடைபெற்றதேயன்றி எந்த ஒரு மாநாடும் கூட்டப்படவில்லை. அதில் வழமைபோன்று நிகழ்ச்சி நிரலின் படி, ஜம்இய்யாவின் செயல்பாடுகள், அதன் பணியை சிறப்பாகச் செய்வதற்கான வழிமுறைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. இன்னும் நீங்கள் எதிர்பார்ப்பது போன்று மாநாட்டுத் தீர்மானங்கள் என்று எதுவும் வெளியிடப்படவில்லை.

உலமா சபையின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி ?

நீங்கள் எதை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை என்று குறிப்பிடுகிறீர்கள் என்று விளங்கவில்லை. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழமை போன்று அதன் பணிகளைச் செய்துகொண்டிருக்கும்.

குனூத் நிறுத்தப்பட்டது பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றதே?

குனூத் அந்-நாஸிலாவையன்றி குனூத் நிறுத்தப்பட்டது என்று நீங்கள் கேட்பது மக்களை மேலும் பிரச்சினைக்குத் தள்;ளும் ஒரு கேள்வியாகவே கருதுகிறேன். குனூத் அந்-நாஸிலாவை ஓதுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று மக்கள் செயற்பட்டனர். இக்குனூத்தை தொடர்ந்தும் ஓதுவது பற்றி உலமாக்கள் மிக விரிவாக ஷரீஆவின் வரையரைக்குள் ஆராய்ந்து அதனைத் தொடர்வதன் அவசியம் உணரப்படாமையினால் குனூத் அந்-நாஸிலாவை நிறுத்திக்கொள்ளலாம் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்குவதாகத் தீர்மானிக்கப்பட்டது. கடந்த வார நவமணி பத்திரிகையில் முன்பக்கச் செய்தியாக வெளிவந்த செய்தி முற்றிலும் தவறானதும் எந்தவொரு அடிப்படையுமற்றதாகும். கண்டியில் நடந்து முடிந்த நிறைவேற்றுக் குழுவின் இரண்டு நாள் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை மார்ச் 31 ஆம் திகதியே  முடிவுற்றது. குனூத் நாஸிலா பற்றிய பத்திரிகைச் செய்தி செவ்வாயன்று மாலையே பத்திரிகைக்கு அனுப்பிவைக்க முடிந்தது. குறித்த செய்திக்கும் திங்கள் காலை பாதுகாப்புச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கும் எந்தவொரு சம்பந்தமுமில்லை. நவமணி உட்பட பல பத்திரிகைகளில் பாதுகாப்புச் செயலாளரின் அழுத்தம்தான் காரணமெனக் கூறப்பட்டது தவறானது. அதுபற்றி நாம் அனுப்பிவைத்த மறுப்பறிக்கையை சில பத்திரிகைகள் இருட்டடிப்புச் செய்தன. அதன் பிரதியொன்றை இத்துடன் அனுப்பி வைக்கின்றோம். எவருடைய  அழுத்தத்திற்காவது குனூத் அந்-நாஸிலாவை விடக்கூறியதாகச் சொல்வது நகைப்புக்குரியதன்றோ!.

பொதுபல சேனாவுடனான சந்திப்பு பற்றி என்ன கூறுகிறீர்கள்?

தொடராக முஸ்லிம்கள் மீது குறை கூறி வந்த குறிப்பிட்ட சாரார் பாதுகாப்புச் செயலகத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாப் பிரதிநிதிகளைச் 01.04.2013 அன்று சந்தித்தனர். இது பற்றி கடந்தவார நவமணியில் முதற்பக்க தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தீர்கள். சந்திப்பின் பொழுது பேசப்பட்ட விடயங்களைக் குறிப்பிட்டிருந்தீர்கள். முதன் முதல் சந்தித்ததனால் அது ஒரு நல்ல பாலமாக அமையவேண்டுமென விரும்புகிறோம். மீண்டும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் அதைத் தட்டிக்கழிக்க வேண்டிய அவசியமில்லை. அது எந்த மாதத்தில் நடைபெற்றாலும் சரியே. உரியபோது எதைப் பற்றி பேசுவது என்று யோசிக்கலாம்.

பொதுபலசேனாவின் செயற்பாடுகள் குறைந்துள்ளதா?

நீங்கள் குறிப்பிட்ட சாராரின் செயற்பாடுகளை பத்திரிகை வாயிலாகவும் குறுஞ்செய்தியூடாகவும் இணையத்தளங்கள் ஊடாகவும் அறிகிறோம். அவர்களது இயக்கச் செயற்பாடுகள் நடைபெறக்கூடும். அதே நேரம் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் ஏதும் எமக்கெட்டவில்லை. சிலவேளை தகவல் சாதனங்களுக்குக் கிடைத்திருக்கலாம். 

ஹலால் தொடர்பான தற்போதைய நிலைமைகள் என்ன?

வழமை போன்று ஹலால் நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. புதிய நிறுவனங்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்குவது இடை நிறுத்தப்பட்டுள்ளது. புதிய பொறிமுறைகள் அமுலுக்கு வரும்போது சகலதும் சுலபமாகிவிடும்.

விடுமுறை காலங்களில் முஸ்லிம்கள் சுற்றுலாக்களை மேற்கொள்வது நல்லதா?

இது பற்றி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்ட ஊடக அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது. தயவு செய்து அதனையும் பிரசுரிப்பீர்கள் என நம்புகிறோம்.

பொதுபலசேனாவுடன் உலமா சபை மாத்திரம் சந்திப்பது நல்லதல்ல என்ற கருத்து நிலவுகிறதே?

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மாத்திரம் பொது பல சேனாவினரோடு சந்திக்க வேண்டும் என்று நாம் ஏற்பாடு செய்யவில்லை. பாதுகாப்புச் செயலாளரின் அழைப்பை ஏற்றே அங்கு சென்று அவர்களைச் சந்தித்தோம். அச்சந்திப்பு திங்கள் (01.04.2013) அன்றுக் காலை நடைபெற்றது.

அதே போல் குறித்த தினம்; மாலை ஜெய்லானி விவகாரம் பாதுகாப்புச் செயலகத்தில் கலந்துரையாடப்பட்டது. அக்கூட்டத்தில் பொது பல சேன கலந்துகொள்ளவில்லை. வேறு சில பௌத்த துறவிகள் முஸ்லிம் கவுன்சில் தலைவர் என். எம். அமீன், எம். நியாஸ் நகீப் மௌலானா ஜெய்லானி பள்ளிவாசல் நிருவாக பொறுப்பாளர் ரோஷானி அபூ ஸாலிஹ் ஆகியோருடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாப் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர். இவ்வாறே அழைக்கப்படுவோர் கலந்துகொள்வதும் சந்திப்பதும் நல்லதென்பதில் இரு கருத்துக்களுக்குகிடமில்லை.

முக்கியமான முஸ்லிம் தரப்பு விவகாரங்களை உலமா சபை மாத்திரம் கையாள்வது நல்லதல்ல என்றும் சொல்லப்படுகிறதே. இது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

முஸ்லிம் தரப்பு விவகாரங்களை இனங்கண்டு அத்துறை சார்ந்தோர் அதனைக் கையாள்வதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஓரு போதும் முரண்படவில்லை. அவ்வாறு யாரேனும் எண்ணுவதும் நல்லதல்ல. சந்தர்ப்ப வசத்தால் ஜம்இய்யத்துல் உலமாவை தலைமை தாங்க வைப்பதும் பின்னர் அதிலே குறை காண முனைவதும் நல்லதல்ல. ஆலிம்கள்தான் தலைமை தாங்கவேண்டுமென்று கூறும் பலரும் அதனை விமர்சிப்பதை யாராலும் தடுக்கமுடியாது. எனவே, துறைசார்ந்தோர் அவர்கள் சார்ந்த விடயங்களில் இறங்கிச் செயல்படும்போது ஜம்இய்யத்துல் உலமாவை அணுசரித்து ஆலோசனை பெற்று தம் கருமாமாற்றுவது தவறல்ல. சமூக நலனில் அக்கறையுள்ள அனேகம்பேரின் ஆதங்கமும் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து தம் விவகாரங்களை கையாளவேண்டும் என்பதே. அவ்வெண்ணம் கைகூட அல்லாஹ்வின் அருள் கிடைக்கட்டுமாக!

No comments