மனித நேய மார்க்கத்தின் மீது மனிதாபிமானமற்ற விமர்சனங்கள்…
இவ்வுலகில் நபி ஆதம் (அலை) அவர்கள் முதல் இன்று வரை உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் இஸ்லாம் மார்க்கம், அல்லாஹ்வுடையதாகும். இப்பிரபஞ்சத்தின் கர்த்தாவான அல்லாஹ்வினால் அவனது சிருஷ்டிகளுக்கு வழங்கப்பட்ட வாழ்க்கை வழி காட்டியே இப்புனித இஸ்லாம் மார்க்கமாகும். காலத்துக்குக் காலம் பாரில் வாழும் சமூகத்துக்கு அவனது தூதர்கள் மூலம் வாழ்ந்து காண்பிக்கப்பட்ட சத்திய மார்க்கமே இந்த இஸ்லாமாகும்.
இந்த வகையில், அவனது இறுதித் தூதரினால் மறுமை நாள் வரைக்கும் நிலைத்து நிற்கும் வகையில் எவ்வித குறைபாடுகளும் இன்றி பூரணப்படுத்தப்பட்ட வாழ்க்கைத் திட்டமே இப்பொழுது எங்கள் கையில் இருக்கும் அல்குர்ஆனும் ஸுன்னாவும் ஆகும். எமது நாட்டில் சில இனவாதம் பேசும் விஷமிகளினால் இன்று இப்புனித மார்க்கம் ஊடகங்களுகள் வாயிலாக கொச்சைப்படுத்தப்படுகின்றது.தலைகால் தெரியாமல் கொடூரமான முறையில் விமர்சிக்கின்ற இப்புனித மார்க்கத்தைப் பற்றி அவர்களுக்கு என்னதான் தெரியும்.
உலகம் இன்று தேடுகின்ற மனித நேயத்தை வழங்குகின்ற மார்க்கம் இந்த இஸ்லாம் தான் என்பதை இவ்விஷமிகளுக்கு எடுத்துரைப்போம். இஸ்லாம் முன்வைக்கின்ற வாழ்க்கைத் திட்டத்தில் பொதிந்துள்ள மனிதத்துவப் பண்புகள் சிலவற்றை இங்கே நினைவு படுத்துகின்றேன். இந்த விஷமிகள் விளையாட்டுக்கு எடுத்துக் கொண்டுள்ள சத்திய தீனின் நியாயங்களை உலகிற்கு எடுத்துக் காட்ட வேண்டிய பொறுப்பும் உணர்வும் கலிமா சொன்ன ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்கும்.
01. பிற மனிதர்களுடனான உறவு
நபி (ஸல்) அவர்கள் தனது இறுதி ஹஜ் பிரசங்கத்தின் போது முழு மனித சமூகத்துக்கும் கூறிய அழகிய உபதேசத்தின் சாரம்சம் இதுவாகும். ஒவ்வொரு மனிதனுக்கும் மற்ற மனிதனின் உயிர், பொருள், கற்பு என்பன ஹரமாக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் மீதும் கடமை என்று இப்பகிரங்கப் பிரசங்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
02. பிற மதங்களுடனான தொடர்பு
மற்ற சமயத்தவர்களுக்கு கண்ணியம் அளிக்குமாறு இஸ்லாம் கற்றுத் தருகின்றது. அடுத்த மதத்தவர்களுடைய கடவுள்களை ஏச வேண்டாம். உங்களுக்கு உங்கள் மார்க்கம். அவர்களுக்கு அவர்களது மார்க்கம் என்ற உண்மையை அல்குர்ஆன் எடுத்தியம்புகின்றது. வேதம் கொடுக்கப்பட்ட மக்களோடு பண்பாடான அழகிய முறையில் அன்றி விவாதிக்காதீர்கள் என அல்குர்ஆன் கட்டளையிடுகின்றது.
03. ஏனைய உயிரினங்களுடனான நடத்தை
உயிரினங்களுக்கு தீங்கிழைப்பதை மிக வன்மையாகக் கண்டிக்கும் மார்க்கம் இஸ்லாமாகும். சாதாரணமான ஒரு மிருகத்துக்கு துன்புறுத்துவது மறு உலக வாழ்க்கையின் தோல்விக்கு காரணமாக அமைந்து விடும் என எச்சரிக்கின்றது. பூனையொன்றைக் கட்டி வைத்து துன்பப்படுத்திய ஒரு பெண் நரகத்தில் நுழைந்தாள் என்ற நபிமொழி மிருகங்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள பாதுகாப்பை எடுத்துக்காட்டுகின்றது. முஸ்லிம்கள் மிருக வதை செய்பவர்கள் அல்லர் என்ற உண்மையை இஸ்லாம் முன்வைக்கின்றது.
மிருகங்களின் முகத்தில் அடிப்பதையும், அடையாளமிடுவதையும் நபி (ஸல்) அவர்கள் சபித்திருக்கிறார்கள். மிருகங்களை பரஸ்பரம் சண்டையிட வைப்பதனையும் தடுத்துள்ளார்கள்.
04. அநீதி இழைத்தல் தவறு
எந்தவொரு மனிதனும் அநீதி இழைக்கக்கூடாது என்பதில் இஸ்லாம் தெளிவாகவுள்ளது. சட்டம் அனைவருக்கும் சமமானது. அதில் ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு பார்க்கக்கூடாது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனது மகள் பாத்திமா திருடியதாக கண்டறியப்பட்டால் அவரது கையையும் துண்டிப்பேன் என்பதாக, இஸ்லாம் முன்வைக்கும் நீதியின் சிறப்பு இங்குதான் விளங்குகின்றது.
05. சூழலுடன் அன்பு வைத்தல்
சூழலை அழகாக வைத்திருப்பதற்கும் அதனுடன் அன்பாக பழக வேண்டம் என்பதனையும் இஸ்லாம் எடுத்துக் கூறுகின்றது. மறுமை நாள் அடுத்த கனம் வரும் என நீங்கள் அறிந்திருந்தாலும் உங்கள் கையில் ஒரு விதை இருந்தால் அதை நடுங்கள் என மனித சமூகத்துக்கு வழிகாட்டலை வழங்குகின்றது.
போராட்ட வீரர்களுக்கு உபதேசமாகவும் நபியவர்கள் கூறிய விடயம் இதன் முக்கியத்துவத்தை வரையறுக்கிறது. யுத்த தர்மத்தில் இஸ்லாம் முன்வைக்கும் பிரதானமான விடயங்களுள் ஒன்று கனிதரும் மரங்களையோ, பிரயோசனமான மரங்களையோ வீணாக வெட்ட வேண்டாம் என்பதாகும்.
06. அயலவர்களுடனான பழக்கம்
அண்டை அயலவர்களுடன் ஒரு முஸ்லிமின் தொடர்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி இஸ்லாம் வழிகாட்டியுள்ளது. உங்களுடைய வீட்டில் கறி சமைப்பதாயின் அதில் சற்று நீரை ஊற்றிவிடுங்கள். ஏனெனில், அடுத்த வீட்டுக்கும் அதில் பங்கு வைக்க வேண்டும் என இஸ்லாம் உபதேசிக்கின்றது.
அடுத்த வீட்டாருக்கு துன்பம் விளைவிப்பது பாவம் என்பதனை பல நபி மொழிகள் சுட்டிக்காட்டியுள்ளன. அடுத்த வீட்டானுக்கு நோவினை செய்பவன் முஸ்லிமல்லன் என்பதனை நபி மொழிகள் குறிப்பிடுகின்றது.
அயல் வீட்டாரின் உரிமைகள் தொடர்பாக ஜிப்ரீல் (அலை) அவர்கள் எனக்கு தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தார். நான் அவனுக்கு எனது சொத்தில் பங்கு வைக்க வேண்டிவரும் என நினைக்குமளவுக்கு வானவரின் உபதேசம் காணப்பட்டது என நபியவர்கள் கூறியுள்ள செய்தி இதன் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்துகின்றது.
07. மனிதனுக்கு உதவுதல்
பிற மனிதர்களுக்கு எவ்வித பிரதி உபகாரமும் எதிர்பாராமல் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என இஸ்லாம் தூண்டுகின்றது. ஒரு மனிதன் அடுத்த மனிதனுக்கு உதவும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதவிக் கொண்டிருக்கின்றான் என்ற மனித நேய சிந்தனையை நபி (ஸல்) அவர்கள் முன்வைத்தார்கள்.
ஒரு மனிதனுடைய குறையை மறைக்கின்ற போது அல்லாஹ் மறுமையில் அவனது குறையை மறைக்கின்றான் என மனிதன் மனிதனுக்குப் புரியும் பேருதவியைப் பற்றி நபியவர்கள் குறிப்பிட்டார்கள்.
08. எதிரிக்கும் கண்ணியமளித்தல்
மனிதன் தவறு செய்யக் கூடியவன். எனவே தவறுகளை மன்னித்து விடுபவன்தான் இறைவனுக்கு மிகவும் நெருக்கமானவன். நபி (ஸல்) அவர்கள் சகல அதிகாரங்களும் கையில் வந்தபோதும் கூட மக்கா வெற்றியின் போது அனைவரையும் மன்னித்து விட்ட பண்பாட்டை இஸ்லாம் மனிதர்களிடத்தில் விதைக்கின்றது. ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் எதிரியாக செயற்பட்ட ஒரு யூதனின் பிரேதம் எடுத்துச் செல்லப்பட்ட போது எழுந்து நின்று மரியாதை செய்துள்ளார்கள்.
09. தெளிவான பெற்றோர் பிள்ளை உறவுமுறை
இஸ்லாம் சமூகத்தின் அடிப்படை உறுப்பினர்களான பெற்றோர், பிள்ளைகள் விடயத்தில் அதிக கவனம் செலுத்தி வழிகாட்டலை வழங்கியுள்ளது. பிள்ளைகள் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் பெற்றோர் பிள்ளைகளுக்கு புரிய வேண்டிய கடமைகளையும் இஸ்லாம் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. இதனை வெறுமனே உபதேசமாக மட்டுமன்றி ஆன்மீக விளக்கமாகவும் அமைந்துள்ளது. இன்று குடும்ப உறவில் உள்ள அசிங்கமான பிரச்சினைகளுக்கு தீர்வு இஸ்லாமிய குடும்ப வாழ்க்கை முறையில்தான் உள்ளது என்ற உண்மையை இது தொடர்பாக இஸ்லாம் முன்வைத்துள்ள விரிவான விளக்கத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.
10. ஆண், பெண் உறவு
சமூகத்தின் தவிர்க்க முடியாத இரு பாத்திரங்களே இவர்கள். இவர்களின் சீரமைப்பு தான் சமூக சீராக்கம். எனவே, இஸ்லாம் இவர்களுக்கிடையிலான உறவை துள்ளியமாக எடுத்துரைத்துள்ளது.
படைப்பிலுள்ள பலவீனங்களை அறிந்த படைத்த இறைவனின் வழிகாட்டல் நிச்சயம் பயனுள்ளதாய் இருக்கும் என்பதில் இரு கருத்துக்கள் இருக்க மாட்டாது.
ஆண், பெண் இருபாலருக்கும் கற்பு உள்ளது. இதனை ஒருவருக்கொருவர் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாலார் அடுத்த பாலாருடைய கண்ணியத்தையும் கௌரவத்தையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்ற தெளிவான வழிகாட்டலை இப் புனித மார்க்கம் முன்வைத்துள்ளது.
ஒரு ஆண், அடுத்த பெண் சமூகத்தின் மீது செலுத்துவதற்கு கடமைப்பட்டுள்ள ஒரு மனிதத்துவப் பண்பாக எல்லா சமூகத்தவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று இருக்கின்றது. அதுதான் பெண்களின் மானத்துக்கும் கற்புக்கும் பாதுகாப்பாக இருப்பது. இந்தப் பண்பை ஒவ்வொரு ஆணின் மூலமாக பெண்ணுக்கும் ஒவ்வொரு பெண்ணின் மூலமாக ஆணுக்கும் வழங்கச் செய்வதற்கான அடிப்படை வழிகாட்டலை இஸ்லாம் முன்வைக்கிறது.
ஆணும் பெண்ணும் தத்தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். விபச்சாரத்துக்கு நெருங்க வேண்டாம் என்ற கட்டளை. விபச்சாரத்தை தூண்டும் காட்சிகளைப் பார்ப்பது கண்ணினால் செய்யும் விபச்சாரம். ஆபாசமான வார்த்தைகளை பேசுவதும் கேட்பதும் வாயினாவும் காதினாலும் செய்யும் விபச்சாரம் என தீய பண்புகளை அடையாளப்படுத்தியுள்ளமை. இவற்றிலிருந்து தவிர்ந்து வாழ்வது ஆன்மீக வாழ்க்கை என்ற உயரிய அந்தஸ்த்தை வழங்கியுள்ளமை.
ஆண், பெண்களிடையே மஹ்ரமி, அஜ்னபி என்ற பாகுபாட்டை ஏற்படுத்தியுள்ளமை போன்றன மனிதத்துவப் பண்பை ஆண், பெண் இருபாலரிடையும் பாதுகாப்பதற்காக இஸ்லாம் வழங்கியுள்ள வழிகாட்டல்களும் அடிப்படைகளுமாகும்.
எனவே, இவ்வுலகில் உள்ள மானிட சமூதாயத்துக்கு வழிகாட்டத் தகுதியான அல்லாஹ்வும், இறை கட்டளைகளை வாழ்ந்து காட்டிய தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் எவ்வளவு சிரேஷ்டமானவர்கள். இது இவ்வாறிருக்க, இன்று எமது நாட்டில் காழ்ப்புணர்ச்சியுடன் இந்த புனித மார்க்கத்தையும் அதன் கர்த்தாவையும், தூதரையும், வழிகாட்டல்களையும் கேலி செய்யவும், விமர்சிக்கவும் இந்தக் கும்பலுக்கு என்ன அருகதையிருக்கின்றது.
மனிதத்துவமும், மனித நேயமும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற காலத்தில், அந்த அழிவிலிருந்து மக்களை விடுவிப்பதற்கு வழிகாட்டுவதை விட்டுவிட்டு மனிதனை மனிதனாக வாழ வழிகாட்டலை வழங்கிக் கொண்டிருக்கும் ஒரு புனிதமான மார்க்கத்தை கையில் தூக்கிப் பிடித்து விமர்சிப்பது எவ்வளவு அபத்தமானது. இதற்காக இனப் பலத்தையும், அரசியல் பலத்தையும் பயன்படுத்துவதனை உள்ளத்தில் கடுகளவேனும் மனித நேயம் உள்ள எந்த மனிதரும் அங்கீகரிக்க மாட்டார்கள்.
இந்த விமர்சகர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் விளையாட்டுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் கருப்பொருள் வேறு ஒன்றுமல்ல. சர்வ வல்லமையும் பொருந்திய பிரபஞ்ச படைப்பாளன் அல்லாஹ்வின் மார்க்கத்தையேயாகும்.
(அபூஷிபா)
No comments