Breaking News

ஹபாயா அரபியேரின் திணிப்பல்ல: முஸ்லிம் பெண்களின் பாதுகாப்பு

muslim-women-talking‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம்’ என்பது போலத் தற்போது சிலருக்கு முஸ்லிம் பெண்கள் அணியும் ‘ஹபாயா’ என்ற கறுப்பு அங்கியும் அச்சத்தைத் தருவதாக அறிவிக்கப்படுகின்றது. இவ்வாடையானது சர்வதேசத்திலும், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் முஸ்லிம் பெண்கள் மாத்திரமன்றி அங்கு வாழும் பல்லின சமூகப் பெண்களும் இதனை அணிகினறனர். இவ்வாடை எவ்வாறு இங்கு அறிமுகமானது?

கடந்த சில வருடகாலமாக மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளுக்கு பல்லாயிரக் கணக்கான பல்லினப் பெண்களும் வீட்டுப் பணிப் பெண்களாகவும், குடும்பங்களாகவும் சென்று வதிகின்றனர். அந்த நாடுகளின் அனைத்துப் பெண்களும் வீட்டிலிருந்து வெளிச்செல்லும் போது தமது அழகை மறைத்துக் கொள்வதற்காக மார்க்கம் சார்ந்த ஒழுக்க உடையாக இந்த அங்கியை அணிந்தே வெளியேறுவர், அவர்களோடு கூடவே வெளிச்செல்லும் பணிப்பெண்களும் இவற்றை அணிந்து கொள்வர். தாம் வாழும் சூழலுக்கேற்ப அவர்களும் இவற்றை அணிந்தனர்.

எனினும் விடுமுறையில் நாட்டுக்கு மீளும் மாற்று மத சகோதரிகள் அவற்றைத் தவிர்த்து வந்தனர், எனினும் முஸ்லிம் பெண்கள் இங்கு தமது பெற்றோர், உறவினர்கள் வழமையாக அணிந்த மார்க்க ரீதியான சாரியுடன் கூடிய ‘முக்காடு’ எனப்படும் அழகை மறைக்கும் சாரியைக் கைவிட்டு, விலை குறைந்த ‘ஹபாயா’ அங்கியை அணிந்துவர தலைப்பட்டனர். இது இங்குள்ள முஸ்லிம் யுவதியரையும், பெண்களையும் கவர்ந்துகொண்டது.

வழமையான விலையுயர்ந்த பன்னிற கவர்ச்சியான சாரிகளுக்கு பதிலாக, ஒரே நிறத்திலான கவர்ச்சியற்ற, விலை குறைந்த, மார்க்கத்தோடு ஒட்டிய ‘ஹபாயா’வைவீட்டிலிருந்து வெளிச்செல்லும் போது அணியப் பழகிக் கொண்டனர். இதுவே யதார்த்தம், மாறாக அரேபிய முஸ்லிம்கள் எவரும் எம்மீது கட்டாயப்படுத்தி ஒருபோதும் இதனைத் திணிக்கவில்லை.

கறுப்பு ஹபாயாவுக்குள், வெடிகுண்டுகள், கள்வர்கள் வருவர் என்ற அச்சமும் பரப்பப்பட்டுள்ளது. இந்த நாட்டிலும், உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மாற்றுடைகளிலும், பல்வேறு தோற்றங்களிலும் வந்த பலர் நூற்றுக் கணக்கான குண்டு வெடிப்புக்களையும், கொள்ளைகளையும், கொலைகளையும் செய்து அழிவுகள் தந்த வரலாறுகள் பல நூற்றுக்கணக்கில் அல்ல ஆயிரக் கணக்கில் நம்முன் தெளிவாக இருந்து கொண்டிருக்கும்போது, அத்தகையோரில் ஒரு சிலர் ஒழுக்கம் சார்ந்த ‘ஹபாயா’ வையும் தமது தீய கைங்கரியங்களுக்குப் பயன்படுத்தினர் என்பதற்காக அனைத்து ஹபாயா அணிபவர்களையும் சந்தேகிப்பது அபத்தம்.

article-2190312-0144307B00001005-499_634x400

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஒருகோடி ரூபா துணிகர கொள்ளைச் சம்பவத்தைப் பொலிஸார் போன்று சீருடை அணிந்து வந்தோர்களே நடத்தினர் என்பதற்காகத் தெருவில் நமக்கருகில் கடமைபுரியும் அனைத்துப் பொலிஸாரையும் சந்தேகிக்க முடியுமா? அதுபோல பிரதமர் அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க காவி உடைக்குள் துப்பாக்கியுடன் வந்த ஒருவரால் சுடப்பட்டார் என்பதற்காக காவி உடை தரித்த அனைவரையும் சந்தேகிக்க முடியுமா?

‘ஹபாயா’ ஆடை கறுப்பு நிறமாகத்தான் இருக்கவேண்டும் என விதி இல்லை. அது விரும்பிய நிறங்களில் அணியப்படலாம். எனினும் மாற்று மத சகோதரர்கள் மத்தியில் வாழும் நாம் வீதிகளில், பொது இடங்களில் அவர்கள் நம்மைக் கண்டு சந்தேகிக்கும்விதமாகவோ, ஹபாயாவுக்குள் இருக்கின்றோம் என்பதற்காகக் கையடக்கத் தொலைப்பேசிகளில் சிரித்து கதைத்துக்கொண்டு ஊர்வலம் வருவதையும் தவிர்க்க வேண்டும். சகோதரிகள் நண்பியோடு, சகோதரிகளோடுதான் கதைக்கின்றீர்கள் என்றபோதிலும் பார்க்கும் கண்கள் உங்களைச் சந்தேகிக்கின்றன. கதைக்கின்றன, அது மட்டுமன்றி ஒழுக்கக் குறைவாகவும் பார்க்கின்றன. இது புனித உடைக்கு நீங்களே அகௌரவத்தை ஏற்படுத்தியதாக அமைகின்றது அல்லவா

நமது கடந்த தலைமுறையினரான தாய்மாரும், உறவு முறையான பெண்களும் தென்னிந்திய உற்பத்திகளான தடித்த நூலிலான ‘கம்பாயம்’ சேலை உடுத்தினர். இது பெரும்பாலும் சற்று முதிய பெண்களின் ஆடை, அப்போதைய திருமணமானோரும், இளசுகளும் ‘சீத்தை’ ‘வொயில்’ முதலான ஆறு முள புடைவைகளை உடுத்தினர். இப்போது வொயில் சாரி முதலானவை உடுக்கின்றனர். இளசுகள் பெரும்பாலும் ஹபாயா அணிகின்றனர்.

முன்னைய காலங்களில் நமது பெண்கள் பெரும்பாலும் வெளிப்பயணம் போவதென்றால் அவர்கள் பயணிக்கும் மாட்டு வண்டி (பக்கிக் கரத்தை) யின் வீதி தெரியும் முன்பின் பக்கங்களையும், மோட்டார் வண்டியின் கண்ணாடிப் பகுதிகனையும் புடைவையால் மறைத்து வெளி ஆண்களின் பார்வையினின்றும் தங்களைப் பேணிக்கொள்வர். நடந்து பயணிக்கையில் சாரியின் தலை முக்காட்டின் முகத்துக்கு முன்னாலான இரு கரைகளையும் சேர்த்துக் கண்கள் மறையாமல் பிடித்து வீதி ஓரமாகத் தலைகுனிந்து மிக ஒழுக்கமாகப் பயணிப்பர்.

இப்போது மாட்;டு வண்டிப் பயணம் இல்லை. மோட்டார் வண்டியும் புடைவையால் மறக்கப்படுவதில்லை. எனினும் பெண்கள் சாரி உடுத்தித் தலை முதல் இடுப்புக்குப் பணிவாகவும், சிலர் முழுதான ஹபாயா அணிந்தும் பயணிக்கின்றனர். இந்த உடைகள் அனைத்தும் மார்க்க விதிமுறைக்கிணங்க அந்நிய ஆண்களின் பார்வையினின்றும், உடல் அழகை வெளிக்காட்டாதிருக்கவுமான சில நடைமுறைகளேயன்றி, சிலர் கூறுவது போன்று வீண் கற்பனைகள் சார்ந்ததல்ல. சிலர் விருப்பத்தின் பேரில் முகத்தை மூடுவர், சிலர் மூடுவதில்லை.

இப்போது எமது முஸ்லிம் மாணவியர் அணியும் சீருடையும் கூட ‘பஞ்சாபிட்ரஸ்’ என்றே ஆரம்ப காலத்தில் அழைக்கப்பட்டது. இவ்வுடை அசலில் வட இந்தியாவில் வதியும் இந்து சமயப் பெண்களும், முஸ்லிம் பெண்களும் அணியும் ஆடையே. இது நமது இஸ்லாம் கூறும் ஒழுக்கம் சார்ந்த உடையாகையால் நாமும் நமது மாணவியர்க்கு அணிவிக்கின்றோம். இது முஸ்லிம்களின் உடை வருகை என தப்பபிப்பிராயம் கொண்ட மாற்று மதச் சகோதரர்கள் இன்னும் தமது மாணவியர்க்கு அழகை மறைக்கும் இந்துக்களின் வருகையிலான இந்த ஒழுக்க ஆடையை இங்கு அங்கீகரிக்காதிருப்பது கவலைக்குரியதே.

சம்பூரணமான வாழ்க்கைத் திட்டமான இஸ்லாம் தமது ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம்பூரணமான ஆடைகளையே அங்கீகரித்துள்ளது, அப்படியெனில் அது உச்சி முதல் உள்ளங்கால் வரை அணிய ஆண்களையும் பெண்களையும் பணிக்கின்றது. இதன் அடிப்படையிலேயே பெண்கள் மேற்சொன்ன விதமாகவும், ஆண்கள் தொப்பி, பாதணியுடன் கூடிய முழு ஆடைகளை அணிந்து உடையிலும் சம்பூரணத்தைக் காட் டுகின்றனர். சர்வதேசத்திலும் இதே நிலையே.

இதில் மார்க்கத்தைத் தவிர வேறு எந்த நாட்டினர்க்கும் பணிப்புரை விடுக்க முடியாது. ஆனால் எந்த நாட்டினரோ, அல்லது எந்த ஓர் இனத்தினரோ அணியும் உடை அது இஸ்லாம் கூறும் ஒழுக்க வரைமுறைகளுடன் காணப்பட்டால் அதனை முஸ்லிம்கள் அணிவதிலும் எந்தத் தவறும் இருக்கமுடியாது. இதில் மார்க்கமும், சுயாதீனமுமே தொழில் பட்டுள்ளது. ஆனால், ஆங்கிலேயர் ஆட்சி புரிந்த நாடுகளில் எல்லாம் அந்தந்த நாடுகளின் காலநிலை, கலாசாரம் எவற்றையும் பொருட்படுத்தாது தங்கள் நாட்டின் குளிர் காலநிலைக்குப் பொருத்தமான ட்டை, ஷூ, கழுத்துப்பட்டி, தடித்த சப்பாத்து கோட், லோங்ஸ் என்பவற்றை அலுவலகங்களில் கட்டாயமாகத் திணித்தனர். இவை வெப்பக் காலநிலை நாடான இலங்கைக்குப் பொருத்தமில்லாத உடை.

இவை இலங்கையின் பல்லினக் கலாசாரங்களையுடையோர்களுக்கும் பொருந்தாதன. எனினும் சுதந்திரம் கிடைத்து இந்நாள் வரையும் அணிகிறோம். இதனை முஸ்லிம்களின் உடைகளை விமரிசிப்போர் ஏன் இதுவரை கண்டு கொள்ளவில்லை? ஜனாதிபதியும் இன்னும் பல உயர் அதிகாரிகளும், உலக மட்டத்திலான ஆடை என்று வர்ணிக்கப்பட்ட இவ்வாடையினை தவிர்த்து தேசபக்தியுடன் தனது கலாசாரத்துக்குப் பொருந்திய ஆடையுடன் உலகவலம் வருவதையிட்டு நாம் பெருமைப்படலாம்.

ஆங்கிலயர் திணித்த உடையின் தாக்கம் எந்த மட்டு நம்மைப் பீடித்துள்ளதென்றால் உயர் அதிகாரிகள், உயர் நிலையானோர் பலர் இவ்வாடையைக் கௌரவத்துக்காக அணியும் அதேவேளை, சாதாரண வர்த்தக நிறுவனங்கள் உற்பத்தியாளர்கள் பலரும் தங்கள் நிறுவன உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதற்கு படித்த நம் வாலிபர் பலரிடம் கடும் வெப்பக் காலநிலை மத்தியிலும் கழுத்துப்பட்டி சப்பாத்து அணிந்த நிலையில் வியர்க்க விருவிருத்து கரங்களில் உற்பத்திப் பொருட் களைச் சுமந்து கடைத்தெரு, குடியிருப்புக்களில் வலம்வர விட்டிருக்கும் காட்சி மிகப்பரிதாபம், பரிதாபம்.

இவைமட்டுமல்ல இலங்கையின் கலாசாரத்தை, மதங்களை அவமதிக்கும் விதமான மேற்கத்திய நாட்டவர் புகுத்திய அரை நிர்வாண ஆடைகளுடன் அரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெட்கமின்றி புகழுக்காகவும், பொருளுக்காகவும் போட்டிபோட்டுக் காட்சி தரும் நம்நாட்டு இளைஞர், யுவதியரை, ஒழுக்கமுள்ள உடைகள்அணியும் முஸ்லிம்களையும், அவர்களது சமயம் சார்ந்த நாடுகளையும் விமரிசிப்போர் மேற்சொன்ன அசிங்கங்களையும் அதனை பரப்பும் நாடுகளையும் ஏன் விமரிசிப்பதிப்பதில்லை? கண்டிப்பதில்லை? கண்டுகொள்வதில்லை? ஏனெனில் அதே மேற்கத்திய ரின் தூண்டுதலின் பேரிலேயே இவர்கள் செயல்படுவதால் அதனைக்கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதுவே உண்மை.

(எம்.ஐ.எம். அப்துல் லத்தீப்)

 

நன்றி: நவமனி

No comments