Breaking News

ஷரீஆவை விமர்சிக்க எவருக்கும் அருகதை இல்லை…

599695_195773853879731_492764379_nசட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் அனுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். ஆரம்பக் கல்வியை அனுராதபுர தனது கிராம பாடசாலையிலும் உயர்தர கல்வியை மாகோ மத்திய கல்லூரியிலும் பயின்றுள்ளார். களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான அவர் மனித உரிமைகள் (2009) அதிகார பரவல் மற்றும் மாகாண சபைகள் (2009) அரச காணிகள் (2010) முஸ்லிம் நீத்திய (2013) போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார். முன்னணி சிங்களப் பத்திரிகைகளில் இவர் தொடர்ச்சியாக அரசியல் கட்டுரைகளை எழுதி வருகின்றார்.

சமகாலத்தில் முஸ்லிம் சமூகமும் இஸ்லாமிய சட்டமும் பாரிய சவால்களுக்கும் பல விமர்சனங்களுக்கும் உட்பட்டு வருகின்ற நிலையில் இஸ்லாமிய சட்டம் தொடர்பில் இவர் வெளியிட்டுள்ள நூலானது பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் குறித்த நூலை வெளியிடுவதற்கான காரணம் தொடர்பிலும் சமகால முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்த அவரது பார்வையை அறியும் நோக்கிலும் விடிவெள்ளி மேற்கொண்ட நேர்காணலை தருகிறோம்.

நேர்காணல் எம்.ஜே.பிஸ்ரின் முஹம்மத்

விடிவெள்ளி:- நீங்கள் சிங்கள இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட ‘‘முஸ்லிம் நீத்திய (முஸ்லிம் சட்டம்) என்ற நூலை எழுத உங்களை தூண்டிய காரணம் என்ன?

கருணாரத்னஹேரத்:- சட்டத்தரணி என்ற வகையில் மக்களுக்கு சட்டத்தைச் சொல்ல வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தேன். ரஜரட்ட எப்.எம். ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் சுமார் 25 வருடங்கள் நான் மக்களின் அன்றாட வாழ்வுடன் தொடர்புடைய சட்டங்கள் பற்றி ஒரு நிகழ்ச்சியை வானொலியில் செய்து வந்தேன். மேலும் இலங்கையின் பிரதான சிங்கள பத்திரிகைகளில் சமகால அரசியல் பற்றிய கட்டுரைகளையும் எழுதி வந்தேன்.

சட்டத்துறை சார்ந்த நூல்கள் சட்டத்தரணிகளாலும் நீதிபதிகளாலும் மாத்திரம் விளங்கிக் கொள்ளும் வகையான மொழி நடையிலேயே அமைக்கப்பட்டிருந்தன. எனவே பொதுமக்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் இலகு நடையில் இத்துறையில் அரிதாக எழுதப்பட்ட தலைப்புக்களில் நூல் எழுத வேண்டும் என்று ஆவல் கொண்டேன். எனது முதலாவது நூல் மனித உரிமைகள் பற்றியதாகவும் (2009) அதிகாரப் பரவலாக்கமும் மாகாண சபைகளும் (2009) அரச காணிகள் தொடர்பான (2011) மூன்றாவது நூலையும் எழுதினேன். எனது அடுத்த படைப்பாக தனியார் சட்டங்கள் பற்றிய ஒரு நூலை எழுத யோசித்தேன். முதலில் முஸ்லிம் தனியார் சட்டம் பற்றி தேட ஆரம்பித்தேன். அப்போதுதான் விசாலத்தை அறிந்து கொண்டேன். தொடர்ந்தும் நான் அல்குர்ஆன், சுன்னா, இஜ்மா, கியாஸ் போன்ற இஸ்லாமிய சட்ட மூலங்களை ஆழமாக படிக்க வேண்டி ஏற்பட்டது. ஆரம்பத்தில் 2 - 3 மாதங்களில் இந்த ஆய்வை முடித்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் எனது இரண்டு வருட தேடலின் பின்னரே சுமார் ஆயிரம் பக்கங்களை கொண்ட இந்த நூலை ஆக்க முடிந்தது.

விடிவெள்ளி:- இலங்கை முஸ்லிம்கள் ஏனைய சமூகத்தவர்களிடம் தமது மார்க்கம் பற்றி விளக்கியது போதாது எனக் கருதுகிறீரா? உங்கள் நூல் இந்த இடைவெளியை நிரப்பும் என எதிர்பார்க்கலாமா?

கருணாரத்னஹேரத்:- நான் எனது நூலின் முன்னுரையில் கூட முஸ்லிம்கள் மீது ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளேன். பரிசுத்த குர்ஆன் ஊடாக கூறும் விடயங்கள் மிகவும் விசேடமானவை. அதில் எந்த இடத்திலும் பிழைகள் கிடையாது. ஆனால் ஏனையோர் முஸ்லிம்கள் பற்றி பிழையான புரிதல்களை கொண்டுள்ளனர். முஸ்லிம்கள் சுயநலவாதிகள், கெட்டவர்கள் என்றே பார்க்கின்றனர்.

இந்நிலை ஏற்பட முஸ்லிம்களே காரணம். இம் மதத்தில் உள்ள விடயங்களை வெளிப்படுத்தி ஏனையோருக்கு சொல்லத் தவறி விட்டனர். முஸ்லிம்கள் தமது மதத்தை ஒழித்துக் கொண்டே பின்பற்றுகின்றனர். நாம் இந்துக் கோவிலுக்கு செல்கின்றோம், அதனை வணங்குகின்றோம், கிறிஸ்தவ மத அனுஷ்டானங்களில் கலந்து கொள்கிறோம். ஆனால் முஸ்லிம் மத ஆலயங்களுககு செல்ல முடியுமா? ஏனெனில் முஸ்லிம்கள் தமக்கான சில வேலிகளை தாமே போட்டுக் கொண்டனர். ஏனைய இனத்தவர்கள் அவர்களின் மத அனுஷ்டானங்களில் கலந்து கொள்வதில் உள்ள தவறு என்ன? ஏனைய இனத்தவரை தமது விடயங்களில் பங்கு கொள்ளத் தடுப்பதினூடாக அவர்களிடம் இஸ்லாம் பற்றிய ஒரு அச்சம் ஏற்படுகின்றது.

உதாரணமாக ஜிஹாத் என்ற சொல்லை மக்கள் யுத்தம் என்றே நினைக்கின்றனர். ஆனால் அல்குர்ஆன் ஹதீஸ் கூறுகின்றன அது ஆயுதம் கொண்டு போராடுவதல்ல உள்ளங்களோடு போராடுவது என்று. ஆனால் மக்கள் இதனை L.T.T.E. போன்ற ஒரு தீவிரவாத அமைப்பு என்றே எண்ணுகின்றனர். இவ்வாறு பல்வேறுபட்ட இஸ்லாத்தின் உண்மை நிலையை ஏனைய மதத்தினருக்கு முஸ்லிம்கள் சொல்லத் தவறிவிட்டனர் என்பதே உண்மை.

இஸ்லாத்தை பற்றி இஸ்லாமிய சட்டவியல் பற்றி கற்க விரும்பும் அறிய விரும்பும் அனைவருக்கும் எனது நூலின் செய்தி செல்ல வேண்டும். அனைவருக்கும் இந்நூலின் செய்தி சென்றடைய வேண்டும். யாராகவிருந்தாலும் இஸ்லாத்தைப் பற்றி சரியாக ஆராய்ந்து கற்று விளங்கிய பின்னர் அதனை விமர்சிக்கவோ யுத்தம் செய்யவோ செல்லுங்கள்.

விடிவெள்ளி:- இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தையும் ஏனைய சட்டங்களையும் நீங்கள் எப்படி நோக்குகின்றீர்கள்?

கருணாரத்னஹேரத்:- உலகில் அனைத்துச் சட்டங்களும் குற்றங்களைத் தடுப்பதற்கான வழி வகைகளை அடிப்படையாகக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளன.

எல்லா மதங்களும் செய்யக் கூடாதது என தடுத்த விடயங்கள் ஒன்றாகவே உள்ளது. பெரும்பாலும் எல்லா மதங்களின் சட்டங்களும் ஒன்றாகவே உள்ளது. அந்த வகையில் இஸ்லாம் ஆகுமாக்கிய விடயங்களை ஹலால் எனவும் தடுத்த விடயங்களை ஹராம் எனவும் பிரித்துக் காட்டுகின்றது.

இலங்கையில் தற்போது நடைமுறையில் இருப்பது சிங்களச் சட்டமல்ல, உரோம டச்சு சட்டமும், ஆங்கிலச் சட்டமும் இணைந்த ஒரு கலப்புச் சட்டமேயாகும். ஆனால் ஷரீஆ சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படவில்லை. முஸ்லிம்கள் எல்லாக் கால சூழலுக்கும் பொருத்தமான சட்டமாகவே இச்சட்டத்தை பார்க்கின்றனர். எனவே அதில் எந்த மாற்றமும் ஏற்படாது தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கின்றது. ஷரீஆ சட்டத்தில் குற்றங்களுக்கான தண்டனை கூறப்பட்டுள்ளது. மறுமையில் இறைவனின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் மனிதனால் கொண்டு வரப்பட்ட சட்டங்களில் காலத்திற்கு காலம் திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றது. கொண்டுவர வேண்டியும் உள்ளது. இறைவனால் அருளப்பட்ட இச்சட்டத்திற்கு திருத்தங்கள் தேவையில்லை என முஸ்லிம்கள் நினைக்கின்றனர்.

முஸ்லிமல்லாதவர்கள் தண்டனைக்கு பயந்தே குற்றத்தில் இருந்து தவிர்ந்திருக்கின்றனர். முஸ்லிம்கள் தாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் இறைவன் கண்காணிக்கிறான் என்ற நோக்கில் பார்க்கின்றனர். அதனால் அவர்கள் பாவம் செய்வதில் இருந்து இயல்பாகவே தவிர்ந்திருக்கின்றனர். எனவே சிறந்த சமூகத்திற்கு மிகப் பொருத்தமான சட்டமாக இஸ்லாமிய சட்டம் அமையும் என்று நான் எண்ணுகின்றேன்.

விடிவெள்ளி:- முஸ்லிம்களுக்கான தனியார் சட்டம் ஒன்று தேவையில்லை. அனைவரும் பொதுச் சட்டத்தின் கீழ் ஆளப்பட வேண்டும் என்று ஒரு கருத்து அண்மைக் காலமாக சில அமைப்புகளினூடாக பரப்பப்பட்டு வருகின்றது. அவ்வாறு பொதுச்சட்டத்தின் கீழ் அனைவரும் ஆளப்பட்டால் எவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டி ஏற்படும்?

கருணாரத்னஹேரத்:- பல்லின சமூகங்கள் வாழும் ஒரு நாட்டில் இப்படியான ஒரு முறையை நடைமுறைப்படுத்த முடியாது. அனைவரையும் ஒரு மதத்தை பின்பற்றுமாறு கூற முடியுமா?ஒவ்வொரு மனிதனும் மதம், கலாசாரம், பண்பாடு என்பவற்றுக்கு அடுத்த படியாகத்தான் சட்டத்தை பார்க்கின்றான். எனவே இவ்வாறான கருத்தை முன்வைப்போர் மிகப் பெரிய மடத்தனமானவர்கள் என்றுதான் கூற வேண்டும்.

ஒவ்வொரு தனி மனிதனும் தான் விரும்பும் மதத்தை, நம்பிக்கையை பின்பற்ற முடியும் என்பது சர்வதேச சட்டம் ஏற்றுக் கொண்ட ஒரு விடயம். எனவே இவ்வாறானதோர் சட்டத்தை கொண்டு வருவது எந்த வகையிலும் சாத்தியமற்ற விடயம். அதனையும் தாண்டி ஒரு நாடு அவ்வாறான சட்டத்தை கொண்டு வந்தால் அது அடிப்படை மனித உரிமைமீறலாகவே கருதப்படும்.

எனவே இப்படியான கருத்துக்களை முன் வைப்போர் மிகப் பெரிய முட்டாள்கள் என்றே நான் கருதுகின்றேன். 1770 ஆம் ஆண்டு லந்தேசி ஆட்சிக் காலத்தில்தான் முஸ்லிம்களுக்கான சட்டம் அமுலுக்கு வந்தது. அதற்கு முன்னரும் முஸ்லிம்கள் தமது மத அடிப்படையிலேயே விவாக, விவாகரத்து என அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்து வந்தனர்.

எனவே அப்படி ஒரு நிலை வந்தாலும் கூட முஸ்லிம்கள் தமது பண்பாடு, கலாசாரங்களை தொடர்ந்தும் செய்வதில் எந்தத் தடையும் வரப்போவதுமில்லை. அதனை யாராலும் தடுக்கவும் முடியாது.

விடிவெள்ளி:- தற்போது எமது நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த ஹலால் பிரச்சினை பற்றிய உங்களுடைய பார்வையென்ன?

கருணாரத்னஹேரத்:- உலக வாழ் முஸ்லிம்கள் அனைவரும் எந்த ஒரு விடயத்தை செய்யும் போதும் ஹலால் ஹராம் பேணியே தமது செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள். இந்த நடைமுறை அவர்களின் வாழ்வியலில் இணைந்து சுமார் 1400 வருடங்கள் கடந்து விட்டன. இன்று நேற்று தோன்றிய ஒரு விடயமல்ல. இலங்கையில் ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கான சட்டம் 2000 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு 2005 ஆம் ஆண்டு முதல் சுமார் 8 வருடங்கள் சான்றிதழ் வழங்கப்படுகின்றது.

ஏன் 2013 ஆம் ஆண்டு ஜனவரி வரைக்கும் யாரும் இதனை கண்டு கொள்ளவில்லை? ஹலால் என்ற இந்த பிரச்சினை நாட்டில் ஏற்பட்டுள்ளமைக்கு காரணம் சிலரது சுயநல அரசியலாகும். ஹலால் சான்றிதழ் வழங்குவதால் புத்த மதத்திற்கோ, கலாசாரத்துக்கோ ஏனைய மதங்களுக்கோ எந்தவொரு பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஹலால் சான்றிதழ் வழங்குவதற்காக பெருந்தொகை பணம் அறவிடுவதாக இன்னுமோர் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.

ஆனால் உதாரணமாக ஹலால் சான்றிதழ் பொறிக்கப்பட்ட கோழி இறைச்சியும் ஹலால் சான்றிதழ் இல்லாத கோழியும் சந்தையில் கிடைக்கின்றன. இவை இரண்டினதும் விலை ஒன்றாகவே உள்ளது. இதில் எந்த மாற்றமுமில்லை. முஸ்லிமல்லாத யாரையும் இதுவரை ஹலால் சான்றிதழ் பொறிக்கப்பட்ட பொருட்களை வாங்குமாறு யாரும் நிர்ப்பந்திக்கவுமில்லை. ஹலால் பொருட்களை உபயோகிப்பதால் யாருக்கும் எந்த நஷ்டமும் ஏற்படப் போவதுமில்லை.

ஹலால் சான்றிதழற்ற பொருட்களை எமது நாட்டில் நாம் உபயோகித்தாலும் எந்தவொரு பொருளையும் நம்மால் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது. உலகின் அனைத்து இடத்திலும் முஸ்லிம்கள் வாழ்வதால் நமக்கு எந்தப் பொருளையும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது. இலங்கையில் ஹலால் சான்றிதழ் வழங்க முடியாது என ஒரு சட்டமியற்றப்பட்டால் எமது எந்தப் பொருட்களையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது.

ஹலால் சான்றிதழ் வழங்குவதற்காக பெறப்படும் பணம் எதற்காக பயன்படுத்தப்படுகின்றது என்ற ஒரு கேள்வியையும் முன் வைக்கின்றனர். அந்தப் பணம் எதற்காக பயன்படுத்தப்பட்டால் நமக்கென்ன? எமது விகாரைகளின் அபிவிருத்திக்காக எமது பெரும் முதலாளிகள், நிறுவனங்கள் பண உதவி செய்கின்றன. அதேபோல் முஸ்லிம் அமைப்புக்களும் நிறுவனங்களும் தமது மதத் தலங்களுக்காக உதவி செய்கின்றன. ஏன் இதைப்பற்றி ஏனைய மதங்கள் கவலைப்பட வேண்டும். எந்த ஒரு அர்த்தமுமில்லாத பிரச்சினை தான் இது. இதனை முன்னெடுப்பவர்கள் தமது சுயநலத்துக்காக செய்கின்றனரா அல்லது இதன் பின்னால் என்ன அரசியல் இருக்கின்றது என்று என்னால் யூகிக்க முடியாதுள்ளது.

விடிவெள்ளி:- இந்தப் பிரச்சினைக்கு பின்னணியில் இருப்போர் யார்? இந்தப் பிரச்சினைக்கு நீங்கள் முன்வைக்கும் தீர்வு என்ன?

கருணாரத்னஹேரத்:- இதன் பின்னால் யார் இருக்கின்றனர் என்று என்னால் ஊர்ஜிதமாக கூற முடியது. எனது தனிப்பட்ட கருத்து, இதனை முன்னெடுக்கும் சிலர் பெளத்தர்கள் மத்தியில் உள்ள தமது அங்கீகாரத்தை அதிகரிக்கவோ அல்லது அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளவோ தான் முயற்சிக்கின்றனர். பெளத்த மத அடிப்படையிலோ பண்பாட்டினடிப்படையிலோ இந்தப் பிரச்சினை எந்தவொரு அர்த்தமுமற்றது.

முஸ்லிம் ஒருவர் தனது மார்க்கத்தை பின்பற்றுபவராக இருந்தால் அவர் இந்த ஹலால் பற்றி தனது உபயோகப் பொருட்களில் கட்டாயம் பார்ப்பார். எனவே அவர்களுக்கு இதனை ஒரு அங்கீகாரத்தினூடாக நம்பகத் தன்மையுடன் ஒரு சான்றிதழ் தேவை. உலக மயமாதலின் பிரதிபலிப்பால் குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு எந்தவொரு தொழிலையும் வரையறை செய்ய முடியாதுள்ளது. எனவே ஏனையோரிடம் இருந்து பெறும் பொருட்களுக்கு முஸ்லிம்கள் ஒரு அத்தாட்சியைப் பெற விரும்புகின்றார்கள். உதாரணமாக பால் மாவில் பன்றியெண்ணெய் கலப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதில் இருந்து தவிர்ந்திருக்க முஸ்லிம்கள் முயற்சிக்கின்றனர். அந்த வகையில் நாம் பார்த்தால் முஸ்லிம்களுக்கு கட்டாயம் ஹலால் சான்றிதழ் தேவை. முஸ்லிமல்லாதவர்களுக்கு இது தேவையில்லை. அத்தோடு ஹலால் சான்றிதழ் இருந்தாலோ இல்லாவிடிலோ எந்தப் பிரச்சினையுமில்லை.

நான் நினைக்கின்றேன் முஸ்லிம்களுக்கு இந்த உரிமை கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும். ஒன்று இதனை அரசு பொறுப்பேற்று செய்ய வேண்டும். ஆனால் அரசு இதனை ஒழுங்காக செய்யுமா என்ற கேள்வியும் எனக்குள் எழுகின்றது. ஆகவே முஸ்லிம்கள் இதனை தமது ஒரு அமைப்பினூடாக செய்து கொண்டு செல்வதே சாலச்சிறந்தது. இது அவர்களுக்கு எமது அரசியலமைப்பினூடாக கொடுக்கப்பட்ட உரிமை. ஒவ்வொரு தனி நபரும் அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து பகிரங்கமாகவேனும் அந்தரங்கமாகவேனும் தமது மதத்தையோ அல்லது நம்பிக்கையையோ வழிபாட்டிலும் அனுசரிப்பிலும் சாதனையிலும் போதனையிலும் வெளிக்காட்டுவதற்கான சுதந்திரம் உள்ளது. இதனை தடுக்கும் வகையில் பாராளுமன்றத்தால் யாராலும் சட்டமியற்ற முடியாது. அவ்வாறு செய்தால் அடிப்படை மனித உரிமை மீறலாகவே கருதப்படும். முஸ்லிம்கள் முன்னெடுத்துச் செல்லும் இந்த விடயம் எந்த ஒரு தவறும் கிடையாது. இதனால் எந்த ஒரு மதத்துக்கோ, கலாசாரத்துக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதே எனது தனிப்பட்ட கருத்து.

விடிவெள்ளி:- முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் பற்றிய ஒரு புதிய பிரச்சினையும் நாட்டில் தளிர் விடுகின்றது இதனை சட்டத்தின் பார்வையில் சற்று தெளிவுபடுத்துங்கள்?

கருணாரத்னஹேரத்:- முஸ்லிம்களின் ஆடைகளைப் பற்றி ஊடகங்களே பூதாகரமான பிரச்சினையாக காட்டியுள்ளது. பிக்குகள் உடலின் ஒரு பகுதியை திறந்த வகையில் ஆடை அணிகின்றனர். இவ்வாறு அவர்கள் பெண்களுக்கு முன்னால் நிற்பது கலாசார சீர்கேடு என்று கூறினால் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்வார்களா? அவர்களின் ஆடையை மாற்றுவார்களா? மேற்கத்தேய ஆடைகள் அல்லது இந்திய கலாசார ஆடையை அணிய வேண்டாம் என்று கூறினால் இலங்கை மக்கள் எந்த ஆடையை அணிவது?

மக்களுக்கு தொந்தரவளிக்கும் வண்ணம் நிர்வாணமான முறையில் அல்லாத எந்த ஆடையையும் அணிய முடியும் என்பதே சட்டத்தின் நிலைப்பாடு. எவராது நிர்வாணமாக பாதையில் சென்றால் அவரை சட்டம் தண்டிக்கும்.

முஸ்லிம் பெண்கள் பர்தா , நிகாப் அணிவதால் ஏனைய மதத்தினருக்குள்ள கஷ்டம் என்ன? அந்த ஆடையிலிருந்து துர்வாடை அல்லது ஏதேனும் சூழலைப் பாதிக்கும் இரசாயனப் பொருட்கள் வெளியேறுகின்றன என்றிருந்தால் அதனை எதிர்க்க முடியும். அதனை அவர்கள் விரும்பி அணிகின்றனர் என்றால் அதனை யாராலும் தடுக்க முடியாது.

சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் இந்த ஆடையைத் தான் அணிய வேண்டும் என்று ஒரு சட்டமுள்ளது. ஆனால் நாட்டில் எந்த ஒரு ஆணோ பெண்ணோ இந்த ஆடையைத்தான் அணிய வேண்டும் என்று எந்த சட்டமுமில்லை, எனவே தனக்கு விருப்பமான ஆடையை அணிய ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சுநந்திரமுள்ளது. இதனை யாராலும் தடுக்க முடியாது.

விடிவெள்ளி:- ரிஸானா நபீக்கின் விவகாரத்தை தொடர்ந்து இலங்கையிலும் சர்வதேச உலகிலும் ஷரீஆ சட்டம் பற்றி பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. இந்த விமர்சனங்களுடன் நீங்கள் உடன்படுகின்றீர்களா?

கருணாரத்னஹேரத்:- வெளிநாட்டிலிருந்து நமது நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணி, தொழிலாளி, தூதுவர் கூட எமது நாட்டுச் சட்டத்தை மதித்து கட்டுப்பட வேண்டும். சவூதிஅரேபிய மக்கள் பொருத்தமான சட்டமாக ஷரீஆ சட்டத்தை ஏற்று அங்கீகரித்துள்ளனர். எனவே நாம் அந்த நாட்டுக்கு சென்றால் அந்த சட்டத்திற்கு கலாசாரத்துக்கு கட்டாயம் கட்டுப்பட வேண்டும். இலங்கை போன்ற ஒரு நாட்டில் மக்கள் சட்டத்துக்கடிபணிவது என்பது குறைவாகவே உள்ளது. எமது நாட்டில் ஏழைகளுக்கும் அதிகாரமற்றவர்களுக்குமே சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் நியாயமான முறையில் சட்டம் அமுல்படுத்தப்படுவதில்லை. எமது நாட்டு ஜனாபதிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை விடுதலை செய்யும் தற்றுணிபதிகாரம் உள்ளது.

இவ்வாறான ஒரு நாட்டில் இருந்து ஷரீஆ சட்டம் மிகத் தெளிவாக பின்பற்றப்படும் மத்திய- கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு அனுப்பப்படுபவர்களிடம் அந்நாட்டுச் சட்ட திட்டங்கள் பற்றிய ஒரு தெளிவை ஏற்படுத்தியே அனுப்ப வேண்டும். வெளிநாட்டு வேலை வாய்ப்பூடாக எமது நாட்டுக்கு மிகப் பெரிய இலாபம் கிடைக்கிறது என்ற வகையில் சட்டத்தை தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமை.

ரிஸானா நபீக்கின் பிரச்சினையின் போது முன்வைக்கப்பட்ட இன்னுமொரு குற்றச்சாட்டுத்தான் ‘18 வயது சிறுமி, வயது கூடுதலாகக் காட்டப்பட்டு போலி கடவுச்சீட்டு மூலம் வெளிநாடு அனுப்பப்பட்டார்’ என்பது. ரிஸானா அக்குற்றத்தை செய்யும் போது 18 வயதுக்கு குறைவான சிறுமி என சவூதி அரசின் முன்னால் நிரூபிக்கப்பட்டிருந்தால் ஒரு போதும் ரிஸானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்காது. 18 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படக்கூடாது என்ற சர்வதேச சட்டத்திற்கு சவூதி அரசும் கட்டுப்பட்டுள்ளது.

1988 ஆம் ஆண்டு பிறந்த ரிஸானா 1982 ஆம் ஆண்டு பிறந்தவர் என போலிக் கடவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. சவூதி நீதிமன்றம் இலங்கை நாட்டினால் அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீட்டை தான் அவரது வயதை உறுதிப்படுத்த ஏற்றுக் கொண்டது. அதைவிட நியாயமான ஆதாரம் எதுவுமில்லை. 18 வயதை விட ரிஸானா வயது குறைந்தவராக இருந்தால் எமது வெளிநாட்டு வேலை வாய்ப்பு திணைக்களத்தால் அதனை நிரூபித்திருக்க முடியும். அந்தக் குற்றத்தை செய்து சுமார் 7 வருடங்களின் பின்தான் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையில் எமது அரசால் இவர் போலிக் கடவுச்சீட்டு மூலமே வெளிநாடு சென்றார் என்று நிரூபித்திருக்கலாம். ஆனால் அவ்வாறு நிரூபிக்கவில்லை. அவ்வாறு செய்தால் நாடு அவமானத்துக்குள்ளாகலாம் என்று அரசு நினைத்தது.

எமது நாடு இது விடயத்தில் வெட்கம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. எமக்கு அந்தளவு பெரியதோர் அபிமானம் வரலாற்றில் இருக்கவில்லை. L.T.T.E. அமைப்பை இங்கிலாந்து அரசு தடை செய்த ஒரு அமைப்பாக பிரகடனப்படுத்தியிருந்த காலப் பகுதியில் கருணா அம்மான் என்ற L.T.T.E. உறுப்பினரை ஒரு சிங்களப் பெயரை கொண்ட போலிக்கடவுச் சீட்டை தயார் செய்து ஜனாதிபதியும் அமைச்சர்களும் தெரிந்து கொண்டே இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் நாடு திரும்பிய பின்னரே இங்கிலாந்து தெரிந்து கொண்டது சென்றவர் L.T.T.E. உறுப்பினர் என்று. ஒரு L.T.T.E. உறுப்பினரை போலிக் கடவுச்சீட்டில் இங்கிலாந்து அனுப்பிய வரலாறுதான் எமக்கு இருக்கின்றது.

அந்த அப்பாவி ரிஸானாவின் உயிரை அரசு நினைத்திருந்தால் பாதுகாத்திருக்கலாம். இதுவரை அரசு ரிஸானா போலிக் கடவுச்சீட்டின் மூலம் தான் அனுப்பப்பட்டார் என்று எந்தவொரு உத்தியோகபூர்வ தவலையும் வெளியிடவில்லை. எனவே அவர் 18 வயதுக்கு மேற்பட்டவர் என்றே தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஷரீஆ சட்டம் அமுலில் உள்ள நாட்டில் மன்னருக்கு கூட அதனை மாற்றி அமைக்க எந்த அதிகாரமும் கிடையாது. நீதிபதிக்கு தான் விரும்பும் வகையில் தீர்ப்பு வழங்க முடியாது. பாதிக்கப்பட்ட நபர் மன்னிப்பு வழங்குவதற்கான ஒரு அனுமதி ஷரீஆ சட்டத்தில் உள்ளது. ரிஸானா விடயத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர் அனுமதித்திருந்தால் ரிஸானா தப்பித்திருக்கலாம். எனவே ஷரீஆ சட்டம் பிழையானது, தவறானது எனச் சொல்ல எமக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இந்த நாட்டு சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தொடுக்கப்பட்டு சரத் பொன்சேகா சிறையிலடைக்கப்பட்டார்.

இவ்வாறானதோர் சட்டம் உலகில் எந்த நாட்டிலும் கிடையாது. இராணுவச்சட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற எந்த ஒரு அதிகாரியையும் தண்டிப்பதற்கான இடம் சட்டத்தில் இல்லை. ஆனால் எமது ஜனாதிபதி அது சரியான சட்டம் என்று கூறினார்.

ஐ.நா. மற்றும் ஏனைய நாடுகள் கூறின, இது பிழையான சட்டம் என்று. ஆனால் நாம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. பொன்சேகாவை சிறைக்கனுப்பினோம்.

ஷிராணி பண்டாரநாயக்க தொடர்பான வழக்கும் பிழையானது என சர்வதேச நாடுகள் கூறியும் நாங்கள் அவரை வீட்டுக்கு அனுப்பினோம். உலகம் சொல்வதை நாம் கேட்கமாட்டோம்.

எப்படி ஷரீஆ சட்டம் பற்றி எம்மால் விமர்சிக்க முடியும். குறை கூற முடியும்? எங்களிடம் எல்லாப் பிழைகளையும் வைத்துக் கொண்டு பிறரை நோக்கி கை நீட்டுகின்றோம்.

விடிவெள்ளி:- சகவாழ்வு பற்றிய ஒரு பலமான சவால் தற்போது ஏற்பட்டுள்ளது. இது பற்றிய உங்கள் பார்வை?

கருணாரத்னஹேரத்:- மதங்களுக்கிடையிலான சகவாழ்வு தொடர்பான பிரச்சினை வரலாறு நெடுகிலும் தொடர்கின்றன. வரலாற்றில் இதற்கான பல உதாரணங்கள் உள்ளன.

இவற்றுக்கு சமூகங்கள் காரணமில்லை. தனிப்பட்ட சில மனிதர்களும் அரசியல் காரணிகளுமே பின்னணியில் இருந்துள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள ஹலால் என்ற பிரச்சினையும் எந்த அர்த்தமுமில்லாத அரசியல் பின்னணியுடன் கூடிய பிரச்சினையாகவே முன்னெடுக்கப்படுகின்றது.

இலங்கை வரலாற்றில் சிறந்த சகவாழ்வுக்கான உதாரணங்களும் இருந்திருக்கின்றன. அரபு வியாபாரிகள் உடரட்ட (மத்திய மலை நாட்டுப்) பகுதிகளுக்கு சென்ற போது மன்னர்கள் அங்கே பள்ளிகளை அமைக்க அனுமதி கொடுத்தனர். விகாரைகளின் மகாநாயக்க தேரர்கள் விகாரைக் காணிகளில் கூட முஸ்லிம்களுக்கு பள்ளி அமைக்க காணி கொடுத்துள்ளனர்.

13 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கோவிலை சிங்கள மன்னன் ஒருவனே கட்டிக் கொடுத்ததற்கான வரலாற்றுப் பதிவுகளும் காணப்படுகின்றன. இவ்வாறானதோர் சிறந்த சகவாழ்வு காணப்பட்ட போதிலும் காலத்திற்கு காலம் தோன்றும் சில சுயநல அரசியல்மிக்கவர்களே இவ்வாறான பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றனர்.

இப்போது தோன்றியுள்ள பிரச்சினையும் அப்படித்தான். பாருங்கள்.... இன்னும் ஓரிரு மாதங்கள் போகும் போது இப்பிரச்சினை காணாமல் போய் விடும்.

http://www.vidivelli.lk/details.php?sid=119#

No comments